தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அக்கறைபற்றுக்கோ அல்லது அட்டாளைச்சேனைக்கோ மட்டுமான பிரதிநிதியல்ல. அம்பாறை மாவட்ட மக்களின் பிரதிநிதி. அவரின் செயல்கள் மட்டுமல்ல அவரின் அரசியல் முன்னெடுப்புக்கள் எல்லாம் இனவாதம், பிரதேசவாத்திற்கு அப்பால் பட்டே இருக்கும். அவரது செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் காரைதீவு தவிசாளருக்கு இல்லை. இனவாதமாக தொழிற்படுவதை நிறுத்தி மக்கள் நலனில் அக்கறைகொள்ள காரைதீவு பிரதேச சபை தவிசாளர் உட்பட யாராக இருந்தாலும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளரும் தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. றாஸிக் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை மாதாந்த அமர்வில் உரையாற்றிய தவிசாளர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது அனுமதியில்லாமல் மாவடிப்பள்ளியில் வீதியமைக்க போவதாகவும். அது தொடர்பில் தனக்கு அறிவிக்கவில்லை என்றும் ஒரு லட்சம் தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டதில் சரியாக வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இவ்விடயம் தொடர்பில் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள போதே எம்.ஏ. றாஸிக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது அறிக்கையில் மேலும், மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி எனும் இரு முஸ்லிம் கிராமங்களையும் காரைதீவு எனும் வரலாற்று ஊரையும் கொண்டுள்ள காரைதீவு பிரதேச எல்லையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா சேவை செய்ய முன்வந்திருப்பதில் மகிழ்ச்சியடைந்து அவருக்கு பாராட்டு தெரிவித்து இவ்விடயத்தை அப்பிரதேசத்தின் முதல் மகனாக தவிசாளர் கையாண்டு இருக்க வேண்டும். அதை விடுத்து இவ்வாறு கருத்துரைப்பது நாகரீகமில்லை. அவரைவிட தவிசாளர் பதவியில் நீண்ட கால அனுபவத்தை கொண்ட நாங்கள் தமிழ் எம்.பிக்களின் ஊடாகவும் பல வேலைத்திட்டங்களை எங்களின் பிரதேசங்களில் செய்துள்ளோம்.
காரைதீவு பிரதேச சபை கட்டிடம், காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகள், தொழில் வாய்ப்பு என்று இதற்கு முதலிலும் ஏ.எல்.எம். அதாஉல்லா காரைதீவு மண்ணுக்கு நிறையவே செய்துள்ளார். அவரிடம் இனவாதமோ பிரதேச வாதமோ இருப்பதில்லை. இவ்வீதிகூட அரசின் 1 லட்சம் கிலோமீட்டர் காபட் வீதிகள் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. அதை அக்கரைப்பற்றில் செய்யாமல் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, காரைதீவு மக்களின் தேவையறிந்து காரைதீவு பிரதேசத்தில் செய்திருப்பது வரவேற்க கூடியது. ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை பாராளுமன்றம் அனுப்ப வாக்களித்த மக்களுக்கு அவர் சேவை செய்ய முன்வந்திருக்கும் போது அதை கேள்விக்குட்படுத்தலாகாது. அது முறையான ஒரு செயலல்ல.
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திலும் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி முஸ்லிம் இளைஞர்களை போன்று காரைதீவு இளைஞர், யுவதிகளையும் தேசிய காங்கிரஸ் அமைப்பாளர்கள் முன்மொழிந்து அந்த வேலைவாய்ப்புக்கள் தேசிய காங்கிரஸினால் வழங்கப்பட்டுள்ளது. ஊரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்ட பின்னரே பொதுவெளியில் பேச முன்வர வேண்டும். காரைதீவு தவிசாளர் மாத்திரமின்றி கல்முனையில் உள்ள சில இனவாத நோக்கம் கொண்டோருக்கும் இவ்விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவினால் நிறைய தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். பிரதேச சபை சட்டதிட்டங்கள் தெரியாது கண்களை மூடிக்கொண்டு இனவாத அறிக்கை விடும் உங்களினால் தமிழ்- முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை ஒருபோதும் சீரழிக்க முடியாது. என்றார்.
0 comments :
Post a Comment