பிரஜா சக்தி மூலம், 'பிரஜா சக்தி தொழிற்சாலை' நிறுவப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்திலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம். ஒரு வருடம்கூட ஆகவில்லை, பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபா போன்ற உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்ததாக வேலையிண்மை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். ஒரிருவருக்கு வேலை வழங்குவது என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அல்ல. தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படவேண்டும். அந்தவகையில் பிரஜா சக்திமூலம் 'பிரஜா சக்தி' தொழிற்சாலை அமைக்கப்படும். முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
அதேபோல கண்டி, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். பிரஜா சக்திமூலம் பல திட்டங்களை முன்னெடுக்கலாம். அதன் பணிப்பாளராக செயற்படும் பாரத் அருள்சாமிக்கு எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள்.
ஆயிரம் தொடர்பில் மட்டுமே பேசுகின்றனர். ஆயிரம் மட்டும் எமது இலக்கு அல்ல. எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உச்சபட்ச நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே பாடுபடுகின்றோம். கூட்டு ஒப்பந்தம் சரியில்லை என்றனர். தற்போது ஆயிரம் ரூபா கிடைத்துள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்கின்றனர். ஊடகங்கள் முன்னால் உரையாடியே சிலர் அரசியல், தொழிற்சங்கம் நடத்துகின்றனர். இவர்களின் இரட்டை வேடம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. நாம் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக அரசியல், தொழிற்சங்கம் நடத்துகின்றோம். எனவே, மக்களை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
20 பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளன. நாமும் நீதிமன்றம் சென்றுள்ளோம். எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ரூபா கிடைக்கும். தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள்." - என்றார்.
0 comments :
Post a Comment