ஒரு சில காதிமாரின் பிழையான நடவடிக்கைக்காக முஸ்லிம் திருமண சட்டத்தை மட்டும் அதிகாரமாக கொண்ட காதி நீதிமன்ற நடைமுறையை நீக்க முடியாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இது பற்றி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கி பெண்களின் முஸ்லிம் திருமண சட்டங்களைத்திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன. இதற்கு மு. கா தலைவர் ஹக்கீமும் ஆதரவு கொடுத்ததன் காரணமாக இக்கோரிக்கைகள் வலுப்பெற ஆரம்பித்தன. எந்தவொரு கருத்தும் மக்கள் ஆதரவு பெற்ற கட்சியின் கருத்தாக இருப்பின் அது மக்களின் கருத்தாகவே பார்க்கப்படும். அந்தவகையில் மு. கா தலைவர் ஹக்கீமின் முன்னெடுப்புக்கள் சமூகத்தின் முன்னெடுப்பாக கருதப்பட்டது.
முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் இவ்வாறு திருத்தத்துக்கு இடமளிப்பது எதிர் காலத்தில் காதி நீதிமன்றங்களையே ஒழிக்கச்செய்வதில் கொண்டு போய் முடியும் என்பதை உலமா கட்சி அன்றே எதிர்த்தது. முஸ்லிம் திருமண சட்டத்துக்கெதிரான சில முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத பெண் சட்டத்தரணிகளும் இருப்பதை கண்டோம்.
இதன் பின்னணியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கொண்டு வர வேண்டிய திருத்தங்களை ஆராய கடந்த அரசாங்கம் இரண்டு குழுக்களை நியமித்தது. இந்த இரண்டு குழுக்களின் மாறுபட்ட அறிக்கைகள் நாட்டில் பேசு பொருளான போது இவ்விரண்டு அறிக்கைகளையும் பகிரங்கமாக நிராகரித்த நாம் கண்டித்த எத்தகைய திருத்தத்துக்கும் துணை போவது காதி நீதிமன்ற நடைமுறையையே இல்லாமல் செய்வதில் முடியும் என எச்சரித்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும்.
இறைவன் உதவியால் கடந்த ஆட்சியில் இது எதுவும் நடை பெறவில்லை. இப்போது இந்த ஆட்சியில் சில இனவாதிகள் காதிநீதிமன்றத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் கடந்த கால மீதிகளே.
இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டமே இன்னமும் உள்ளது. நாட்டின் சட்டங்களான கிரிமினல், சிவில் சட்டங்கள் அனைத்து மக்களுக்கும் ஒன்றாகவே உள்ளது. திருமண சட்டம் மட்டும் கண்டிய சிங்கள சட்டம், யாழ்ப்பாண தேச வழமை சட்டம், முஸ்லிம் திருமண சட்டம் என உள்ளன. இவை திருமணத்துடன் மட்டுமே தொடர்பு பட்டதாகும். எவ்வாறு பொலிஸின் கீழ் சாம மண்டல எனும் சமாதான நீதவான் மன்றம் உள்ளதோ அது போன்ற பெரிய அதிகாரம் எதுவுமற்ற நீதிமன்றமே காதி நீதிமன்றமாகும். அதன் சட்டங்கள், நடைமுறைகள் என்பன பொதுவான நீதி மன்ற சட்டத்தின் கீழேயே செயல்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே நாடு ஒரே சட்டத்தின் கீழேயே உள்ளன.
சில காதி நீதிவான்கள் பிழையாக, ஊழல்வாதிகளாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சிலர் முன் வைக்கின்றனர். பொதுவாக எல்லா நிர்வாகத்திலும் தவறானவர்கள், ஊழல்வாதிகள் உள்ளனர். சில நீதிபதிகள், பொலிசார் மீது கூட ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பதற்காக முழு நீதி மன்ற கட்டமைப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கூற முடியாது. ஊழல்வாதிகளை, கட்டுப்படுத்தவே பொலிஸ், ஊழல், லஞ்ச தடுப்பு சட்டங்கள் உள்ளன. அவற்றில் முறையிட முடியும். கடந்த ஆட்சி முழுக்க முழுக்க ஊழல்வாதிகளாலும், மோசடிக்காரர்களாலும் நிரம்பி வழிந்ததால் மக்களுக்கு நீதி கிடைக்காததால் இவை பாரிய பிரச்சினைகளாக தெரிந்தன.
ஆனால் பொதுஜன பெரமுன தலைமையில் ஜனாதிபதி கோட்டாபய, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல்வாதிகளும், லஞ்சம் கொடுப்பவர்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும், திறமைசாலிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை காண்கிறோம். இத்தகைய சிறப்பான ஆட்சியில் காதிமார் நேர்மைக்கு மாற்றமாக செயல்பட முடியாது என்பதால் காதி நீதி மன்றம் மூலம் பெண்களுக்கு அநீதி இன்றி நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நாம் நம்புகிறோம். அந்த வகையில் முஸ்லிம் திருமண சட்டத்திலோ, காதி நீதிமன்ற நடவடிக்கைகளிலோ எத்தகைய திருத்தத்தையோ, மாற்றுதலையோ கொண்டு வர யாரும் முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
0 comments :
Post a Comment