அரசின் நீர்ப்பாசனச் செழிப்பு எழுச்சித் திட்டமானது விவசாயிகளின் வாழ்வியலில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தும் வவுனியாவில் காதர் மஸ்தான்



ன்றைய நாள் எமது வன்னி பிரதேச வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும் என நான் பதிவு செய்ய
ஆசைப்படுகிறேன். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கியத்தை நோக்கி எனும் இலக்கை நோக்கிய எமது பயணத்தில் இது மற்றுமொரு மைற்கல்லாகும்.
என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நேற்று வவுனியா பெரிய தம்பனை ஆலடிக்குளம் புனரமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது

தேசிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்ற போது அதன் பெரும்பாகம் விவசாயம், நீர்ப்பாசனம், நீர் மின்வலு துறைகளின் பங்களிப்பு ஆகிய வெற்றிகரமான செயற்றிட்டங்கள் மூலம் கிடைக்க பெறுகின்றன.
இதற்காக நாடு பூராகவும் பரந்து விரிந்து கிடக்கின்ற ஆறுகள், குளங்கள், கால்வாய்களை சீரமைப்பதன் மூலம் அத்துறை சார்ந்த செயற்றிட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் நாடெங்கும் சௌபாக்கியத்தையும், செழுமையையும் உண்டாக்குவதே எமது பணியாகும். இதன் மூலம் எமது நாட்டின் முதுகெலும்பாக செயற்படுகின்ற விவசாயிகளுக்கு வலுச் சேர்ப்பதே இதன் பின்னணியாகும்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னராக எமது நாட்டில் கையாளப்பட்டு வந்த நீர்பாசன தொழிநுட்பம் சார்ந்த எமது விவசாய நடவடிக்கைகளானது சர்வதேச விவசாய துறையினுள்ளே ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. உலக கைத்தொழில் புரட்சிகளுக்கு முன்னர் எவ்வித இயந்திர தொழிநுட்பமும் இல்லாத காலத்தில் எமது நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்ற குளங்களும், நீர்பாசன கட்டமைப்புக்களும் இன்றுவரைக்கும் எவ்வித தடங்கள் ஏதுமின்றி செயற்பட்டுக் கொண்டிருப்பது அவற்றை பறைசாற்றுகிறது.

எனவே அவ்வாறான கட்டமைப்புக்களை புனரமைப்பதன் மூலம் எமது விவசாயத்துறையை மேலும் வலுப்படுத்தி கிராமிய தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். எமது அரசாங்கத்தின் பிரதானமான இலக்கு பொருளாதார சீரமைப்பும் மீள் கட்டுமானமும் ஆகும். அதிலே முதல் நடவடிக்கை விவசாயத் துறையையும் விவசாயிகளையும் மேம்படுத்துவதே எமது இலக்காகும். இதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அதிமேதகு பிரதமர் அவர்களின் வழிகாட்டலில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நீர்ப்பாசன எழுச்சி எனும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் ஐயாயிரம் குளங்களை புனரமைக்கின்ற பணி எமது அயல் மாவட்டமான அநுராதபுரத்திலே அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர்ப்பாசன அமைச்சு விவசாய அமைச்சு என்பன இணைந்து மத்தி, மாகாண திணைக்களங்களின் முழுமையான பங்களிப்புகளுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 100 குளங்களுக்காக 125 மில்லியன் ரூபாவும், மன்னார் மாவட்டத்தில் 158 குளங்களுக்காக 160 மில்லியன் ரூபாக்களும், முல்லைத்தீவு மாவட்டத்திலே 78 குளங்களுக்காக 100 மில்லியனும் அவசரமாக ஏற்படுகின்ற தேவைகளுக்காக 100 மில்லியனும் இவ்வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திற்கு 300 மில்லியன் ரூபாவும், வவுனியா மாவட்டத்திற்கு 250 மில்லியன் ரூபாக்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 150 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும் இந்த வேலைத்திட்டத்திற்காக வன்னி மாவட்டத்திற்கு 2500 மில்லியன் ரூபாய்கள் மொத்தமாக ஒதுக்கப்படவுள்ளன.
எனவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தூர்ந்துபோய் கிடக்கின்ற எமது பாரம்பரிய விவசாய நிலங்கள் மீண்டும் செழிமையடைவதற்கு இத்திட்டம் பெரிதும் உதவும் என நாம் திடமாக நம்புகின்றோம். இதன் மூலம் எமது மக்களும் பெரிதும் நன்மையடைவார்களென்று நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே அனைத்து தரப்பினர்களும் உண்மையாகவும் தூய்மையாகவும் நேர்மையாகவும் பங்களிப்புச் செய்ய முன்வரவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

வட மாகாண ஆளுனர் கெளரவ பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ குலசிங்கம் திலிபன்,வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சமன் பந்துலசேன. நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம், கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் ,உள்ளிட்ட வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்கள்,கமநல சேவை திணைக்கள மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகள்,வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் ஆகியரோடு கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :