ஒரு கிராம உத்தியோகத்தர் ஒருவரின் கடமை அல்லது அவரின் சேவை என்ன என்று தெரியுமா?



பொதுவாக அனைத்துப் பதவிகளுக்குமான கடமைகள் நியமன அமைச்சுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் இருப்பினும் கிராம உத்தியோகத்தர் பதவிக்கான கடமைகள் அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஆணைக் குழுக்களுக்கு விரிவாக்கப்பட்டதுள்ளதுடன் அதிகாரமிக்கதும் வேலைப்பழு மிக்கதுவுமாகும். இப்பதவியானது கி.மு.377 பண்டுகாபய மன்னனின் ஆட்சிக் காலத்தில் கிராமங்களை நிர்வகிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் பழமையான நீண்ட வரலாறு கொண்ட பதவியாகும்!

***சமாதான உத்தியோகத்தராக கிராம உத்தியோகத்தரின் கடமைகள்***

1979 ஆம் ஆண்டு 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைக் கோவையின்படி சமாதான உத்தியோகத்தர் என்பது பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொலிஸ் கடமைகளை புரிவதற்காக அரசாங்க அதிபரினால் எழுத்து மூலம் நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கும்.

1. பிரிவிற்குள் இடம்பெறுகின்ற குற்றங்கள் யாவற்றையும் விசாரணை செய்தல்.
2. விசாரணை அறிக்கையை பொலிஸ் நிலையத்திற்கும்¸ நீதிமன்றத்திற்கும் அனுப்புதல்.
3. வாக்கு மூலங்களை பதிவு செய்தல்.
4. நீதிமன்ற கட்டளைகளின்படி பிடியாணையுடன் கைது செய்தல்.
5. பிடியாணையின்றி கைது செய்தல்.
6. கைது செய்யப்பட்டவரை சோதித்தல்.
7. கைது செய்வதற்கு பரிவாரக் காவலர்களை ஈடுபடுத்தல்.
8. சந்தேகத்திற்கிடமான நபர்களையும் இடங்களையும் சோதித்தல். சந்தேகிக்கின்ற இடம் பூட்டப்பட்டிருப்பின் உடைத்து திறந்து சோதித்தல்.
9. தேடுதல் செய்யும் ஆணையை நிறைவேற்றுதல்.
10. நீதிமன்ற கட்டளைகளின்படி அழைப்பாணைகள் அறிவிப்புக்களை பாரப்படுத்தல்.
11. பிரிவினுள் சட்டத்தையும் அமைதியையும் பேணல்.
12. இரகசிய தகவல்களை சேகரித்தலும் உரியவர்களுக்கு தெரிவித்தலும்.
13. நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடருதல்.
14. ஒவ்வொரு வருடத்திலும் பிரிவிற்குள் இழைக்கப்பட்ட குற்றங்களை வரிசையறிக்கையாக பொலிஸ் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அனுப்புதல்.
 சமாதான உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமை இல்லை. வாக்களிப்பது தவிர வேறு எந்த விதத்திலும் அரசியல் விடயங்களில் ஈடுபட முடியாது.
***மதுவரி அதிகாரியாக கிராம உத்தியோகத்தரின் கடமைகள்***

1963 பெப்ரவரி 22 ஆம் திகதிய 13529 ஆம் இலக்க இலங்கை அரசின் வர்த்தமானி மதுவரி அறிவித்தல் 509 இன் பிரகாரம் தமது அதிகார எல்லைக்குள் மதுவரி கடமைகளை மேற்கொள்ளும் முகமாக கிராம உத்தியோகத்தர் “மதுவரி அதிகாரிகள்” ஆக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
1. மதுவரிச் சட்டத்திற்கேற்ப குற்றவாளிகளைப் பிடித்தலும் வழக்குத் தாக்கல் செய்தலும்.
2. பொலிஸார் மற்றும் மதுவரி உத்தியோகத்தர்களுக்கு உதவிகளை வழங்கல்.

***சமாதான நீதவானாக கிராம உத்தியோகத்தரின் கடமைகள்***

தனது நிருவாக பிரிவிற்குள் மாத்திரம் சமாதான நீதவான் பதவி முத்திரையை பயன்படுத்தி ஆவணங்களை உறுதிப்படுத்தல். இதுவோர் பதவிவழி நியமனமென்பதால் “சமாதான நீதவான் பதிவிலக்கம்” வழங்கப்படுவதில்லை.

***வனபரிபாலன அதிகாரியாக கிராம உத்தியோகத்தரின் கடமைகள்***

1979 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வனபரிபாலன கட்களைச் சட்டத்தின் படி கிராம உத்தியோகத்தர்கள் “வனபரிபாலன அதிகாரி” ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

1. அனுமதிக்கப்பட்ட மரங்களை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தில் விதப்புரை வழங்கல்.
2. தடைசெய்யப்பட்ட மரங்களை பாதுகாத்தல்.
3. அனுமதிக்கப்பட்ட மரங்களை வெட்டுவதற்கு சிபார்சு வழங்கல்.
4. கொண்டு செல்லப்படும் மரங்களை நிறுத்தி வைத்தல்¸ பரிசீலனை செய்தல் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளல்.
5. வீட்டுத் தளபாடங்களைக் கொண்டு செல்ல விதப்புரை வழங்கல்.
6. மரங்களை முத்திரை குத்துவதற்கான சுத்தியலை கொண்டு செல்லலும் பயண்படுத்தலும்.

***தேர்தல் கடமைகள்***

1. வருடந்தோறும் வாக்காளர் பெயர் பதிவேட்டை மீளமைத்தல்.
2. வாக்குச் சாவடிகளை அமைத்தல்¸ தளபாடங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குதல்.
3. தேர்தல் பணியாளர்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் உணவு வசதிகளை வழங்கல்.

***பதிவாளர் நாயகத் திணைக்களக் கடமைகள்***

1. பிரிவிற்குள் நிகழும் பிறப்புக்கள்¸ இறப்புக்களை அறிக்கையிடல். (07 நாட்களுக்குள்)
2. காலம் தாழ்த்திய பிறப்புக்கள்¸ இறப்புக்களை பதிவு செய்தல்.
3. காணாமற்போய் 01 வருடத்திற்கும் மேலானவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெற சிபார்சு செய்தல்.
4. தனியார் உறுதிக் காணி பெறுமதி மதிப்பீட்டு அறிக்கை வழங்கல்.

***காணிகள் தொடர்பான கடமைகள்***

1. பிரிவிற்குள் அமைந்துள்ள சகல அரச காணிகளையும் பாதுகாத்தல்.
2. உடைமையை மீளப் பெற்றுக் கொள்ளும் சட்டத்தின் கீழ அரச காணியினுள் அத்துமீறல்களை தடுத்தல்¸ விசாரணை மேற்கொள்ளல்¸ அறிக்கையிடல் மற்றும் அறிவிப்புக்களை காட்சிப்படுத்தல்.
3. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிக் கச்சேரிகளை நடாத்துதல்¸ காணி பகிர்வாளர்களை தெரிவு செய்தல்¸ அனுமதிப் பத்திரங்களை வழங்குதல்¸ அளிப்புப் பத்திரங்களை வழங்குதல்¸ காணிகளைக் கையளித்தல் ஆதனவளிப்புச் சான்றிதழ்களைத் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பிரதேச செயலாளருக்கு உதவுதலும் பரிந்துரை செய்தலும்.
4. பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் முறையாக பயன்படுத்தப் படுகின்றனவா என்பதை கண்காணித்தலும் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தலும்.
5. காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நீண்ட கால குத்தகை முறி¸ அளிப்புப் பத்திரங்கள்¸ உரிமை மாற்றக் கட்டளை¸ வருடாந்த அனுமதிப்பத்திரங்களை வழங்கல் மற்றும் வருடாந்த வாடகைப் பணத்தை அறவிடல் போன்ற நடவடிக்கைகளுக்கு பிரதேச செயலாளருக்கு உதவுதலும் பரிந்துரை செய்தலும்.
6. ஒதுக்கக் காணிகள் மற்றும் வாய்க்கால்¸ சிறு அருவிகள்¸ ஆற்றங்கரைகளைப் பாதுகாத்தல்.

***சமூக சேவைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள்***

1. பொதுசன மாதாந்த உதவிப்பணம் பெறுவதற்கான சிபார்சு. (PAMA)
2. இயற்கை அனர்த்தங்களின் போது அறிக்கை சமர்ப்பித்தல்¸ நலன்புரி நிலையங்கள் அமைத்தல் மற்றும் நிவாரணம் வழங்கல்:
 மரணச் சடங்கு நிவாரண உதவி
 சமையலறை உபகரணங்கள் மற்றும் தொழில்சார் கருவிகள் என்பவற்றிற்கான கொடுப்பனவு
 வைத்திய சிகிச்சைக்கான கொடுப்பனவு
 வீட்டு நிவாரண உதவி
 பயிரழிவு நிவாரணம்
3. அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவு¸ உபகரணங்கள்¸ கழிப்பறை வசதிகள் மற்றும் வீடமைப்பு உதவிகளை வழங்கல்.
4. காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஊனமுற்றவர்களுக்கான கொடுப்பனவு வழங்கல்.
5. சிறுநீரக நோயாளிக்கான ஜீவனோபாய உதவு தொகை வழங்கல்
6. பிணியாளர்கள் நீண்ட கால மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சிகிச்சைக்குச் செல்வதற்கான பிரயாண செலவிற்கு கொடுப்பனவு வழங்கல்.
7. முதியோர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்¸ முதியோர் கொடுப்பனவு வழங்கல்¸ முதியோர் சங்கத்தை அமைத்தல் மற்றும் பராமரிப்போரற்ற முதியோரை முதியோர் இல்லங்களிற்கு ஆற்றுப்படுத்தல்.
8. சிறுவர் நலன்புரி பணி
 சிறுவர் உரிமைகள் மீறப்படுமிடத்து விசாரணை மேற்கொள்ளலும் அறிக்கையிடலும்.
 சிறுவர் பாதுகாப்பு குழுவை அமைத்தலும் நடைமுறைப்படுத்தலும்.
 பாடசலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் விசாரணை செய்தலும் உரிய நிறுவனங்களிற்கு அறியப்படுத்தலும்.
 இரட்டையர் உதவுதொகை¸ வைத்திய உதவிகள் மற்றும் கல்வி உதவு தொகை என்பவற்றிற்கு பரிந்துரை செய்தல்.
9. உரிமை கோரப்படாத சடலங்களைப் புதைத்தல்.
10. சமுகசேவை திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்களை கண்காணித்தலும் அறிக்கையிடலும்.

***ஆட்பதிவுத் திணைக்கள கடமைகள்***

1. முதல் தடவையாக பதிவு செய்து தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்கள். (15 வயது பூர்த்தி செய்தவர்கள்);
2. காலம் பிந்திய தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள். (15 வயதை கடந்தவர்கள்);
3. தேசிய அடையாள அட்டையை புதுப்பித்து பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள்;
4. காணாமல் போன தேசிய அடையாள அட்டையின் உப பிரதி பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் ;
5. ஒரு நாள் சேவையில் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவங்கள் ;
ஆகியவற்றை வழங்கல்¸ கையேற்றல் மற்றும் பிரதேச செயலகத்தில் ஒப்படைத்தல்.

***விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளராக கிராம உத்தியோகத்தரின் கடமைகள்***

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறாத காரணத்தினால் இப்பதவிக்குரிய கடமைகளையும் கிராம உத்தியோகத்தர்களே மேற்கொள்கின்றனர்.
1. பொறுப்பாக்கப்பட்ட வயற் கண்டத்திற்கான நெற்புள்ளி இடாப்பினை தயாரித்தலும் வரைபு படுத்தலும்.
2. உரமானியம் மற்றும் ஏனைய மானியங்களுக்கான சிபார்சு வழங்கல்.
3. பயிர்ப் பாதிப்பு தொடர்பில் சேத மதிப்பீடு மேற்கொள்ளலும் அறிக்கையிடலும்.

***கணக்கெடுப்பாளராக கிராம உத்தியோகத்தரின் கடமைகள்***

10 வருடங்களுக்கொருமுறை நடைபெறுகின்ற குடிசன தொகை மதிப்பீடு நடவடிக்கையின் போது கிராம உத்தியோகத்தர்கள் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்படுகின்றார்கள்.
1. சனத்தொகை கணக்கெடுப்பு.
2. கட்டிடக் கூறுகள் கணக்கெடுப்பு.

***ஏனைய கடமைகள்***

1. பிரிவிற்குள் இடம் பெறுகின்ற முக்கிய நிகழ்வுகளில் அரசாங்க பிரதிநிதியாக கலந்துகொள்ளல்.
2. துப்பாக்கி அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்தல்.
3. வதிவிட மற்றும் நன்னடத்தை தொடர்பான சான்றிதழ்களை வழங்கல் (நேர்முகத்தேர்வு, பொலிஸ் நற்சான்றிதழ், பிணை எடுத்தல் போன்றவற்றிற்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணம்)
4. ஓய்வூதியம் பெறுவேர் தொடர்பான கடமைகள்.
5. மணல்¸ மண் மற்றும் சரளை அகழ்வுகளை போக்குவரத்து செய்வதற்கான விதப்புரை வழங்கல்.
6. மலையுடைப்பதற்கான வெடிபொருள் பெறுவதற்கு விதப்புரை வழங்கல்.
7. யானை வெடி பெறுவதற்கு விதப்புரை வழங்கல்.
8. 5000 ரூபாவிற்கு குறைந்த பெறுமானச் சான்றிதழ் வழங்கல்.
9. வருமானச் சான்றிதழ் வழங்கல்.
10. குடும்ப அங்கத்தவர் பட்டியல் மற்றும் e-GN அமைப்பு என்பவற்றை முறையாக  பேணுதல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :