அரசியலமைப்பு வரைபு நிபுணர் குழுவுக்கு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் பரிந்துரை.
எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
மாவட்ட இன விகிதாசாரதின் அடிப்படையில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் வேண்டும் என புதிய அரசியலமைப்பு வரையும் நிபுணர் குழுவுக்கு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளதாக கல்முனையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் புதிய அரசியலமைப்பு வரைபு நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைத்த பரிந்துரைகள் தொடர்பாக மேலும் கூறுகையில், இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு என்ற அடிப்படையில் தேசிய இனங்களின் சமத்துவத்தையும், உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுத்தல் வேண்டும் எனவும் இன, மத, மொழி மற்றும் பிரதேசம் என்ற பேதங்கள் இன்றி அனைவரும் இலங்கையர்கள் என எண்ணவைக்கும் அடிப்படையில் ஆட்சி கட்டமைப்பை கொண்டிருத்தல் வேண்டும் எனவும் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.
தேசிய இன விகிதாசாரத்திற்கு ஏற்ப மாவட்ட செயலாளர்களின் நியமனங்கள் அமையப்பெறுதல் வேண்டும், அரச தொழில் வாய்ப்புக்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது மாவட்ட மற்றும் தேசிய இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும் எனவும், மாவட்ட இன விகிதாசார அடிப்படையில் அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், கிழக்கு மாகாணசபையை வடக்கு மாகாணசபையுடன் இணைக்கக்கூடாது என்பதனை புதிய அரசியலமைப்பு உறுதிசெய்தல் வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் வடக்கில் இருந்து புலிப்பயங்கர வாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்ளின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கான விஷேட பொறிமுறைகளை உருவாக்கி மீள்குடியேற்றம் நடைபெற வேண்டும் எனவும், தற்போதைய அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்படுள்ள சிறுபான்மை முஸ்லிம் மக்களின் தனியான சட்டங்கள், உரிமைகளை மேலும் பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு வரையப்படுத்தல் வேண்டும் எனவும், சிறுவர் துஸ்ப்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக பகிரங்கமாக மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும், தகவல் அறியும் சட்டத்தை பலப்படுத்தும் நோக்கில் மாவட்ட அடிப்படையில் மேன்முறையீட்டு விசாரணை அதிகாரிகளை நியமித்தல் வேண்டும் எனவும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம், விவசாய பீடம் மற்றும் கடற்தொழில் துறை பீடங்களை உருவாக்குதல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் கடலரிப்பு அனர்த்த அபாயத்திலிருந்து கரையோரத்தையும், மக்களின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் வேண்டும் எனவும், அம்பாறை கரையோர பிரதேசங்களில் அடர்த்தியாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களுக்காக மேட்டு நிலங்களில் குடியேறுவதற்கான வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்பதனை புதிய அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும் என புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழுவிற்கு தன்னால் அனுப்பிவைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் இவ்வாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment