ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது, தமிழருக்கு நீதி கிடைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு முன்னேற்றம் ஆகும். இருப்பினும், பேரவையைத் தாண்டித் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படுவது மிக அவசியமானது.
வோஷிங்டன் டி.சி.: மார்ச் 23, 2021 – நல்லிணக்கம், முன்னேற்றம் போன்ற இலங்கையின் பொய்யான விவரணங்களை நிராகரிக்கும், இலங்கை மீதான முக்கியமான தீர்மானமொன்று இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானமானது, இலங்கையில் இடம்பெற்ற சர்வதேசச் சட்டங்களின் பாரதூரமான மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரித்துப் பேணுவதற்கும், இக்குற்றங்கள் தொடர்பிற் பொறுப்புக்கூறலுக்கான சந்தர்ப்பங்கள் இருப்பின், அவை குறித்துத் தெரிவிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகத்தைப் பணிக்கிறது. இத்தீர்மானமானது தமிழ்க் குடிசார் சமூகம் முன்வைத்த வலுவான கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையிற் குறைவுபட்டதாகவே இருந்தாலும், தமிழர்கள் நெடுநாட்களாகக் கோரிவரும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்றைச் சாத்தியப்படுத்தக்கூடிய ஒரு சாதகமான நடவடிக்கையாகும். இச்செயன்முறையின்போது, பேரவைப் பிரதான குழுவின் தலைமைத்துவத்தையும், அவர்கள் தமிழ்க் குழுக்களுடன் இணைந்து இயங்கியமையையும் நாம் வரவேற்கிறோம்.
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை உள்ளடக்கிய பாரிய அட்டூழியங்களைக் கையாள்வதில் மனித உரிமைகள் பேரவைக்குள்ள மட்டுப்பாடுகள் இத்தீர்மானத்தினூடு மீண்டும் தெளிவாகியுள்ளன. பேரவையானது, தீர்க்கமாகச் செயற்படுவதிலும், இலங்கை போன்ற வளைந்து கொடுக்காத அரசுகளைக் கையாள்வதிலும், தனது நோக்கெல்லையாலும், உள்ளார்ந்த அரசியற் தன்மையாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இத்தீர்மானமானது, தமிழ் அரசியற் கட்சிகளும், குடிசார் சமூகக் குழுக்களும் முன்வைத்த கூட்டுக் கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையிற் குறைவுபட்டதாகவே உள்ளது. இத்தீர்மானம், மேலும் விரிவாக அமையாதது குறித்தும், உயர் ஆணையாளரின் அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள வலுவான நடவடிக்கைக்கான அழைப்பினைப் பிரதிபலிப்பதாக அமையாதது குறித்தும் பல பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்கள் ஏமாற்றமடைவர். உலகளாவிய நியாயாதிக்கம் மற்றும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற நீதிக்கான மாற்று வழிகளை அணுகுமாறு பேரவை உறுப்பினர்களை உயர் ஆணையாளரின் அறிக்கை ஊக்குவித்திருந்தது. பிராந்தியத்தில் நீண்டகாலம் உறுதித்தன்மை நிலவுவதற்குச் சர்வதேசச் சமூகமும், விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கினை விரும்புபவர்களும், “பாதிக்கப்பட்டவர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் நீதிக்கான தீர்க்கமான, தைரியமான, தொடர்ச்சியான அழைப்புகளுக்குச் செவிமடுங்கள்” என்ற உயர் ஆணையாளரின் அழைப்புகளுக்குச் செவிசாய்ப்பது அவசியமானது.
இலங்கை மீதான பேரவையின் ஈடுபாட்டிற்கான காரணத்தை நாம் நினைவிற் கொள்வது அவசியமானதாகும். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை, குறிப்பாக 2009 ஆம் ஆண்டிற் கொல்லப்பட்டமையே பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பிற் சர்வதேச நடவடிக்கையைத் தூண்டியது. இலங்கையுடன் பொதுவாகத் தமக்கு இருந்த நல்லுறவைப் பயன்படுத்தி, குறிப்பாக 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில், பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை வழங்கச் சர்வதேசச் சமூகம் தவறியதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொள்ளப்பட வேண்டும். இலங்கை அரசின் பெரும்பான்மைச் சிங்கள-பௌத்த இயல்பின் காரணமாக, ஒரு நம்பகமான உள்நாட்டுப் பொறுப்புக்கூறற் செயன்முறை சாத்தியமற்றது என்பதைத் தமிழர்கள் தொடச்சியாகக் கூறி வந்துள்ளனர். 2009 ஆண்டு முதலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்கள் கூறுவது சரியென்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இலங்கையின் போலியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள், அது ஆதரிக்கும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டது, அரசின் இனத்துவத் தன்மையைக் கருத்திற்கொள்ளாது, பொறுப்புக்கூறலுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய முயல்வது, அத்தகைய முயற்சிகள் தோல்வியுறுவதற்கே வழிவகுக்கும்.
இத்தீர்மானமானது நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு முன்னேற்றம் எனப் பேர்ள் கருதுகின்றபோதும், பேரவையைத் தாண்டித் தீர்க்கமான நடவடிக்கை ஒன்றை உறுப்பு நாடுகள் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உயர் ஆணையாளரின் அறிக்கையிற் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, இலங்கை தொடர்பில், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்குத் தமது ஆதரவினை வழங்குவதற்காகச் சர்வதேசச் சட்த்தின் கீழ் உள்ள கருவிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளின் முழு வீச்சையும் உறுப்பு நாடுகள் பயன்படுத்த வேண்டும். சர்வதேச நீதிமன்றம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற இடங்களிலோ அல்லது சிறப்புத் தற்காலிக நியாயசபை ஒன்றை உருவாக்குவதன் மூலமோ, இலங்கையின் பாரிய அட்டூழியங்களுக்கான பொறுப்புக்கூறலைத் தொடருமாறு நாடுகளைப் பேர்ள் ஊக்குவிக்க விழைகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகத்தினூடு திரட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தித் தமது சொந்த உள்நாட்டு நீதிமன்றங்களில் விசாரணைகளையும், வழக்குகளையும் தொடங்குவதற்காகத் தமிழ்ப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்களது சமூகங்களுடன் இணைந்து பணியாற்றவும் நாடுகளைப் பேர்ள் ஊக்குவிக்கிறது. கடந்த காலங்களில் அதனது நடவடிக்கைகளுடன் இயைந்து போகுமாறு உள்ள இலங்கையின் இன்றைய எதிர்வினை, தீர்க்கமான சர்வதேச நடவடிக்கை ஒன்றே இலங்கைத் தீவில் நீதி மற்றும் நிலையான சமாதானத்தை எட்டுவதற்கான ஓரே வழி என்பதையே காட்டுகிறது.
0 comments :
Post a Comment