இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 73 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி



1948 பெப்ரவரி 4ம் திகதி என்பது ஒவ்வோர் இலங்கையரின் வாழ்விலும் நினைவிலும் நிலைத்து நிற்க வேண்டிய நாளாக கருதப்படுகின்றது. அந்நாள் எம் புதிய தேசத்தின் உதய நாள். ஒரு புதிய தொடக்கத்தின் முதல் நாள். இறையாண்மை தேசமாகத் திகழும் எமது தேசத்தின் சுதந்திரம் என்பது நமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய எமது தேசத்தின் விடுதலையையும் உண்மையான அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்ட எமது தேசிய வீரர்களின் வெற்றி என்று பெருமையுடன் கூறலாம்.
இரண்டு நூற்றாண்டுகளாக எம்மை எமது சொந்த தேசத்திலேயே அடிமையாக வைத்திருந்த பிரித்தானியர், அவர்களது பிரித்தாளும் தந்திரத்தால் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கண்டியைச் சேர்ந்தவர்கள், கரையோரத்தைச் சேர்ந்தவர்கள் என எம்மை இன ரீதியாக, மத ரீதியாக பிரித்து தொடர்ந்தும் அடிமைகளாகவே வைத்திருக்க முற்பட்டபோதும் வேற்றுமைக்கு மத்தியில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதியாக நம்பிய எமது தேசிய வீரர்கள் உண்மையான சுதந்திரத்தை எமக்கு பெற்றுத் தந்தனர்.


எமது நாட்டில் கொண்டாடப்படும் சுதந்திர தின நிகழ்வுகளின் ஊடாக எமது தேசப்பற்றும் தேசத்தை பாதுகாக்க வேண்டும்; அதன் உண்மையான அபிவிருத்தியில் பங்கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகளும் தொடராக கூர்மைப்படுத்தப்பட்டு வந்தது. தற்போதும் நாம் ஒரு சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கின்றோம். தேசிய கீதத்தை இசைப்பதோடும் தேசியக் கொடிகளை பறக்க விடுவதோடும் சில சம்பிரதாய நிகழ்வுகளை நடத்துவதோடும் எமது சுதந்திர தாகமும் தேசப்பற்றும் தணிந்து விடக்கூடாது.


இன்று எம்மில் பலர் சுதந்திர தின நிகழ்வுகளை சுதந்திர உணர்வோடும் தாகத்தோடும் நோக்குவதற்கு மாறாக வெறும் ஓர் அரச, வர்த்தக விடுமுறை நாளாகவே அதனை பார்க்கின்றார்களா? என்ற ஐயமும் எழுகின்றது. பொசன், தைப்பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் நோன்புப் பெருநாள் போன்றோ அல்லது சிறுவர் தினம், முதியோர் தினம், தொழிலாளர் தினம் போன்றோ சுதந்திர தினம் என்பது ஒரு குறித்த மதப் பிரிவினரது அல்லது வர்க்கத்தினரது அல்லது ஒரு கட்சியினது விழா அல்ல. மாறாக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணர்வுபூர்வமாக கொண்டாட வேண்டிய விழாதான் சுதந்திர தின விழாவாகும்.

சுதந்திரம் என்பது ஒரு நாட்டில் வாழும் அனைத்துப் பிரஜைகளாலும் உண்மைக்கு உண்மையாக உணரப்படல் வேண்டும். அது அவர்களது அடி மனதில் இருந்து மேலெழுந்து வர வேண்டும். அது அவர்களை 365 நாட்களிலும் சுதந்திர உணர்வோடும் தேசப்பற்றோடும் பணி செய்ய அவர்களை தூண்ட வேண்டும். இன, மத, பிரதேச, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் சுதந்திர தினத்தை உணர்வுபூர்வமாக கொண்டாட வழியமைப்பது நாட்டின் சமூக, அரசியல் தலைவர்களினது பொறுப்பாகும். இதுவே அவர்கள் எமது தேசியத் தலைவர்களுக்கு செய்கின்ற வீர மரியாதையும் ஆகும்.

சுதந்திர தின கொண்டாட்டங்களினூடாக தேசிய உணர்வும் பற்றும் வளர்க்கப்படுவதைப் போன்றே மனிதநேயமும் அன்பும் சகோதரத்துவமும் வளர்க்கப்படல் வேண்டும். அனைத்துப் பிரஜைகளும் அனைத்து விதமான அச்சங்களிலிருந்தும் விடுபட்டு தாம் இலங்கையர் என்ற வாஞ்சையோடு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர அது வழியமைக்க வேண்டும். மனித வள மேம்பாடு, மனித வள முகாமைத்துவம் என்பவற்றில் கரிசனை காட்டுவது போன்றே இயற்கை வளங்கள், கனிய வளங்கள் என்பவற்றின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வளர்ச்சியை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
இறுதியாக எமது தேசத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நகர்த்திச் செல்வதில் சமூக, சமய, அரசியல் தலைவர்களுக்கு பொறுப்புக்கள் இருப்தைப் போன்றே ஊடகங்களுக்கும் பாரி பொறுப்பு இருக்கின்றது. விழுமியமிக்க ஊடகக் கலாச்சாரத்தை உறுதிப்படுத்த முடியுமென்றால்... ஊடகத்துறையினரும் அரசியல் சமூகத் தலைமைகளும் சிறந்த எண்ணங்களோடு ஒன்றிணைந்து வேலைசெய்ய முடியுமென்றால் எமது எதிர்காலம் ஒளிமயமாக மாறுவதையும் எமது நாடு வளமான ஒரு நாடாக மாறுவதையும் யாராலும் தடுக்க முடியாது. அந்த அளவுக்கு எமது நாடு வளமிக்க ஒரு நாடு அதற்கான முழு வாய்ப்புகளும் பெற்ற ஓரு நாடு. சிறந்த வியூகங்களோடு இந்த நாடு சிறந்த வளமான நாடாக மாறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். இந்த எண்ணங்களோடு தேசம் பற்றிய அன்புடன் 73ஆவது சுதந்திர தினத்தை மகிழ்சியுடன் கொண்டாடி தேசப்பற்றை வளர்த்துக் கொள்வோமாக!

அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :