மட்டக்களப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிற்செய்கை எதிர்வரும் பங்குனி மாதத்தில் ஆரம்பிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (24) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இம்முறை மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திட்டங்களினூடாக செய்கை பண்ணப்படவுள்ள சிறுபோக பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் எதிர்வரும் மார்ச்மாதம் நடாத்தப்படவுள்ளதாக இதன்போது தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இதனடிப்படையில் உன்னிச்சை மற்றும் சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், வவுனதீவு பிரதேச செயலக மண்டபத்தில் எதிர்வரும் 04 ஆந்திகதியும், உறுகாமம்கித்துள்வெவ, வெலிகாகண்டி மற்றும் சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், அன்றயதினம் பி.ப. 2.00 மணிக்கு செங்கலடி பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன.
மேலும் கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல் குழம் மற்றும் சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், பட்டிப்பளை பிரதேச செயலகப்பரிவில் எதிர்வரும் 06 ஆந்திகதி காலை 9.30 மணிக்கு, கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும், நவகிரி, தும்பங்கேணி மற்றும் சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 6 ஆந்திகதி பி.ப. 2.00 மணிக்கு கலாசார மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.
கட்டுமுறிவு, மதுரங்கேணி, கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், வாகரை பிரதேச செயலக மண்டபத்தில் எதிர்வரும் 10 ஆந்திகதி காலை 9.30 மணிக்கும், வாகனேரி. புனானை, தரவை, வடமுனை சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், அதே தினம் பி.ப. 2.00 மணிக்கு கிரான் ரெஜி மண்டபத்திலும் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர இம்முறை செய்கை பண்ணப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான நீர் விடுவிப்பு, உழவு நடவடிக்கை, கால்நடைகளை அகற்றுதல், விதைப்பு தினம் போன்ற திகதிகள் இவ்விவசாய ஆரம்பக் கூட்டங்களில் தீர்மானிக்கப்படவுள்ளன.
இம்மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஹலீஸ், காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சிகலா புண்ணியமூர்த்தி, பிரதமகணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மட்டக்களப்பு பிராந்திய நீர்பாசன பணிப்பாளர் என். நாகரெத்தினம், மட்டக்களப்பு பிராந்திய பிரதி மாகாண நீர்பாசன பணிப்பாளர் திரு. வே. இராஜகோபாலசிங்கம், மாவட்ட உரச் செயலக உதவிபணிப்பாளர் கே.எல்.எம். சிராஜூதீன், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிபணிப்பாளர் வீ.பேரின்பராசா மற்றும் பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
0 comments :
Post a Comment