சம்மாந்துறையின் முதல் கவிதை நூல் பிரசவித்த பெண் அடையாளம். மௌலவியா சபீனத்துல் நுஹா



கல்முனை பறக்கத்துள்ளாஹ்வின் தேடலின் சுவடு: 27
ம்மாந்துறை இலக்கியத் தோட்டத்தில் மலர்ந்த கவிப் பூக்களுள் ஒன்று. தன் கவிதைகளைப் கோர்வையாக்கி நூலாகத் தந்த பெண் அடையாளம். மார்க்கக் கல்வியை முறையாகக் கற்றவர் மௌலவியா சபீனதுன் நுஹா அவர்கள்.
சமூகத்தை வழிநடாத்தக்கூடிய மார்க்க அறிவும், துணிச்சலுமிக்க பெண். கணவர், ஐந்து பிள்ளைகள் என வீட்டு வேலைப் பழுக்களுக்குள் இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி எழுதிவரும் தூரிகை இவர்.
எத்தனையே ஆண்களின் சாதனைக்களுக்குப் பின்னால் பெண்களின் பங்களிப்புக்கள் இருப்பதான காலாகாலமாகக் கூறப்பட்டுவருகிறது. இன்றைய காலத்தில் பெண் ஆளுமைகளின் வெற்றிக்குப் பக்கபலமாக அவர்களின் கணவர் இருப்பது குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்டுவருவது ஆண்கள் குறித்த தவறான புரிதலை தவிர்ககிறது.
ஒவ்வொரு பெண்களும் சமூகமயப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களை சமயோசிதமாகக் கையாளப் பழக வேண்டும். அவர்கள் மீது தூசுகள் கலங்கத்தை ஏற்படுத்தாத வகையில் காத்துக் கொள்வதும் மிக அவசியமாகின்றது. பெண்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் நுஹா.
மேலும் ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியில் வரும் வரையிலேயே அது அவனுக்குச் சொந்தமாக இருக்கும். குறித்த படைப்பு வெளியில் வந்தவுடன் அது வாசர்களுக்கு சொந்தமாகி விடுகின்றன. இதனை புரிந்து கொள்ளும் படைப்பாளியினால் சிறந்தவற்றை உருவாக்க முடிகிறது.
சமூகத் தளத்தில் இறங்கி, சமூகம் குறித்த ஆண்மீக வழிமுறைகளை தெளிவாக போதிக்கும் அந்தஸ்த்தைக் கொண்டுள்ள எழுத்தாளரான இவர் பெண் படைப்பாளிகள் குறித்து முன்வைக்கும் கருத்துக்கள் மிகப் பெறுமதியானவையாக அமைகின்றன.
பெண் எழுத்தாளர் ஒருவரின் படைப்புகளின் பின்னணியில் தனிப்பட்ட வகையில் எந்த நபரும் தங்கியிருக்கக் கூடாது என்பதுடன், அவ்வாறான படைப்புக்களுக்கு வேரொரு எழுத்தாளரும் உரிமம் எடுத்துக் கொள்ளவும் கூடாது என்கிறார்.
சில பெண் எழுத்தாளர்களுக்கு பிரச்சினைகள் உருவாவதாகவும், அவை அவர்களுக்கு தொடர்ந்து வருவதாகவும் கூறுகின்றார். அதேநேரம் எழுதும் பெண்கள் தமது எழுத்துக்களுடன் மாத்திரம் நின்று கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் நெருங்கும் வாய்ப்புக்கள் இருக்காது எனும் காத்திரமான கருத்தை பெண்களுக்காக முன்வைக்கின்றார்.
சமூகமயப்படுத்தப்பட்ட பெண்களின் சமூகத்தின் முன்மாதிரியான செயற்பாடுகள் குறித்து அக்கறை கொள்வது இன்றியமையாததாகும்.
சபீனத்துல் நுஹா அவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்த கலந்தர்லெப்பை இஸ்மாயில் மற்றும் மீரா மொஹிடீன் சாலியா உம்மா தம்பதியினரின் ஏழு பிள்ளைகளில் மூத்தவராக 1983.02.20 ஆம் திகதி பிறந்தார்.
தரம் 01 முதல் 08 வரையான பாடசாலைக் கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மகளீர் வித்தியாலயத்தில் கற்றார்.
இக்காலத்தில் தனது நண்பிகளுள் ஒருவரான நஸ்ரின் குருநாகல் அறக்கியாலயில் உள்ள பெண்கள் அரபுக் கல்லூரியில் மார்க்கம் பயின்று வந்தார்.
நண்பியைப்போல தானும் மார்க்கக் கல்வி மீதான ஆர்வம்எழ அதன்பால் தன்னை வழிநடாத்துமாறு பெற்றோரின் சம்மதத்தைக் கோரினார்.
வீட்டுக்கு தலைப்பிள்ளை. அதிலும் பெண் பிள்ளையைப் பிரிந்து வாழ்வதற்கு எந்தப் பெற்றோரும் இலகுவில் விரும்ப மாட்டார்கள். இருந்தபோதும் இவரது விடாப்பிடியால் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டார்.
அக்காலத்தில் சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்ட அஸ்ஸலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் முதல் மாணவியாகச் சேர்ந்து மார்க்கக் கல்வியைத் தொடர்ந்தார்.
மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொண்டடிருந்த காலமான 1998இல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்திபெற்றார்.
2001களில் மார்க்கக் கல்வியை நிறைவு செய்து மௌலவியாக வெளியானார்.
பொதுவாக மௌலவியான வருபவர்களுக்கு உலக அறிவு இருப்பதில்லை எனும் தவறான புரிதலை இல்லாமல் செய்தவர்களுள் இவரும் ஒருவரெனலாம்.
உலகக் கல்வியை முறையாக கற்க வேண்டும் என்பது இவருக்குள் காணப்பட்ட மற்றுமொரு ஆவர்வமாகும்.
மௌலவியாவாக வெளியான பின்னர் 2002இல் சம்மாந்துறை அல் மர்ஜான் வித்தியாலயத்தில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவைக் கற்றார்.
ஒருவருடம் இங்கு கற்றவர், இரண்டாம் வருடத்தை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தார்.
உயர்தரத்தை முடித்த பின்னர் சம்மாந்துறையில் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டஉஸ்வா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வருடம் கற்பித்தலில் ஈடுபட்டுவந்தார்.
உயர்தரப் பெறுபேற்றைக் கொண்டு கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்புக்கள் இருந்த போதும், அப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தமையால் அதிலிருந்து தவிர்ந்து கொண்டார்.
2006இல் டாக்டர் அப்துல் ரஷீத் நியாஸ் அஹமட் அவர்களை மணந்து கொண்ட இவருக்கு ஷிமா டிஹான், ஷாஹி ஆதிஷ், ஷாஹா டிஹான், சுஹி டிஹான், ஆபிக் அஹமட் ஆகிய ஐந்து குழற்தைச் செல்வங்கள் உள்ளனர்.
நுஹாவின் எழுத்துப் பணி சிறுவயதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரம் இரண்டு கற்கும் காலத்தில் கண்டவற்றை எல்லாம் வாசித்துத் தீர்க்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் பத்திரிகையில் வெளிவரும் சிறுவர்பகுதி இவரது விருப்பமான ஒன்று.
தரம் மூன்று படிக்கும் போது மரம் எனும் தலைப்பில் பிரசுரமான கவிதை ஒன்றை பார்த்த இவருக்குள் அதுபோன்று எழுத முடியுமான என உம்மாவிடம் கேட்டபோது அவ்வாறு எழுதுவது சாத்தியமானது என்பதை மகளுக்கு தெளிவுபடுத்தி யதானது, இவரையும் எழுதுவதற்கு தூண்டுதலாக அமைந்த விடயமாக மாறியது.
பாடசாலைக் காலங்களில் தமிழ்த்தின, ஆங்கிலத்தின போட்டிகளில் ஆர்வமாக செயற்பட்டவர். ஒரு முறை சித்திரம் ஒன்றை வரைந்து அதனை ரூபவாஹினி சிறுவர் நிகழ்ச்சிக்கு அனுப்பியிருந்தார்.
அரபுக் கல்லூரிக் காலத்தில் இவ்வாறான போட்டிகள் நடைபெறவில்லை. ஆனாலும் சுயமாக கற்கவும், மாணவர் செயற்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்புக்கள் தாராளமாக இருந்தன. இவ்வாய்ப்புக்களின் மூலம் சுய ஆளுமைகளை வளர்த்துக் கொள்பவராக மாறினார்.
அரபுக் கல்லூரியில் கற்கும் காலமான 2000 களில் இவரது பெண்ணாய்ப் பாடும் எனும் முதல் கவிதை தினகரனின் புதுப்புனலில் பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து கவிதை எழும் வேகம் அதிகமாயின.
உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவை தெரிவு செய்ததன் காரணமாக முழுநேரமும் படிப்பில் கவனம் செலுத்துமாறு ஆசிரியை வழங்கிய அறிவுரைக்கமைவாக எழுதுவதை தற்காலி கமாக நிறுத்தினார். பரீட்சை முடிந்த பின்னர் திருமணப் பந்தம், குழந்தைகள் என குழும்ப வாழ்வின் பொறுப்புக்கள் என்பன எழுத்திருந்து தூரமாக காரணமாகின.
நாளடைவில் தன் மனைவியின் ஆற்றல்களை வெளிக் கொணர வேண்டும் என எண்ணிய இவரது கணவர் தொடர்ந்து எழுதுமாறும், அதற்கான முழு ஒத்துழைப்புக்களையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறி ஊக்கப்படுத்தினார்.
இது நுஹாவை மீண்டும் எழுத்து வானில் சிறகடிக்கத் தூண்டியது. ஒரு சதாப்தகால இடைவெளியின் பின்னல் 2017இல் நுஹா முகநூல் ஊடாக நிரோ நியாஸ் ) (Niro niys) எனும் முகநூல் கணக்கின் மூலம் கவிதைகளை வாசகர்களுக்கு வழங்கி வருகின்றார்.
சமூக வலைத்தளங்கள், மரங்கொத்தி, படிகள், பூங்காவனம், கலை முகம், நடு, கல்வெட்டு, காற்புள்ள போன்ற சஞ்சிகைகளிலும் ஏராளமான கவிதைகளை எழுதிவருகின்றார்.
சம்மாந்துறையின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மாறன் யூ. செயின் அவர்களின் தூண்டுதலின் மூலம் 2007இல் புள்ளியைத் தேடும் புள்ளிமான் எனும் கவிதை நூலை வெளியிட்டார்.
தடாகத் தாமரைகள்,, முற்றத்து முகவரிகள், 1000 கவிஞர் கவிதைகள், மின்னும் தாரகைகள், முதல் முத்துக்கள் ஆகிய கவிதைத் தொகுப்புக்களில் இவரது கவிதையும் இடம் பிடித்துள்ளது.
அறிஞர் சித்திலெப்பை ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரையான இவரது கட்டுரை தெரிவானது.
இந்நூல் சம்மாந்துறையின் வரலாற்றில் பெண் கவிஞர் ஒருவரால் வெளியிடப்பட்ட முதல் நூல் எனும் அடையாளத் தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய கலை இலக்கிய தேனகம், சம்மாந்துறை தமிழ் எழுத்தாளர் சங்கம், அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை, தடாகம் இலக்கிய வட்டத்தின் நிருவாக உறுப்பினராகவும் இலக்கிய செயற்பாடு களில் ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகின்றார்.
2015இல் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையினால், மேம்பாட்டாளர் விருதும்,
2016இல் தடாகம் இலக்கிய வட்டத்தினால் கவியருவி, கவினெழி ஆகிய விருதுகளும்,
2017இல் இஸ்லாமிய இலக்கிய ஆய்கத்தினால் கௌரவ விருதும்,
2018இல் சம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையினால் கலைஞர் சுவதம் விருதும்,
2019இல் எச்.டபிள்யூ.சீ. மற்றும் தமிழா ஊடாக வலையமைப்;பு இணைந்து, முதல் முத்து விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குயிலோசை இலக்கியச் சங்கமத்தில் தொடர்ச்சியாக பங்குகொள்வதோடு, கவியரங்குகளிலும் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றார்.
இவ்வாறான நீண்டகாலமாக இலக்கிய உலகில் தனது காத்திரமான பங்களிப்பின் மூலம் ஏனைய பெண் எழுத்தாளர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டுவரும் நுஹாவின் செயற்பாடுகள் வளர்ந்து செல்கின்றன.
தன்னிடமுள்ள இன்னும் பல கவிதைகளை சேர்ந்து இவ்வருட இறுதிக்குள் தனது இரண்டாவது நூலையும் வெளியிட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.
இவரது இலக்கியப் பணி மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்கின்றேன்.
ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :