ஜனாஸா எரிப்பு விடயத்தை அடிப்படையாகக்கொண்டு சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு தடைகளை விதிப்பதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்கக் கூடாது!-பைஸர் முஸ்தபா ஆவேசம்



கொவிட்டினால் மரணிக்கும் ஜனாஸாவை அடக்கம் செய்ய முடியும் என சர்வதேச ரீதியில் 190 க்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதி அளித்திருக்கின்றபோது, இலங்கை அரசாங்கம் சுகாதாரத் துறையின்மீது சாட்டிவிட்டு காலம் கடத்தி வருகின்றது; ஜனாஸா எரிப்பு விடயத்தை அடிப்படையாகக்கொண்டு சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு தடைகளை விதிப்பதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்கக் கூடாது

ஐ. ஏ. காதிர் கான்-
கொவிட்டினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் உரிமையை சர்வதேச மட்டத்தில் போராட்டங்களை மேற்கொண்டு, அதனைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதில் தவறு இல்லை. ஆனால், இதனைக் காரணமாகக்கொண்டு இலங்கைக்கு சர்வதேச ரீதியில் தடைகளை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் நோக்கமாக இருக்கக்கூடாது என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட்டினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால், வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எந்தவித விஞ்ஞான ரீதியிலான ஆதாரமும் இல்லை. இதனை உலக சுகாதார அமைப்பு உட்பட, சர்வதேச ரீதியில் 190 க்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதித்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் அதனை அனுமதிக்காமல், சுகாதார துறையின் மீது சாட்டிவிட்டு காலம் கடத்தி வருகின்றது.
அத்துடன், மரணிப்பவர்களை அடக்கம் செய்வதென்பது, முஸ்லிம்களின் மத அடிப்படையிலான உரிமையாகும். அதனைப் பெற்றுக்கொள்ள எங்களால் முடிந்த முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். ஜனாஸா எரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நான்தான் ஆரம்பமாக அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்தேன். வழக்கு விசாரணையில் மூன்று பேர் கொண்ட நீதி அரசர்களில் இரண்டு பேர் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் ஒரு நீதியரசர் ஆதரவாக இருந்தார். அதனை அடிப்படையாகக்கொண்டு, தற்போது 20 நாள் சிசுவை எரித்தமை தொடர்பிலான வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றேன். அதற்கு ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது.
அதனால், இந்த விடயத்தில் ஆளும் எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும், பாராளுமன்றத்துக்கு வெளியில் இருக்கும் அரசியல் வாதிகளும், தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இதனை வைத்துக்கொண்டு யாரும் அரசியல் செய்வதாக நான் காணவில்லை. அத்துடன், சர்வதேச நாடுகளில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் எமது உரிமைகளுக்காக வேண்டி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அவர்களால் முடிந்த முயற்சிகளையும் செய்து வருகின்றனர். ஆனால், இதனைக் காரணமாகக் கொண்டு, சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு தடைகளை விதிப்பதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்கக் கூடாது.
ஏனெனில், எதிர்காலத்தில் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பு ஏற்பட்டால், அதனால் இங்கு வாழக்கூடிய முஸ்லிம்களுக்கும் அதன் பாதிப்பு ஏற்படுவதுடன், சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சமூகம் என்ற வகையில், எமக்கு அந்த அவப்பெயர் ஏற்படும். அதனால், எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். மாறாக, இலங்கையை சர்வதேச ரீதியில் சிக்க வைப்பது எமது நோக்கமாக இருக்கக் கூடாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :