பி.எம். கேர்ஸ் ஃபண்ட் என்ற பெயரில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது! - எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு



செய்யது இப்ராஹிம் கனி-
'பி.எம்.கேர்ஸ் ஃபண்ட்' என்ற போர்வையில் ஊழல் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி  வெளியிட்டுள்ள அறிக்கையில்;

மத்திய பாஜக அரசு தொடங்கிய பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் என்பது மத்திய அரசின் கோவிட்-19 நிவாரண நிதியா அல்லது தனியார் அறக்கட்டளையா என்பதை சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியபோது, மத்திய கார்ப்பரேட் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 28, மார்ச் 2020 தேதியிட்ட அறிக்கையில், "பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் மத்திய அரசால் நிறுவப்பட்ட நிதி" என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறாக இருந்தபோதிலும், பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டே அதன் அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் அரசால் நிர்வகிக்கப்படுவது அல்ல என்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள் பெற தகுதிப் பெற்றதுமல்ல என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. முரண்பாடான கருத்துகள் தொடர்ந்த நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து மே மாதம் 28 அன்று கார்ப்பரேட் விவகார அமைச்சகம் பி.எம்.கேர்ஸ் ஃபண்டை கம்பெனிகள் சட்டத்தோடு மார்ச் 28 முன்தேதியிட்டு இணைத்து அறிவித்தது. இடைப்பட்ட இரண்டு மாதங்களில் பி்.எம்.கேர்ஸ் ஃபண்ட் தனியார் அறக்கட்டளையாக செயல்பட்டு கார்ப்பரேட்டுகளின் நன்கொடைகளை பெருமளவில் வசூலித்துக் கொண்டது என்பது கவனத்தி்ல் கொள்ளத்தக்கது.

தகவலறியும் சட்டத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு தனியார் அறக்கட்டளையாக அறிவிக்கப்படுவதும், கார்ப்பரேட் முதலாளிகளின் நன்கொடைகளை தாராளமாகப் பெற அரசு சார்ந்த நிவாரண நிதியாக மாற்றம் பெறுவதும் அரசு அதிகாரத்தை முற்றிலுமாக தவறாகப் பயன்படுத்துவதையே காட்டுகிறது. பாஜக அரசு இத்தகைய வேலையை செய்தால் ஊழலின் கீழ் வராமல் போவதும், அதே நேரத்தில் பிறர் செய்யும்போது ஊழல் என்று கூச்சலிடுவதும் வடிகட்டிய பித்தலாட்டம் ஆகும்.

இத்தகைய பட்டப்பகல் கொள்ளையை இந்திய மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தகைய பெரிய நிதிக்கு கேள்விக் கணக்கு இல்லாமல் போனது வியப்பளிக்கிறது. இது ஒரு பொதுநிதியாக இருக்கும்போது நன்கொடை அளிக்கும் மக்கள் முன் வரவு செலவு கணக்கைக் காட்டுவது அவசியமாகிறது. இந்நிதிக்கு திரட்டப்படும் நன்கொடைகள் சட்டப்பூர்வமானதா, இல்லை சட்டப் புறம்பானதா என்பதை கணக்குக் காட்ட முடியாமல் போகும்போது ஊழல் அல்லாமல் வேறு என்ன இருக்கமுடியும். இது அமலாக்கத்துறை-சிபிஐ ரெய்டு நடத்தி விசாரிக்க இது தகுதியுள்ளதாக தெரிகிறது.

தணிக்கைக்கு உட்படுத்தாத பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் எத்தகைய திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது மக்களுக்கு தெரியாமல் போகும் நிலைதான் ஏற்படும். எவராலும் சோதிக்கப்படாத, சரிபார்க்கப்படாத, தணிக்கை செய்யப்படாத எந்த நிதியும் ஊழல் என்ற சந்தேகத்தையே உண்டாக்குவதோடு, தணிக்கைக்கு உட்படாத நிதி கருப்புப்பணம் என்பதோடு அரசியல் குதிரை பேரத்திற்கும், தேர்தல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாமல் போகும். இத்தகைய கருப்புப் பணத்தைக் கொண்டு காசுக்கு அலையும் நன்னெறித் துறந்த அரசியல்வாதிகளை விலைக்கு வாங்குவதும், மாநிலங்களில் அரசுகளைக் கவிழ்ப்பதும் தாராளமாக நடைபெறும்.

நம் பிரதமர் எப்போதும் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்படுவதால் முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் திகழ்கிறார். அவரின் உதடுகள் மக்கள் நலனைப் பற்றி பேசும்போது, அவரின் செயல்பாடுகள் அனைத்தும் தனியார் குஜராத்தி கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிகாகவே உள்ளன.
இந்திய மக்கள் அனைவருக்குமான பிரதமராக இருப்பவர் தனியார் அறக்கட்டளையைத் துவங்குவது என்பது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. நம் நாட்டின் நீதித்துறை சுயமாகச் செயல்படாத நிலையில் பாஜகவின் ஊழல்கள் கண்டும்காணாமல் விடப்படுகின்றன என்பதைக் காணமுடிகிறது.
குறைந்தபட்சம் பணமதிப்பிழப்பு, ரஃபேல், தேர்தல் பத்திரங்கள் மற்றும் பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் ஆகிய நான்கு இமாலய ஊழல்களை சார்பற்ற முறையில் விசாரித்தால் பாஜகவின் மெகா ஊழல்கள் வெட்டவெளிச்சமாகும். பாஜகவின் ஊழல்களுக்கு முன் காங்கிரசின் ஊழல்கள் ஒன்றுமில்லை என்பது புலப்படும். அனைத்து மாநிலங்களிலும் மாவட்டம்தோறும் பாஜகவின் அலுவலகங்கள் பிரமாண்டமாக கட்டப்படுவது எப்படி சாத்தியமானது என்ற கேள்வி எழுகிறது. பாஜகவின் சொத்துக்களின் மதிப்பு உ.பி மற்றும் டெல்லி மாநில பட்ஜெட்டை தாண்டும் அளவுக்கு அதிகமானது எவ்வாறு என்ற கேள்வியும் எழுகிறது.
இத்தகைய காரணங்களால் காங்கிரஸ் அறுபது ஆண்டுகளில் செய்த ஊழல்களை ஆறு ஆண்டுகளில் முறியடித்து பாஜக நாட்டை சுரண்டி சீரழிப்பது தெளிவாகிறது. சட்டங்களை மீறிய ஊழல்களை கண்டும் காணாமல் அரசு அதிகாரிகள் வேடிக்கைப் பார்ப்பது நாட்டுக்கு ஆபத்தானது. நாட்டின் பிரதமர் செய்தது போன்று மாநிலங்களின் முதல்வர்களும் இத்தகைய நிவாரண நிதிகளை உருவாக்கி கார்ப்பரேட்டுகளின் நன்கொடைகளை வாங்கத் தொடங்கினாலும் மக்கள் கண்டும் காணாதது போல் இருக்கவேண்டும் என்பது சரியாக இருக்குமா? அவ்வாறு நடக்க அனுமதித்தால் அவர்கள் மோடி அரசையும், இந்துத்துவா கொள்கையையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள் என்பதுதானே இப்போதைய உண்மை நிலை என்று தெரிவித்துள்ளார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :