இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டிற்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு





ஊடகப் பிரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்-
ரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ராட்சி அமைச்சின் 2020ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க சுற்றுநிரூபத்திற்கமைய 2021ஆம் ஆண்டின் அரச பணிகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2021.01.01ஆம் திகதி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் பதிவாளர் எச். அப்துல் சத்தார் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம். எம். எம். நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும் ஒருமித்த மனதுடனும் பாதுகாப்பான எமது தாய்நாட்டினுள் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை முன்னிறுத்திய ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளைக் கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவும் நிலையான சுற்றாடல் முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை வழங்கும் பௌதீகவள அபிவிருத்தியினூடாக மக்கள் மைய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கும் நவீன தொழில்நுட்ப அறிவைப் பெற்ற மனித வளங்களை வழிநடத்தும் பரிசுத்தமான அரச நிர்வாகத்தின் ஒரு பங்காளராதல் எனும் குறிக்கோளினைக் கொண்டதாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் முதலாவது அம்சமாக உபவேந்தரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பதிவாளர் எச். அப்துல் சத்தார் அவர்களது நெறிப்படுத்தலில் அரசாங்க சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வாசிக்கப்பட்டதுடன் அனைத்து உத்தியோகத்தர்களும் குறித்த உறுதிமொழியைக் கூறி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தாய்நாட்டிற்காக தமது வாழ்வை அர்ப்பணித்த படை வீரர்களை நினைவுகூர்வதற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரீ.எம். மர்சூக் சிறப்புரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் தற்காலத்தில் உலகின் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரஸ்தாபித்து பேசியதுடன் இவ்வைரஸ் பரவல் தொடர்பாக சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டிய சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் உரை இடம்பெற்றது. உபவேந்தர் தனது உரையில் அரச சேவை உறுதிப் பிரமாணத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஊழியரும் காட்டவேண்டிய அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டியதுடன் சுபீட்சமான இலங்கையினைக் கட்டியெழுப்புவதற்கு அரச ஊழியர்களாக நாம் கைக்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தியிருந்தார்.
உபவேந்தர் தனது உரையில், தேசத்தினது முன்னேற்றத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது என்று கூறியதுடன் அவரது உரையில் ஊழியர்களின் ஒழுக்கம், சட்டத்திற்கு மதிப்பளிக்கும் தன்மை, சுற்றாடலைப் பராமரித்தல், அபிவிருத்தியின் பங்காளராதல், தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்வதன் மூலம் நாட்டிற்கு உகந்த மனித வளத்தினை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களிலும் கவனம் செலுத்தியிருந்தார்.

இறுதியாக அரச ஊழியர்கள் என்றவகையில் தமது கடமைப் பொறுப்புக்களை வினைத்திறனுடனும் பயனுறுதி வாய்ந்த, உறுதியான எண்ணத்துடன் உச்ச அளவு அர்ப்பணிப்புடன் நேர்மையாகவும் நாட்டிற்கும் மக்களுக்கும் இசைவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் உபவேந்தர் எடுத்துக்காட்டினார்.
இந்நிகழ்வில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நிதியாளர்;, நூலகர்;, பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

இறுதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட உபவேந்தர், பதிவாளர் மற்றும் ஊழியர்கள் என பலரும் தங்களது புதுவருட வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :