நாட்டு நிலமை மிக மோசமாக உள்ளது. அக்கறைப்பற்றுக்கு அடுத்ததாக சாய்ந்தமருதும் தொற்றுக்கு அதிகம் முகம் கொடுக்கும் ஊராக மாற அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்ந்தால் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து சாய்ந்தமருது மற்றும் கல்முனைப் பிரதேசம் முடக்கப்படும் சாத்தியம் உள்ளது. இதைத் தடுக்க எங்களோடு சேர்ந்து பணியாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும். என கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கூட்டம் இன்று சாய்ந்தமருது கமு / லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் தலைமையில் இடம் பெற்ற போது அங்கு உரையாற்றிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மேலும் கிராமிய மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர்களாகிய நீங்கள் எங்களுக்கு இந்த தொற்றை கட்டுப்படுத்த உதவ வேண்டும். சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் சமீபத்தைய நாட்களில் உக்கிரமடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துதலும் எங்களையும் எமது ஊர் மக்களையும் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமை என்றார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,
நாம் நேரம் காலம் பாராது இந்த தொற்றை கட்டுப்படுத்த பணி செய்கிறோம். எங்களின் சேவைக்கு கிராம சேவை அதிகாரிகளும், பொலிஸாரும் நிறைய ஒத்துழைப்புத் தருகிறார்கள். எது எப்படியோ பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நாம் இந்த நோய்த் தொற்றில் இருந்து நமது மக்களை மீட்டெடுக்கலாம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வீதிகள், சந்திகள், மைதானங்களில் தேவையின்றிக் கூடுதல், விளையாடுதல் என்பனவற்றை தவிர்க்க வேண்டும்.
நாம் வீட்டைவிட்டு தேவை நிமிர்த்தம் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லுதல் கட்டாயமாகும். எந்த நிலையிலும் 5 அடி சமூக இடைவெளியை பேணிக் கொள்ளல் வேண்டும், கொரோனா வைரஸ்அதிகமுள்ள அபாய பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்தல் நன்று. நாங்கள் எங்களின் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு நன்றாகக் கழுவுதல் வேண்டும். வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள், போகிறவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்களாகியவர்கள் உரிய அதிகாரிகள், கிராம சேவகர்கள், சுகாதார பரிசோதகர்களுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்
முக்கிய சுகாதார நோய்த் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டதுடன் இந்தத் திட்டத்துக்காக பொலிஸ் மற்றும் முப்படையினர், சுகாதார திணைக்களத்தினைச் சேர்ந்த சேவைக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும் அறியத் தருவதுடன் இதுக்காக எல்லோரினது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றனர்.
இக்கலந்துரையாடலில் கிராம சேவை அதிகாரிகள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமிய மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விழிப்புனர்வு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment