திருகோணமலை – கந்தளாய், சூரியபுற பிரதேசத்தில் நேற்று விபத்துக்கு உள்ளாகிய பி.ரி-6 ரக விமானத்தின் விசாரணைகளுக்காக சீனாவை நாடவிருப்பதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
விமானப்படை ஊடகப் பேச்சாளரான குரூப் கப்டன் துசாந்த விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.
குறித்த விமானம் சீனாவைச் சேர்ந்த சைனா நெசனல் ஏரோ என்கிற விமான உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது என்றும் , அந்த வகையில் அந்த நிறுவனப் பிரதிநிதிகளை இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து பேச்சு நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமானப்படை சார்பாக சீனாவின் உதவியை நாட நினைக்கவில்லை. இருந்த போதிலும், இதுகுறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசிற்கு அமையவே அந்த முடிவை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
விசேடமாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் உதவியை இதற்காக நாடியிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை சீனக்குடா விமானப்படைத் தளத்திலிருந்து நேற்றுப் பகல் பயணத்தை ஆரம்பித்த பி.ரி-6 விமானம், வெறும் 15 நிமிடங்களில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதில் அதன் விமானி அமரகோன் என்ற 23 வயது இளைஞன் உயிரிழந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment