சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றம் (என்.எல்.எஃப் (Nature Loving Forum – N.L.F) கடந்த ஒரு வருட காலமாக சுற்றுச் சூழல் நடவடிக்கை தொடர்பில் கல்முனை பிராந்தியத்தில் அதிகளவில் பேசப்படும் ஒரு அமைப்பாகும். இது அண்மைக் காலமாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தொடர்பிலும் சுற்றாடலை மேம்படுத்தல் தொடர்பிலும் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றம் (என்.எல்.எஃப்) என்பது ஒரு சமுதாய அடிப்படையிலான தன்னார்வ அமைப்பாகும். இவ்வமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மாணவர்கள் மற்றும் தன்னார்வ செயற்பாட்டளார்களை விழிப்புணர்வூட்டல், ஊக்குவித்தல் மற்றும் இயற்கை பற்றிய கல்வியூட்டல் ஆகியவை குறித்து செயற்பட்டு வருகின்றது.
மரநடுகை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் இயற்கையை பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வுத் நிகழ்ச்சிகள், பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், மீழ்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், சேதன உர பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் நஞ்சற்ற உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் பாவனையை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தி செயற்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அத்துடன், இவ்வமைப்பானது கல்முனை மாநகர சபையுடன் இணைந்து, சாய்ந்தமருது பிரதேத்தில் தின்மக் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுனாமி பேரழிவிற்குள்ளான சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்டிய கடற்கரை பகுதியை தன்னார்வ அடிப்படையில் சுத்தம் செய்து, பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் ஒரு அழகிய உள்ளுர் பொழுதுபோக்கு தலமாக மாற்றியது என்.எல்.எப் ஆகும். இதற்கு 'மருதூர் சதுக்கம்' எனப் பெயரிட்டு நிழல் தரும் மரங்கள் நட்டு தொடர்சியாக பராமரித்து வருவதுடன் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள கடற்கரையோரம் மற்றும் இயற்கை பிரதேசங்களை பராமரிக்கும் செயற்பாடுகளை தொடர்சியான முன்னெடுத்து வருகின்றது.
இந்த அமைப்பின் தோற்றத்தின் பின்னர் இப்பிரதேச மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய ஆர்வமும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளதை செயற்பாட்டு ரீதியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மருதூர் சதுக்கம் தற்போது நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் பொழுதுபோக்கு தளமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதனை அண்டிய பிரதேசத்தில் நடமாடும் வியாபாரிகள் தங்கள் விற்பனைக் கூடாரங்களை அமைத்துள்ளதன் காரணமாக அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வசதியாக மருதூர் சதுக்கம் காணப்படுகின்றது.
மருதூர் சதுக்கம் மற்றும் அதனோடு இணைந்ததாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்களை திட்டமிடப்பட்ட முறையில் எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் அத்துடன் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களை அணுகி இவ்வமைப்பு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாடுகளுக்கு பொதுமக்களினதும், இயற்கை விரும்பிகளினதும் ஒத்துழைப்பு தொடர்ந்தேச்சியாக வழங்கப்படுமாயின் இவ்வமைப்பின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்பது இவ்வமைப்பினரின் வேண்டுகோளாக இருக்கின்றது.
0 comments :
Post a Comment