கல்முனைபறக்கத்துள்ளாஹ்வின் தேடலின் சுவடு: 21 சிரேஷ்ட்ட சட்டத்தரணி முஹம்மட் றக்கீப்



ருதமுனையின் பாரம்பரிய நெசவோடு வியாபாரத்தையும் தொழிலாகக் கொண்டிருந்த இப்றாலெப்பை அபூபக்கர் மற்றும் அபூபக்கர் பாத்தும்மா தம்பதிகளின் ஐந்து பிள்ளைகளில் கடைசியாக முஹம்மட் றகீப் 1968.02.10இல் பிறந்தார்.
மருதமுனையைப் பொறுத்தவரையில் நெசவுத் தொழில் பிரபல்யம் பெற்ற ஊராக திகழ்கின்றது. நூல்களுக்கு பல வண்ணங்களை இடும் பெக்டரியை நிறுவியதோடு, 300 க்கும் மேற்பட்ட தறிகளை அமைத்து பாரிய அளவில் அத்தொழிலைச் செய்தவர்களுள் இவரது தந்தையும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர்களுள் ஒருவராகவும் ஈ.எல். அபூபக்கர் அவர்கள் ஆழங்குடியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவராக செயற்பட்டு வந்துள்ளார்.
தனது முன்பள்ளிக் கல்வியை தற்பொழுது கல்முனை ASP அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இயங்கிய வந்த தனியார் முன்பள்ளிப் பாடசாலையில் தொடர்ந்தார். இங்கு கடமையாற்றிய ராணி டீச்சர் இவரது முதல் ஆசிரியை என்பதை இன்னும் நினைவு கூறுகின்றார்.
ஐந்தாம் வயதில் தரம் ஒன்றில் அப்போதைய பாண்டிருப்பு முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போதைய அல் மினன்) சேர்ந்து தரம் ஐந்து வரையில் கற்றார்.
தரம் ஆறு முதல் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இணைந்து கல்விப் பயணத்தைத் தொடர்ந்தார். சிறு வயதிலிருந்தே தான் ஒரு வைத்தியராக அல்லது கல்வியியலாளராக வரவேண்டும் என்ற இலட்சியம் இவருக்குள் இருந்துள்ளது.
பாடசாலைக் காலங்களில் நூறு, இருநூறு மீற்றர் குறுந்தூர ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல் போன்ற மெய்வல்லுனர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
பாடசாலைகளுக்கிடையிலான, பிராந்திய தேசிய மட்ட பேச்சுப் போட்டிகள், விவாதங்கள், நாடகங்கள் போன்றவற்றில் தனது திறமையை வெளிக்காட்டி பரிசில்களை பெற்றுள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் கற்று 1986இல் முதல் தடவையாக பரீட்சைக்குத் தோற்றினார். அப்பரீட்சை அவரது இலட்சியத்திற்குப் போதுமான முடிவுகள் கொடுக்கவில்லை.
ஆனாலும் முயற்சியைக் கைவிடாது முயன்று கற்று அடுத்த வருடம் இரண்டாம் தடவையாக உயர்தரப் பரீட்சையில் தோற்றி சித்திபொற்றார். இருந்த போதிலும் கிடைத்த பெறுபேறு அவரது இலட்சியமான வைத்தியத்துறைக்கு போதுமானதாக இருக்கவில்லை.
அந்தப் பெறுபேற்றைக் கொண்டு கால்நடை மருத்துவ விஞ்ஞான (veterinary medical science) கற்கையை தொடர்வதற்கு போதுமானதாக இருந்த போதிலும், பல்கலைக்கழக இரண்டாம் தெரிவாக சட்டத் துறையையே தெரிவு செய்தார்.
பொதுவான கல்வி முயற்சிகளுடன் ஒப்பிடும் போது றக்கீப் அவர்களின் கல்வி மீதான அக்கறை பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. தனக்குப் பொருத்தமான துறையாக கருதி சட்டத்தை தெரிவு செய்துள்ளார். இதன் பின்னரே இவரது வாழ்வில் சரியானதும் பொருத்தமானதுமான திருப்பங்கள் ஏற்பட்டதென்றே கூறவேண்டியுள்ளது.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டபீடத்தில் இணைந்து பட்டப் படிப்பை தொடர்ந்த காலங்கள் ஈடில்லாதவை. தன்னுள் ஆழவேரோடிக் கிடந்த விவாதத் திறமைகள், பேச்சாற்றல் போன்றன பல்கலைக்கழக வாழ்வில் மீள உயிர்ப்பிக்கப்பட்டன.
பல்கலைக்கழக காலங்களில் நடைபெறும் இதுபோன்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்தார். முதல் வருடத்திலேயே தான் பங்குகொண்ட விவாதப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அடுத்தடுத்த நான்கு வருடங்கள் இவ்வாறான விவாதப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு வருடங்கள் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
நீதிபதிகளுக்கு முன்னால் சட்ட பீடங்களில் நடைபெறும் வழக்குகள் தொடர்பாக சமர்பபணம் செய்யும் போட்டியான அறம்கூறும் அவையத்தோர் போட்டியில்
கலந்து கொண்டு, இரண்டாம் வருடத்தில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானதோடு, மூன்றாம் வருடம் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.
சட்டபீட மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இப்போட்டியில் வெற்றி பெறுவதென்பது சவால் மிக்கது. இந்தச் சவாலை வெற்றி கொண்டமையானது அத்துறையில் இவருக்கிருந்த ஆர்வமே காரணமெனலாம்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அப்போதைய சட்டபீடத்துறையின் பீடாதிபதியாக இருந்த சிராணி பண்டாரநாயக்கவினால் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இது இவரது வாழ்வில் மறக்க முடியாத சந்தர்ப்பமாக மிளிர்ந்தது.
முதல் தடவையாக பல்கலைகழக சட்ட பீடத்தின் மாணவர் தலைவர் தேர்தலில் (Law Faculty Student Council) போட்டியிடுகிறார். இது பின்னர் மக்கள் மத்தியில் வேட்பாளராக செல்வதற்கான பயிற்சியை வழங்கியிருந்தது. இத்தேர்தலில் ரவி ஜயவர்த்தன அவர்கள் தலைவராகவும், இவர் பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அதேநேரம் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்கள் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டப் படிப்பை முடித்து 1998இல் ஒரு சட்டத்தரணியாக தன் இலட்சிய அடைவை நிறைவு செய்கின்றார்.
தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆறு மாதங்கள் தகுதிகாண் பயிற்சிக் காலத்தை பூர்த்தி செய்து சட்டத்தரணியாக நீதிமன்றங்களில் கடமை புரிவதற்காக தயாரானார். சட்டத்தரணி பதவி ஏற்புக்கென பயிற்சி பெற்றமையை உறுதிப்படுத்தும் சான்றிதலை அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சலீம் மர்சூக், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களான சீ.ஆர்.டீ. சில்வா, கமலசபேசன் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.
அத்துடன் நின்றுவிடாமல் தானும் சொலிசிட்டர் ஜெனரலாக வரவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள 2000 இல் அக்கற்கையை தொடர்வதற்காக லண்டனுக்குப் பயணத்தைத் தொடர்ந்தார்.
அவரது எண்ணம் நிறைவேறுவதற்கான பொருளாதார வசதிகள் அப்போது கைகூடவில்லை. அத்துடன் திருமண பந்தத்தில் இணைந்து சில மாதங்களில் குடும்பத்தை பிரிந்தமை போன்ற காரணங்கள் ஆறு மாதங்களில் நாடு திரும்பும் நிலைக்குக் கொண்டு சேர்த்தது.
நாடு திரும்பியதும் கல்முனை நீதிமன்றத் தொகுதியில் பயிற்சியை ஆரம்பித்தார். கல்முனை, அம்பாறை உயர் நீதிமன்றங்களிலும், பொத்துவில் முதல் வாழைச்சேனை வரையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் Criminal, Civil சிரேஷ்ட சட்டத்தரணியாக சுமார் இரண்டு தசாப்தங்கள் தொழில்வான்மையோடு உழைத்து வருகின்றார்.
றகீப் அவர்கள் ஒரு மருத்துவராக வந்திருந்தால் இன்று சிரேஷ்ட சட்டத்தரணியாக ஏற்றுக் கொள்ளும் திருப்தியும், மருத்துவத்தை திறம்பட கொண்டு செல்ல முடியாதிருக்கும் என கருதுகிறார்.
இவர் இன்று கிழக்கிலங்கையில் சமூக அடையாளம். மக்கள் சேவையை வாழ்வின் அங்கமாக சேர்த்துக் கொண்டவர்.
1986களிலிருந்து சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் இயக்கத்தின் கருத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதனோடு பயணித்துவரும் போராளி.
இவரது இளம் வயதிலிருந்தே சமூகம் தொடர்பான செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக செயற்பட்டதினால் பாடசாலைக் காலத்தில் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பு மாணவர்கள் அமைப்புடன் (IPDSO) இணைந்து சமூக சேவைகளில் தீவிரமாக செயற்படத் தொடங்கினார்.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் பிரதேசங்களில் விதைக்கப்பட்டு வந்த காலம் அது. ஒவ்வொரு பிரதேசங்களிலும் சிறு கூட்டங்கள் நடாத்தப்பட்டன. இத்தொடரில் மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்திற்கான கலந்துரையாடல் ஒன்றில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் உணர்வு பூர்வமான பேச்சில் ஈர்க்கப்படுகின்றார்.
இக்கலந்துரையாடலில் காத்தான்குடியைச் சேர்ந்த அஹமட்லெப்பை சேமன், சமது மாஸ்டர், மருதூர்க்கனி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மருதமுனையில் பொதுக்கூட்டம் நாடாத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் பாதுகாப்புப் பொறுப்புக்களை இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பு மாணவர்கள் அமைப்புடன் (IPDSO) மிஹ்லார் தலைமையிலான குழுவினரும் ஏற்றுக் கொண்டனர்.
தமிழ் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முஸ்லிம் அரசியலையும் இயக்க ரீதியிலான பாதையில் வழிப்படுத்தல் பொரும் சவாலாக அமைந்தது.
1987 கல்முனை பிரதேச சபைத் தேர்தலில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தராசு சின்னத்தில் மருதமுனையில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் அணியான றகீப் அவர்களும் உழைத்தார்.
அதனைத் தொடர்ந்து 1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட கட்சியின் தலைவருக்கு ஆதரவாக செயற்பட்டார்.
இவ்வாறான முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தநிலையில் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறினார். தலைவரின் செயற்பாடுகளை விமர்சிக்கும் தளம்
கட்சியிலிந்து பிரிந்தவர்களுக்கு தேவையாக இருந்ததினால் மயோன் முஸ்தபாவின் அணியில் இணைந்தார்.
2001இல நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நௌசாத் ஆகியோருடன் சேர்ந்து சுயேச்சையாக முயல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
பின்னர் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து மருதமுனையின் அமைப்பாளர் பதவியைப் பெற்று இன்றுவரையில் அப்பதவியிலேயே இருந்து வருகின்றார்.
கல்முனை மாநகர சபைத் தேர்தலைப் பொறுத்த வரையில் 2006 இல் போட்டியிட்டு முதல் தடவையாக உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மீண்டும் 2011 இலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவ்விரு தடவைகளிலும் ஐந்து முதல்வர்களுடன் இணைந்த அனுபவங்கள் இவருக்கு ஏராலம்.
2018இல் நடைபெற்ற புதிய வட்டார முறைத் தேர்தலில் இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தனது கட்சி சார்பாக பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத போதும் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு அப்பதவியில் இன்றுவரையில் பல சவால்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றார்.
முதல்வர் றகீப் அவர்கள் நூல்களின் காதலன். சிறு வயது முதல் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியவர். எந்த தளமாக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பேசக்கூடிய திறமை கொண்டவர். மொழித்தேர்ச்சி, சொல் செழிப்பு, வார்த்தைகளின் அழகு, ஹாசியம் போன்றன இவரது பேச்சுக்களின் அழகு எனலாம்.
1999இல் ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் காதர் இப்றாஹீம் அவர்களின் மூத்த மகளான பாத்திமா நஸ்றினை திருமணம் செய்து ரதீஸ் நபா, ஹப்னி றகாஷ், ஈத் மேர்சியா எலாய்ஸ், ஷேகமெலானி ஆகிய நான்கு பிள்ளைகளின் தந்தையாகவும் வாழ்கின்றார்.
கல்முனை மாநகர சபை வரலாற்றைப் பொறுத்த வரையில் இரு வருடங்கள் கடந்து முதல்வராக பதவி வகிக்கும் முதல் முதல்வராக இவரே காணப்படுகின்றார். இதற்கு முன்னர் பதிவி வகித்த ஐந்து முதர்வர்களும் அதன் ஆயுட் காலத்தில் பாதியை மாத்திரமே பூர்த்தி செய்திருந்தமை சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
ஆக கல்முனை மாநகர அரசியலானது ஆளும் கட்சியைவிட எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அதிகமாகன நிலையில் ஒரு விடயத்தை செயற்படுத்துவதிலும், தீர்மானங்களை மேற்கொளவதிலும் சவால்களே அதிகமிருக்கும். இந்தச் சவாலை ஏற்று தனக்குப் பரீட்சையமான சட்டத்தின் துணையுடன் முன்னெடுத்து வருகின்றமை தியாகமே எனலாம்.
வாழ்வை சட்டத்தையும், அரசியலையும் ஒருசேர சுறுசுறுப்பாகக் கொண்டு மக்கள் சேவை புரியும் சிரேஷ்ட சட்டத்தரணி, நீண்டகால அரசியல் செயற்பாட்டாளர் கல்முனை மாநகரின் முதல் மகன் மதிப்பிற்குரிய கௌரவ முதல்வர் றகீப் அபூபக்கர் அவர்களின் பொதுப்பணியை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
கல்முனை
2021.02.10
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :