தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் இருக்கும் கிண்ணியா நகர சபை பொது நூலகத்தை திறந்து வாசகர்களும் மாணவர்களும் அறிவையும் கல்வியையும் பெறுவதற்கு வகை செய்யுமாறு பெற்றார்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களின் கீழ் இயங்கும் அனைத்து பொது நூலகங்களும் சுகாதார முறையின் கீழ், தொடர்ந்து முறையாக இயங்கி வருகின்ற இந்த நிலையில் கிண்ணியா நகரசபை பொது நூலகம் மாத்திரம் மூடப்படுவதற்கு என்ன காரணம் என பெற்றார்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து வாசகரும் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.ஆர்.எம். பாறுக் கருத்துத் தெரிவிக்கையில்:
பல நூறு பேர்களை அறிவுள்ள மனிதர்களாக்கிய வகையில் கிண்ணியா நூலகத்தின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியவே முடியாது. தற்போதைய கொரோனா சூழ்நிலையில் நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையானவர்களே வாசிகசாலைக்கு வந்து செல்வார்கள். இந்த நிலையில் இங்கு எட்டு ஊழியர்கள் இங்கு கடமையாற்றுகிரர்கள். எனவே, இவற்றை முகாமைத்துவம் செய்வது மிகவும் இலகுவானது என்று தெரிவித்த அவர், மாவட்டத்தில் உள்ள சகல நூலகங்களும் சுகாதாரம், இடைவெளி
கைகழுவுதல் உள்ளிட்ட பல முறைமைகளைக் கையாண்டு இயங்குகையில் கிண்ணியா நூலகம் மட்டும் பூட்டப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
மற்றுமொரு வாசகரான ஓய்வு பெற்ற நூலகர் சபருள்ளாகான் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்:
கொரோனா என்ற பெயரைக் கேட்டவுடன் இந்த நூலகம் தானாக மூடிக்கொள்கிறது ஏனோ?ஏனைய நூலகங்கள் இயங்கும் போது இதற்கு மட்டும் ஏன் இந்த விதியோ கேவலம் ஒரு நாளைக்கு 25 வாசகர்களை சுகாதார முறைபேணி அவர்களுக்கு வாசிப்பதற்கு வசதி செய்துகொடுக்க முடியாத நிலையானது கவலைை தரும் விடயமாகும் என்று தெரிவித்தார்.
உண்மையிலேயே இவர்கடைய கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றவைகளாகும். ஏனெனில், சந்தைகள், மோட்டார் வாகன திணைக்களங்கள், குடிவரவு குடியகழ்வு திணைக்களங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் இப்படி குறிப்பிட்ட சில பொது மக்கள் நிறுவனங்களில்தான் குறித்த நேரத்தில் அதிகமான மக்கள் கூடுவார்கள்.
ஆனால் நூலகங்களில் இவ்வாறு கூட மாட்டார்கள். அவர்கள், தங்களுடைய ஓய்வு நேரங்களையே இதற்காக செய்வார்கள். இதனால் வாசிகசாலைகளில் குறித்த ஒரு நேரத்தில் அதிக சனங்கள் கூடுவதற்கான வாய்ப்பில்லை.
எனவேதான் இந்த கொரானா அனர்த்த நிலையில் கூட திணைக்களங்களை விட, நூலகங்களையே சுகாதார முறைப்படி சிறப்பாக முகாமைத்துவம் செய்ய முடியும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் நூலகங்கள் திறக்கப்பட்டு, அவை அறிவு, தகவல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இதேவேளை, இந்த மாவட்டத்தில் ஏனைய திணைக்களங்கள் தங்களுடைய திணைக்கள ஊழியர்களை மட்டுப்படுத்தி, அந்த நிறுவனங்கள் மக்களுக்காக தொடர்ந்து இயங்குகின்றன. ஆனால், கிண்ணியா நகரசபை பொது நூலகம் மாத்திரம் பூட்டப்பட்டிருப்பது வாசகர்களுக்குச் செய்கின்ற அநியாயமாகும். இது நகர சபை நிர்வாகத்தின் வினைத்திறனற்ற செயற்பாட்டையே காட்டுகின்றது.
எனவே, கிண்ணியா நகர சபை பொது நூலகமும் திறக்கப்பட்டு, அதனுடைய சேவை தொடர்ச்சியாக வாசகர்களுக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டியது நகரசபை தவிசாளரின் கடமையல்லவா?
0 comments :
Post a Comment