கல்முனை மாநகர சபை எல்லையினுள் 65 மீட்டர் கரையோர பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியிருக்கும் தனி நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்படவிருப்பதால், சம்மந்தப்பட்டோர் அக்காணிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென மாநகர சபை உத்தரவிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது;
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 65 மீட்டர் கரையோர பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள பகுதிக்குள் அமைந்துள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களைப் பொறுத்தளவில், 65 மீட்டர் பகுதிக்குள் வீடு, வாசல்களைக் கொண்டிருந்த மக்களுக்கு சுனாமிக்குப் பின்னர் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு விட்டன. ஆகையினால் குறித்த பகுதிக்குள் அமைந்துள்ள காணிகள் எவையும் தற்போது பொதுமக்களுக்கு சொந்தமானவையாக இல்லை.
இக்காணிகள் யாவும் பிரதேச செயலகம், மாநகர சபை, கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் என்பவற்றுக்கு சொந்தமாகக் காணப்படுகின்றன. எனினும் மருதமுனை மற்றும் பெரிய நீலாவணை உள்ளிட்ட பிரதேசங்களில் இத்தகைய காணிகள் சிலவற்றை சில தனிநபர்கள் வேலியிட்டு, கையகப்படுத்தி வைத்திருப்பதாக அறியக்கிடைக்கிறது.
இது மிகவும் பாரதூரமான, சட்டவிரோத நடவடிக்கையாகும். இதனால் தமக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை புரிந்து கொள்ளாமல், இவர்கள் இக்காணிகளை கையகப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்படுவார்களாயின் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் விடுதலை பெற முடியாது என்பதையும் மேல் நீதிமன்றத்தினால் மாத்திரமே பிணை வழங்க முடியும் என்பதையும் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன் பாரதூரம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றோ எமக்கு அறிவுறுத்தல் எதுவும் கிடைக்கவில்லை என்றோ எவரும் கூறி விட முடியாது. இது பற்றி முன்னரும் கல்முனை மாநகர சபையினால் பலமுறை பகிரங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது இறுதி அறிவித்தலாகும். இதன் பின்னர் எவரும் எம்மைக் குறைகூறக்கூடாது.
ஆகையினால், எமது இந்த அறிவுறுத்தலை கவனத்தில் கொண்டு, தம்மால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் குறித்த அரச காணிகளில் இருந்து உடனடியாக வெளியேறி, சட்ட நடவடிக்கையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு சம்மந்தப்பட்டோரை வேண்டிக் கொள்கின்றோம்- என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment