ஐந்தாம் தரத்தில் வாசிக்க முடியாத மாணவர்கள் இருப்பதைக் கண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருகோணமலை கல்வி வலய குச்சவெளிக் கோட்டப் பாடசாலைகளில் இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சீ.எல்.பெர்ணாண்டோ கல்வி அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வைக்கு நியமித்த குழுவினர் இப்பாடசாலைகளுக்கு விஜயம் செய்த போதே இதனை அவதானித்துள்ளனர்.
இந்தக் குழுவினர் எழுமாறாக சில பாடசாலைகளுக்கு விஜயம் செய்தனர். ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு குறைய பெற்று வருவதற்கான காரணத்தை ஆராய்ந்த போது ஐந்தாம் தரத்திலும் வாசிக்க முடியாத மாணவர்கள் இருப்பது அவதானிக்கப் பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் குச்சவெளிக் கோட்டம் பின்னிலையில் இருந்து வருகின்றது. இதற்கான காரணங்களைக் கண்டறியும் பொருட்டு மேற்பார்வை செய்ய சென்ற வேளையிலேயே இந்தக் குறைபாடு அவதானிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கல்வி வலயத்தைப் பொறுத்தவரை ஆரம்பக் கல்வி ஆசிரிய பற்றாக்குறை இல்லை. எனவே இந்தக் குறைபாட்டை நிவர்த்திக்க தேவையான நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதன் பிரதி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment