கல்முனை பறக்கத்துள்ளாஹ்வின் தேடலின் சுவடு 20; கலாநிதி முகம்மது பாஸில்



தென்கிழக்கின் முக வெற்றிலையான கல்முனையில் மீன்பிடித் தொழிலுடன் நாட்டு வைத்தியத் துறையிலும் கைராசியாகத் திகழ்ந்த வெள்ளக்குட்டி மன்சூர் மற்றும் முஹம்மது இப்றாஹீம் உம்மு சல்மா தம்பதிகளின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராக 1974.02.07ஆம் திகதி முஹம்மது பாஸில் பிறந்தார்.
ஆரம்பம் முதல் உயர்தரம் வரையான தனது பாடசாலைக் கல்வியினை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் பெற்றுக் கொண்டார்.
இவரது சிறு வயதிலிருந்தே இஸ்லாமிய மார்க்க செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக செயற்பட்டதினால் இயல்பான சமூகம் தொடர்பான உந்துதல் இவருள் இளையோடிற்று.
பாடசாலைக் காலங்களில் விளையாட்டு, சாரணியம், முதலுதவி, பிராந்திய தேசியமட்ட பேச்சுப் போட்டிகள், பாடல்கள், இஸ்லாமிய மார்க்க விழுமியங்கள் போன்றவற்றில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்.
அல்மனாரில் கருத்தாழமிக்க பேச்சுக்களும், இசைப் பாட்டுக்களின் கானங்களும் பாடசாலையெங்கும் ஒலித்த அழகு காலம் அது.
1993 உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் சென்றார்.
தென்கிழக்கில் பல்கலைக்கழகம் ஒன்றின் தேவை உணர்த்தப்பட்டு தீர்வு பெற்றுக் கொண்ட காலம் அது. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முதல் வருடம் கற்ற மாணவர்களைக் கொண்டு இப்பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. புதி்ய பல்கலைக் கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுள் ஒருவராக 1995 டிசம்பரில் இவர் புதிய இலக்கை நோக்கிய பட்டப் படிப்பை தொடர்ந்து செல்கின்றார்.
தனது பல்கலைக்கழக காலங்களில் பாடவிதானங்களுடன் மேலதிகமாக கல்வி, சமூக, புறக்கீர்த்தி செயற்பாடுகளில் ஆர்வமாக செயற்பட்டவர். முஸ்லிம் மஜ்லிஸின் பிரதித் தலைவராகவும், விவாதக் குழுவின் தலைவராகவும், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றுசேர்த்து அதன் தலைவராகவும் செயற்பட்டார்.
2000 இல் அரசியல் விஞ்ஞானத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற அதே காலப்பகுதியில் அப்பல்கலைக்கழகத்திலேயே தற்காலிக பயிற்றுனராகவும் (Temporary Tutor) பின்னர் உதவி விரிவுரையாளராகவும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரையாளராக கற்பித்தலில் ஈடுபட்ட 2000 முதல் 2005 வரையான காலங்களில் அரசியல் விஞ்ஞானம், இலங்கையின் இனப்பிணக்கு, சமூக நல்லிணக்கம், மனித உரிமைகள், சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார்.
தற்காலிக உதவி விரிவுரையாளரிலிருந்து நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்ற சில மாதங்களிலேயே ஜப்பான் அரசாங்கத்தின் புலமைப் பரிசில் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து 2006 முதல் 2008 வரை ஜப்பான் மேஜி பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் மிகச் சிறந்த சித்தியைப் பெற்றார்.
இவரால் முதுமாணிப் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் இன மோதலுக்கான நோர்வே, ஜப்பான் நாடுகளின் வகிபாகம் எனும் ஆய்வு சிறந்த வரவேற்பைப் பெற்றது. கலாநிதிக் கற்கையை தொடர்வதற்கான வாய்ப்பை மேஜி பல்கலைக்கழகம் வழங்கிய போதும் குடும்ப சூழல் காரணமாக முதுமாணிப் பட்டத்துடன் நாடு திரும்பினார்.
2008 முதல் 2014 வரையான காலப்பகுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய முஹம்மட் பாஸில் அவர்கள் தனது கலாநிதிப் பட்டப்படிப்பினை உலக வங்கியின் நிதி் உதவியில் மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் 2015-2018 இல் பூர்த்தி செய்துள்ளார்.
கலாநிதிப் பட்டத்திற்கென சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதலும்,
விடுதலைப் புலிகள் வெற்றி கொள்ளப்பட்ட விதமும் தற்கால சூழலும் எனும் ஆய்வு சர்வதேச ரீதியில் நிறைந்த வரவேற்பைப் பெற்றது.
காலாநிதி பட்டத்தை நிறைவு செய்த பின்னர் மீண்டும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். இவரது கல்வித் தகைமைகளை கருத்திற் கொண்ட பல்கலைக்கழக நிருவாகம் விரிவுரையாளர் தரம் இரண்டிற்கு பதவி உயர்வு வழங்கி அடுத்த ஒரிரு தினங்களில் தரம் ஒன்றிக்கு உயர்த்தி கௌரவப்படுத்தியது.
கலாநிதி முஹம்மது பாஸில் அவர்கள் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதுடன் அது தொடர்பான டிப்ளோமா பாட நெறிகளையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைச் சூழலில் சிறுபான்மை அரசியல் தொடர்பான ஆய்வுகளில் அதிக ஈடுபாடு கொண்டு, சமகாலத்தில் இலங்கை சிறுபான்மையினர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவ்வாய்வுக் கட்டுரைகளுள் பெரும்பாலானாவை உலகத்தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. அத்துடன் பிரசித்தி பெற்ற சர்வதேச மற்றும் தேசிய ஆய்வரங்குகளிலும் இவர் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
நாடறிந்த பேச்சாளரான இவர், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல மேடை பேச்சுக்களை நிகழ்த்தி வருகிறார். குறிப்பாக இலங்கை அரசியல், இலங்கையின் இன மோதலில் முஸ்லிம்களின் நிலை, அவர்களது உரிமைகள் போன்றன குறித்து அதிக அக்கறையுடன் தனது கருதுக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் ஞபகார்த்த உரைகளை நிகழ்த்துவதில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், பல்கலைக்கழக ஆய்வு சஞ்சிகைகளுக்கு பிரதம ஆசிரியராக கடமை புரிவதுடன், பல சர்வதேச ஆய்வு சஞ்சிகைகளுக்கு திரணாய்வாளராக செயற்படுகிறார்.
இவரது ஆய்வுகளில் பல இலங்கையின் இனமோதல் சூழலில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, அரசியல் மற்றும் இருப்புத் தொடர்பாக அமைந்துள்ளன.
முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வு நிறுவனத்தின் (மெஸ்ரோ) ஆரம்பம் முதல் இன்றுவரையில் நிறைவேற்று உறுப்பினராக செயற்பட்டுவரும் இவர், அந்நிறுவனத்தினூடான அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு பங்களிப்புக்களை வழங்கி வருகின்றார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறையை நிறுவுவதற்கான முன்மொழிவுகளை பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் வழங்கி, அதனை உயர்கல்வி அமைச்சு மட்டங்களுக்கு கொண்டு சென்று அதனை நிறுவுவதற்கான பங்களிப்புக்களைச் செய்தார். தற்போதைய அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவராக இவரே செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
உலக வங்கி (World Bank), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), முஸ்லிம் இளைஞர்களின் உலக கூட்டமைப்பு (WAMY), சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC), அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் (UNHCR), துருக்கியின் TRT வேல்ட் (TRT World) போன்ற சர்வதேச நிறுவங்களின் புலமைப்பரிசில் பெற்று உலகின் பல நாடுகளில் தனது உயர் கல்வியையும், ஆய்வுகளையும் செய்துள்ளார்.
இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, துருக்கி, மாலை தீவுகள் போன்ற நாடுகளுக்கு கல்வி மற்றும் ஆய்வு நோக்கில் பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.
01. கலாநிதி அஷ்ரஃப் நினைவுப் பகிர்வுகள்
02. சர்வதேச உறவுகள்: ஓர் அறிமுகம்
03. இலங்கையின் இன மோதலில் நோர்வே மற்றும் ஜப்பான் நாடுகளின் மத்தியஸ்த முயற்சிகள்
04. இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தின் வரலாறும் காலனித்துவத்துக்கு பிந்திய மோதலும்
05. போருக்குப் பிந்திய அரசும் சமூகமும்: இலங்கையின் அனுபவங்கள்.
06. இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி.
07. அரசியலுக்கோர் அறிமுகம்
போன்றன இவரால் வெளியிடப்பட்டுள்ள நூல்களில் சிலவாகும்.
சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து கிராமியச் சூழலில் கல்வி பயின்ற முஹம்மட் பாஸில் அவர்களின் கல்விப் புலமையின் பின்னணியாக அத்துறையில் அவருக்கிருந்த ஆர்வமே காரணம் எனலாம்.
பாடசாலையில் கல்வி கற்கின்ற காலங்களில் தான் ஒரு பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் வரவேண்டும் என்ற இலச்சியத்தைக் கொண்டிருந்தார். தனது மாணவனின் இவ் இலச்சியத்தை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு ஊக்கமளித்து வழிகாட்டியாக இருந்தவருள் ஆசிரியர் எஸ்.எம். அபூபக்கர் அவர்கள் முக்கியமானவராவார்.
கல்முனை நீதிமன்றத் தொகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய மருதமுனையைச் சேர்ந்த முஹம்மது முஸம்மில் றஸ்மியா அவர்களை 2004.01.29இல் கரம்பிடித்து இவர்களுக்கு ஜுஸைல், முஆத், உமர் காஸிப் ஆகிய மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
குழந்தைப் பராமரிப்பு காரணமாக இவரது மனைவி றஸ்மியா அவர்கள் தனது அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியை தற்பொழுது இராஜினாமா செய்துள்ளார்.
கலாநிதி எம்.முஹம்மது பாஸில் அவர்கள் ஓர் சமூக செயற்பாட்டாளர். கல்வியியலாளர். புத்திஜீவிகள் தளங்களிலுள்ள பலருள் மாறுபட்ட தன்மை கொண்டவர். சமூகம் சார்ந்த விடயங்களில் பல்வேறு வகிபாகங்களை இவர் ஏற்று வருகின்றார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், அத்துறையின் தலைவருமாக பணியாற்றிவரும் கலாநிதி முஹம்மது பாஸில் அவர்களது சிறு வயது இலச்சியமாக இருந்து வரும் பேராசிரியர் பதவி கிடைக்க நானும் பிரார்த்திக்கின்றேன்.
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
2021.02.07
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :