பெருந்தோட்டத் தொழிலாளர்களை ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. இதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் துணை நிற்கின்றன என்று அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
பண்டாரவளையில் இன்று (17.03.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என 2015 ஆம் ஆண்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். எனினும், இதற்கு தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இறுதியில் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கும் கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டன. ஆனாலும் ஆயிரம் ரூபா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வருவதற்கு தடைவிதிக்குமாறு கோரி கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. சர்வ அதிகாரங்களும் கொண்ட பலம்பொருந்திய அரசால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கம்பனிகள் சவாலுக்குட்படுத்தியுள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்பது அரசின் உறுதிமொழி. அது எப்படியாவது நிறைவேற்றப்படவேண்டும். எனவே, நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் தனது நிலைப்பாடு என்னவென்பதனை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதேபோல் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களை 'டம்மி' மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றிவருகின்றது. இ.தொகாவினரும், வடிவேல் சுரேசும் கூட ஏமாற்றுகின்றனர். ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம்கூட நாடகம் என்பது எமக்கு தெரியும். இருந்தாலும் தொழிலாளர்களின் நலன் கருதி அமைதி காத்தோம்." - என்றார்.
0 comments :
Post a Comment