கத்தார் நாட்டுக்கெதிரான தடை நீக்கம். அரபு கூட்டணி சாதித்தது என்ன ? ஏன் தடை விதிக்கப்பட்டது ? வெற்றிபெற்றது யார் ?



த்தார் நாட்டின்மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளும் நீக்கப்படுமென்று சவூதி அரேபியா உத்தியபூர்வமாக அறிவிப்பு செய்தது.
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் இரானுவ மத்திய கட்டளை மையம் அமைந்துள்ள நாடு கத்தார். இன்நாட்டின்மீது 2017 ஜூன் மாதம் சவூதி அரேபியா தலைமையில், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நான்கு அரபு நாடுகள் ராஜ்ய தடைகளை விதித்திருந்தன.

உலகில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி வழங்கிவருவதன் காரணமாக தீவிரவாதத்திற்கு கத்தார் அரசு துணை போகின்றதென்று பிரதானமான குற்றாச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதில் இஸ்ரேலுக்கு எதிராக போராடிவருகின்ற ஹமாஸ், ஆப்கானிஸ்தானின் தலிபான்கள், யேமனின் ஹௌதி இயக்கம், எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் அல் – ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் உற்பட உலகின் பல இயக்கங்களுக்கு கத்தார் அரசு நிதியுதவி வழங்கிவருவதாகவும்,

மற்றும் அல்-கொய்தா, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) போன்ற சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்காக நிதி திரட்டுபவர்களுக்கு எந்தவித தடையும் விதிக்காமல் தாராளமாக கத்தார் அரசு அனுமதி வழங்கிவருவது மட்டுமல்லாது குறிப்பிட்ட தீவிரவாத இயக்கங்களின் பிரமுகர்கள் கத்தாரில் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும் சவூதி அரேபியா குற்றம் சுமத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டினை அப்போது கத்தார் அரசு மறுத்திருந்தது.

பொருளாதார தடை, வான்பரப்பு மற்றும் போக்குவரத்து உற்பட அனைத்துவிதமான ராஜ்ய தடைகளையும் ஏற்படுத்தினால், வேறுவழியின்றி கத்தார் அரசு தங்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்படுமென்று குறித்த நான்கு அரபு நாடுகளும் திட்டமிட்டது.

ஆனால் ஈரான், துருக்கி, மொரோக்கோ உட்பட பல இஸ்லாமிய நாடுகள் கத்தாருக்கு உதவுவதற்கு அவசரகெதியில் இயங்கியது. இதனை தடைவிதித்த அரபு நாடுகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் இந்த தடையினால் எதிர்பார்த்த எந்தவித இலக்கினையும் அரபு நாடுகளினால் அடைந்துகொள்ள முடியவுமில்லை.

கத்தாருக்கு எதிரான அரபு கூட்டணியில் குவைத் நாட்டையும் இணைத்துக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட சவூதி அரேபியாவின் முயற்சி தோல்வியடைந்ததுடன், இறுதிவரைக்கும் கத்தாருக்கும், ஏனைய அரபு நாடுகளுக்குமிடையில் குவைத் அரசு சமரச முயற்சியில் ஈடுபட்டு இறுதியில் அது பயனளிக்கவில்லை.

கத்தார் எப்போதும் ஈரானுடன் நெருக்கமான உறவுகளை பேணிவருவதானது, ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு உடன்பாடில்லை. இவ்வாறான நிலையில் “ஈரான்மீது அமெரிக்கா குரோதத்துடன் செயல்படுகின்றது” என்று கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் அல்-தானி அப்போது விமர்சித்ததானது அமெரிக்காவை கோபமடைய செய்தது.

இதனாலேயே கத்தார்மீது தடை விதிப்பதற்கு முன்பு அரபு கூட்டணியினர் விதித்திருந்த பதின்மூன்று நிபந்தனைகளுக்கு பின்னணியில் அமெரிக்காவின் செல்வாக்கு இருந்தாக கூறப்பட்டது. .

அதுமட்டுமல்லாது, யேமன் நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் ஆரம்பத்தில் அங்கம்வகித்துவந்த கத்தார் அதிலிருந்து திடீரென விலகியதானது சவுதிக்கு அதிர்சியை ஏற்படுத்தியது.

அரபு வசந்தம் உருவானதன் பின்பு அரபு நாடுகள் ஆதரவளித்துவந்த அமெரிக்கா சார்பான கூட்டணிக்கு எதிரான அணியினருக்கு கத்தார் அரசு ஆதரவு வழங்கியது.

அந்தவகையில் லிபியாவில் 2011 இல் முகம்மர் கடாபியின் வீழ்ச்சிக்கு பின்பு கலீபா ஹப்தார் தலைமையில் இயங்கும் இயக்கத்துக்கு எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கிவருகின்ற நிலையில், இதன் எதிர் அணியினருக்கு கத்தார் உதவி செய்தது.

மேலும், எகிப்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் அதிபர் முஹம்மட் முர்சி 2013 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்பு எகிப்து மற்றும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினை (இஹ்வான்கள்) பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்த நிலையில், இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு பிரச்சார தளமாக கத்தார் அமைந்திருந்தது.

அமெரிக்காவின் அரசியலில் ஏற்பட்ட மாற்றமே கத்தார்மீதான அனைத்து தடைகளையும் சவூதி அரேபியா திடீரென விலக்கிக்கொள்வதற்கான காரணமாகும்.

ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்காதது சவூதி அரேபியாவுக்கு வருத்தமாக இருந்தாலும், டொனால்ட் ட்ரம்பின் மருமகனான ஜெரால்ட் குஷ்னருடன் சவூதி இளவரசர் முகம்மத் பின் சல்மானுக்கு இருந்த நெருக்கமான உறவினை பயன்படுத்தி அமெரிக்காவை தனது தேவைக்கு ஏற்ப சவூதி அரேபியா பயன்படுத்தியது.

ஆனால் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாக தெரிவான ஜோ பைடனின் ஆட்சியில் முன்புபோல் சவூதி அரேபியாவினால் செல்வாக்கு செலுத்துவது கடினம் என்று ஊகித்ததன் காரணமாகவும், வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் இராணுவ பலம் ஓங்கியுள்ள நிலையிலும் தான் தனிமைப்பட்டுவிட கூடாது என்றவகையில் சவூதி அரேபியா கத்தாருடன் உறவினை பலப்படுத்த முயற்சித்துள்ளது.

கத்தாருக்கெதிரான தடை நீக்கத்தில் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் வெளியே கூறப்படாவிட்டாலும், சவூதி அரேபியாவினால் தடை விதிக்கப்பட்டிருந்த அல் – ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் சவூதி அரேபியாவில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மொத்தத்தில் நான்கு ஆண்டுகள் கத்தாருக்கெதிரான தடைவிதிப்பில் அரபு கூட்டணியினர் எதனையும் சாதிக்கவில்லை. மாறாக இதில் வெற்றியடைந்தது கத்தார் ஆகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :