டொமினிக் ஜீவாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பாரிய இழப்பு.-ரவூப் ஹக்கீம்



செயல் வீரர் டொமினிக் ஜீவாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பாரிய இழப்பு என அன்னாரின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எனக்கும் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கும் நன்றாகப் பிடித்த , எங்கள் இருவரையும் எப்பொழுதுமே நேசித்த தமிழ் இலக்கிய ஆளுமையொன்றை இழந்திருக்கிறோம் என்ற வேதனை மனதை அழுத்துகிறது .

டொமினிக் ஜீவா என்கிற மல்லிகை நிறுவனர் வெறுமனே இலக்கியவாதி ஒருவர் மட்டுமல்லர், மாபெரும் போராட்ட வீரர். அச்சில் எழுத்தையும் , மேடைகளில் பேச்சையும் உயிர் மூச்சாக்கியும் ஆயுதமாக்கியும் சாதிக் கொடுமை, சமூக மேம்பாடு , இலக்கிய வளர்ச்சி , இளைஞர் எழுச்சி , சமாதான முயற்சி , இன ஒற்றுமைப் புரட்சி என மிக விசாலமான பரந்த தளத்தில் வித்தியாசமான போரை நிகழ்த்திக் கொண்டிருந்த போராளியாகவே நான் அவரைக் காண்கிறேன் .

ஐம்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு சிற்றிதழை வெற்றிகரமாக நடாத்திய சாதனை வீரனாக பலரும் அவரைப் பார்த்தாலும் , நான் அவரை நிகழ்கால இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கு , சாதனை , சமூகப் போராட்டம் என்கிற பலவற்றையும் வருங்காலச் சந்ததியினர் ஆய்வுக்கு உட்படுத்துவார்கள் என்ற நன்நோக்கில் முக்கியமான எழுத்தாக்கங்கள் அனைத்தையும் தொகுத்து ,அவற்றை ஆவணப்படுத்தி மல்லிகைப்பந்தல் புத்தகங்களாக வெளியிட்டு வைத்துள்ள பெரும் தீர்க்கதரிசியாகவே பார்க்கின்றேன் .

அவரது எழுத்துக்களையும் மீறி என்னைக் கவர்ந்தது அன்னாரின் பேச்சாற்றலாகும் . ஆவேசமாகவும் , அதற்கேற்ற ஏற்ற இறக்கங்களுடனும் , அவருக்கே உரித்தான செழுமையான தமிழில் மண்வாசனை கமகமக்க துணிச்சலுடன் ஆவேசமாக அவர்பேசிவிட்டு அமரும் போது இன்னும் சற்று நேரம் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றுதான் நினைப்பேன் .

அவரது பேச்சில் சுய புராணமே அதிகம் என எவராவது கூறுவார்களேயானால் , அதற்கான சகல தகுதிகளும் அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தன என நான் துணிந்து கூறுவேன்.

சாதியுங்கள் என ஓர் அறிகூவுதலை விடுத்து , சாதித்துக் காட்டிவிட்டு இதுதான் போராளியின் சுயரூபம் என்ற ஆத்ம விசுவாசம் எப்போதுமே அவரது உரைகளின் அடிநாதமாக ஒலித்தது . அவர் நாவால் மட்டுமல்லாது கண்கள் , கைகள் , தொண்டைத்தசைகள் , நெற்றிச்சுருக்கங்கள் என எல்லாவற்றாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது வேறு எவரிடமும் எளிதில் காணமுடியாததாகும்.

தன்னை தானே புகழுபவராக அவரை காண்கிறவர்கள் கவனிக்க மறந்து விடுகிற ஒரு 'முன் முகம் ' அவருக்கிருந்தது . அவர் தனது மல்லிகையின் அட்டைப்படங்களாக மற்றைய இலக்கியவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டதோடு நின்றுவிடாது , மற்றொரு பிரபலத்தைக் கொண்டு அப்புகைப்படத்துக்குரியவரின் சிறப்புகளை அதே மல்லிகையில் கட்டுரையாக வெளியிட்டு சிறப்பித்ததுடன் நின்றுவிடாது , வருங்கால சந்ததிக்காக " முன் முகங்கள் " என்கிற அழகிய தலைப்பில் தொகுப்பாகவும் போட்டு ஆவணப்படுத்தி , நானல்ல பெரியவன் , இதோ இருக்கிறார்களே இவர்கள்தான் ஜாம்பவான்கள் எனக் கூறும் தற் புகழ்ச்சி தாண்டிய ஒரு மாமனிதனாக டொமினிக் ஜீவா தன்னை அடையாளப்படுத்தி உள்ளார் .

நமது சகாப்தத்தில், நம்முடனேயே வாழ்ந்து விட்டு விடை பெற்றுச் செல்லும் வரலாற்று நாயகனுக்கு என் இறுதி மரியாதையைச் செலுத்துகிறேன் .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :