ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் கீழ் பயிற்சி பெறுவோருக்கான உள்ளகப் பயிற்சியை பிரதேச சபையில் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இராணுவத்தின் பல்நோக்கு அபிவிருத்தி படைப்பிரிவு மற்றும் தேசிய பயிலுநர் கைத்தொழில் அதிகார சபை அதிகாரிகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷைச் நேற்று வெள்ளிக்கிழமை (12) சபையில் சந்தித்து கலந்துரையாடினர்.
அவர்கள் தமது திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோர் ஏற்கனவே சுகாதாரத் திணைக்களத்தில் பயிற்சி பெற்றதாகவும் தற்போது அவர்களுக்கான தொடர் பயிற்சியினை தமது உள்ளுராட்சி மன்றத்தில் தொடர்வதற்கு ஏற்பாடு செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந் நிலையில் தவிசாளர் நிரோஷ், தமது சபையில் ஏற்கனவே பலர் வெளிவாரியாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் நிரந்தர நியமனத்திற்காக நேர்முகத்தேர்வுகளில் தோற்றி அவ் விபரங்கள் அரசதுறை நிறுவனங்களுக்காக அனுமதிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச்செய்தல் விதிமுறைக்கு அமைய, முகாமைத்துவ சேவை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனினும் துரதிஸ்டவசமாக அரசாங்கத்தினால் நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வருடக்கணக்கில் சபைகளில் தொண்டாற்றிய பலர் நியமனம் இன்றித் தவிக்கின்றனர். அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாதிருக்க உள்ளுராட்சி மன்றங்களில் பயிற்சிக்காக புதியவர்கள் வருவது பொருத்தமற்றது.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் பயிற்சிக்கு வருபவர்கள் இங்கு நியமனத்தினைக் கோர சட்டரீதியான உரித்தற்றவர்களாகக் காணப்படினும் அரச கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் பாதிப்படைவர். எனவே பயிற்சி ஆயினும் புதியவர்களை உள்ளீர்ப்பது எமது தொழிலாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்;.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தெழிற்றுறைத் தொழிலாளர்கள், எமது சபைகளில் சுகாதார மற்றும் வெளிக்களத் தொழிலுக்கான தேவைகளே உள்ளன. அதற்கு எம்மிடம் ஏற்கனவே பணியாற்றிய தொழிலாளர்களே தகுதியானவர்கள். எனவே நாம் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களை நியமிக்க பலதரப்பட்ட வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இந் நிலையில் புதியவர்களுக்கு சிற்றூழியர் விடயத்தில் தொழிற்பயிற்சியை எமது சபைவழங்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment