அம்பாறையில் தீவிரமைடைந்திருக்கும் போதைப்பொருள் வியாபாரத்தைகட்டுப்படுத்த கொழும்பிலிருந்து விசேட இராணுவ புலனாய்வுக் குழு



அஸ்லம் எஸ்.மௌலானா-
ம்பாறை மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கு கொழும்பில் இருந்து விசேட இராணுவ புலனாய்வுக் குழுவொன்றை களமிறமிறக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வந்துள்ளார் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) தனது அம்பாறை, மாவடிப்பள்ளி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையும் பாவனையும் கடுமையாக அதிகரித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இது எமது மாணவர் சமூகம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. எமது மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரிகள் பெரிய வலையமைப்பில் இயங்கி வருகின்றனர்.

இன்று எமது தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினர் பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற சூழ்நிலையில் இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் வியாபாரம் என்றுமில்லாதவாறு தலைவிரித்தாடுவதானது எதிர்காலத்தில் எமக்கு இன்னும் பாதிப்புகளை கொண்டு வரலாம் என அஞ்சுகின்றோம்.

இந்த அபாய நிலை குறித்து மக்களின் பொறுப்புவாய்ந்த பிரதிநிதி என்ற ரீதியில் நான் அதிக கரிசனை செலுத்தி வருகின்றேன். இது சம்மந்தமாக நான் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவு, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், அம்பரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் என்று பலதரப்பினரிடமும் எடுத்துக்கூறி, சம்மந்தப்பட்டோரை கைது செய்து, நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். எனினும் திருப்திகரமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஏனைய பகுதிகளில் பெரும்பான்மை சமூகத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் அதிரடியாக கைது செய்யப்படுகின்றபோது, எமது பகுதியில் மாத்திரம் இந்நடவடிக்கை மந்தமாக இருப்பது குறித்து சந்தேகப்பட வேண்டியுள்ளது. போதைப்பொருள் ஊடாக எமது சமூகத்தை சீரழித்து, நாசமாக்க விரும்புகின்ற சக்திகள் ஏதும் திட்டமிட்டு செயற்படுகின்றனவா என்கிற சந்தேகமும் எழுகிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (11) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களுடன் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின்போது இவ்விடயத்தில் பாரதூரம் பற்றி அவரிடம் எடுத்துக்கூறினோம். போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அம்பாறை மாவட்டத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டினோம்.

இதையடுத்து எதிர்வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கு கொழும்பில் இருந்து விசேட இராணுவ புலனாய்வுக் குழுவொன்றை அனுப்புவதாகவும் அதற்கான பணிப்புரையை உடனடியாக விடுப்பதாகவும் ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்திருக்கிறார். அத்துடன் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பை பெற்றுத்தாருங்கள் என எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஜனாதிபதி விபரங்கள் அனைத்தும் இரகசியக பாதுக்காக்கப்படும் எனவும் உறுதியாக கூறியுள்ளார். இந்த நடவடிக்கை திருப்திகரமாக இடம்பெறும் என நம்புகின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் இருந்து போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் துடைத்தெறிவதற்கான நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. இது பற்றி இம்மாவட்டத்தின் ஏனைய எம்.பி.க்களுடனும் கலந்துரையாடியுள்ளேன். இதில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களையும் இணைத்து ஒரு கட்டமைப்பாக செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.

இது விடயத்தில் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் அவற்றை பொருட்படுத்தாமல் போதைப்பொருள் பாவனையை இப்பிராந்தியத்தில் இருந்து இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டோம் என சம்மந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எச்சரிக்கையாக கூறி வைக்கின்றேன். உங்கள் அற்ப ஆசைக்காக சமூகத்தை சீரழிக்கின்ற கீழ்த்தரமான வியாபாரத்தை இனியும் முன்னெடுக்காதீர்கள்.

அம்பாறை மாவட்டத்தில் உலமாக்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் எல்லோரும் மக்கள் மத்தியில் இது சம்மந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் போதைப்பொருள் வியாபாரிகளை வெளிப்படுத்துகின்ற விடயத்தில் பொலிஸ் மற்றும் ரானுவத்தினருக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கும் முன்வர வேண்டும் என வினயமாக வேண்டுகின்றேன்- என்றும் ஹரீஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :