பசில் ராஜபக்சவுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக மாற வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கொழும்பில் வைத்து நேற்று (19)ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
இருபதாம் திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளியிடுகின்ற கருத்துக்களை பார்த்தால் கவலையாக உள்ளது.
இவர்கள் ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என ஆராய்ந்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவுக்கு முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொடுக்கும் ஒப்பந்தம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் ஒருவர் பசில் ராஜபக்ச சிறுபான்மை சமூகத்துக்கு பொருத்தமானவர். அவர் இனவாதமற்றவர் எமது உரிமைகளை பெற்றுத்தருவார் என கூறி திரிகிறார்.
ஜனாஸா எரிப்பு முதல் இப்பொழுது பேசப்படும் நிகாப் ,மத்ரஸா தடை என முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நடைபெற்ற, பேசப்படும்போதெல்லாம் பசில் ராஜபக்ச எதிர்கட்சியிலா உள்ளார்.அவர்தான் இந்த அரசை வழிநடத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.ஆகவே பசில் ராஜபக்சவுக்காக நீங்கள் மக்கள் முன் கோமாளிகளாக மாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
சரத் வீரசேகர என்பவர் ஒரு புஷ்வானம் அவர் கூறுவது எதுவும் நடைபெறுவதில்லை. அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் எழும் சந்தர்ப்பத்தில் அதை திசைதிருப்பவே அவர் பயன்படுத்தப்படுகிறார்.
அண்மையில் பெண் ஒருவரை கொலைசெய்து தலையை துண்டித்து பயணப்பையில் ஒருவர் கொண்டுசென்றார். அதற்காக பயணப்பை ஆபத்தானது என கூறி பயணப்பையை தடைசெய்ய முடியுமா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்கள் புர்கா அணிந்தா தாக்குதலை மேற்கொண்டார்கள்? அவர்கள் டெனிம், டீசெர்ட் அணிந்துகொண்டே தாக்குதலை மேற்கொண்டார்கள் அதற்காக டெனிம் டீசெர்ட்களை தடை செய்ய முடியுமா ?
ஆகவே இவர் கூறும் மத்ரஸா தடை நிகாப் தடை என்பன அரசின் மீது விரக்தி அடைந்துள்ள மக்களை திசை திருப்பும் கருத்துக்கள் மாத்திரமே என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment