தேசிய, சர்வதேச ஊடகங்களின் பேசு பொருளாக மாறியுள்ளது "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை" என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த கவனயீர்ப்புப் போராட்டம்.
இம்மாதம் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 46வது கூட்டத்தொடர் நடைபெறவிருக்கின்ற இவ்வேளையில், திட்டமிட்டபடி இவ்வெதிர்ப்புப் பேரணி நடைபெற்று வருகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மெளனித்துப் போயுள்ளதே தவிர, அரசியல் ரீதியான போராட்டம் மௌனித்துப் போகவில்லை.
அவ்வரசியல் சார்ந்த போராட்டமானது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியினூடாகவே முன்னெடுக்கப்படுகிறது.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் புலிகள் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தாம் தனி நாட்டுக் கோரிக்கையை கை விடுவதாகவும், பிராந்திய சுயாட்சியை ஏற்கத்தயாரெனவும் அறிவித்தது.
பெரும்பான்மைனரின் அடக்குமுறையினால் தான் சுயாட்சி அல்லது தனி நாடு கேட்டுப் போராடுகிறோம் என வியாக்கியானம் பேசிய அதே தமிழ்த்தேசியவாதிகள் அவர்களிலும் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தோடு எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை சற்று ஞாபகப்படுதிப் பார்த்தால், அவை அவர்களின் போராட்டத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகவே அமைந்தது.
அத்தோடு, தமிழ்த் தேசியத்தின் சுயாட்சிக் கோரிக்கையானது, தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர் என்று தனியொரு மொழியினருக்கோ , மதத்தினருக்கோ உரிமை கோர முடியாதவாறு ஒரு பன்மைதுவ மக்கள் கூட்டத்தினர் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்ற கிழக்கு மண்ணுக்கு ஒரு போதும் பொருந்தாதென தமிழ் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளான மீள்குடியேற்றம், காணி மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்காமைக்கு பிரதான காரணங்களில் ஒன்று இந்த தமிழ் தேசியவாதிகளின் தலையீடுகள் தான் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
P2P எதிர்ப்புப்பேரணியில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையாக ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது மாத்திரம் தான் என்பதைப்போல முஸ்லிம் பிரதேசங்களில் மாத்திரம் ஜனாஸாக்களை எரிக்காதே என்று கோஷமிட்டு, ஜனாஸாக்களை எரிப்பதை அரசு நிறுத்தி விட்டால், இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லையென்று சர்வதேசத்திற்கு காட்ட முயல்கிறதா இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுயாட்சிக் கோரிக்கையில் தான் முஸ்லிம் சமூகத்தின் பல அடிப்படை பிரச்சினைகள் சிறைப்பட்டுக் கிடக்கின்றது.
இவைகள் அனைத்தும் தெரிந்தும் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எமது இளைஞர்களையும் சமூக அமைப்புக்களையும் பிழையாக வழிநடாத்தி, வரலாற்றை மறைக்க முயற்சிப்பது எம் சமூகத்திற்குச் செய்கின்ற பாரிய துரோகமாகும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தவிர்ந்த அனைத்து தமிழ்க்கட்சிகள், அரசியல்வாதிகளும் தாம் சார்ந்த சமூகத்தின் அபிவிருத்திக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது.
கிழக்கின் சுயநிர்ணயம் என்ற நூலில் நூலாசிரியர் எம்.ஆர்.ஸ்டாலின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"கிழக்கு மாகாணமானது வாய்மொழி வரலாறுகளூடாகவும், எழுதப்பட்ட வரலாறுகளூடாகவும் அறியப்பட்டிருக்கின்ற வரலாற்றுப் பின்புலத்தில் ஒரு போதும் யாழ்ப்பாணத்துடன் எவ்விதத் தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை.
கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர் என்று தனியொரு மொழியினருக்கோ, இனத்தினருக்கோ, மதத்தினருக்கோ மட்டும் உரிமை கோர முடியாதவாறு ஒரு பன்மைத்துவ மக்கள் கூட்டத்தினர் ஐக்கியமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இவற்றைக் கருத்திலெடுக்காத வகையில், கிழக்கு மண்ணுக்குப் பொருந்தாத ஒரு தமிழ்த்தேசியம் எனும் ஒற்றை அடையாளம் அங்கு திணிக்கப்பட்டமையினாலேயே வரலாற்றில் என்றுமில்லாதவாறான இரத்த ஆறு எங்கள் வெருகல் ஆற்றிலும் ஓட நேர்ந்தது.
கிழக்கில் அமைதியும் சமூக நல்லிணக்கமும் பேணப்பட்டு மீண்டும் அங்கொரு சமாதான சகவாழ்வு ஏற்பட வேண்டுமானால், கிழக்கு மாகாணத்தின் அரசியல் தலைவிதியை அங்கு வாழும் மக்களே தீர்மானிக்கும் நிலை ஒன்று ஏற்படுவதனாலேயே அது சாத்தியமாகும்.
அதுவே இலங்கை தேசத்திலும் இனக்குரோதங்கள் மறைந்து, மீண்டும் சமாதானம் நிலவ முன்நிபந்தனையாகவும், முன்னுதாரணமாகவும் அமைய முடியும்."
0 comments :
Post a Comment