அம்பாறை மாவட்டம் கல்முனையில் இயங்கி வரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏ.சி. அப்துல் அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய இடமாற்றம் பெற்று வந்த இவர் கல்முனை கிட்டங்கி பிரதான வீதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய நிலையில் அங்கு அடிப்படை மனித உரிமை மீறல் சம்மந்தமாக பிரச்சினைகளை புலனாய்வு செய்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் தீர்வுகளை வழங்கியுள்ளதுடன் தற்போது கல்முனைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
தற்போது கல்முனை பிராந்தியத்தில் அரச நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடுகளை ஆணைக்குழு விசாரணை செய்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் பரிந்துரைகளை முன்வைக்கவும் 1996 ஆம் ஆண்டில் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சட்டத்திற்கு அமைவாக அதிகாரம் வழங்கப்பட்டு மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு அரச நிறுவனம் என்பதை கருத்திற் கொண்டு மக்கள் இத்தகைய முறைப்பாடுகளை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு உரிமை மீறல்கள் தொடர்பில் முறையிட விரும்புபவர்கள் பிராந்திய காரியாலய தொலைபேசி இலக்கமான 0672229728 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
இதேவேளை முன்னதாக கல்முனை பிராந்திய இணைப்பாளராகப் பணியாற்றிய அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டடக்களப்பு பிராந்திய இணைப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--
0 comments :
Post a Comment