இனங்கள் மத்தியில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக எப்போது பார்த்தாலும் முஸ்லிம்களை "கிண்டு"வதில்த்தான் அந்த ஆட்சி முயன்றது. முஸ்லிம்கள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன உடுக்கிறார்கள், கொத்துக்குள் கர்ப்பத்தடை, ஜட்டிக்குள் கர்ப்பத்தடை, அபாயா, முகம் மூடுதல், அரபு மதுரசா, ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் என இவற்றைத்தான் அரச ஊடகங்களும் தனியார் ஊடகங்களும் பேசின என்று உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீதினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கடந்த 2015ல் நாட்டுக்கு நல்லதொரு ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக சில சிங்கள மக்களும் பல தமிழ், முஸ்லிம் மக்களும் முடிவெடுத்து அவசர அவசரமாக மைத்திரியை தயார் படுத்தி அவரை ஜனாதிபதியாகவும் ரணிலை பிரதமராகவும் ஆக்கினர்.
மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்துவது என்பது இலகுவில் நடக்கக்கூடிய ஒன்றல்ல என்ற நிலையிலும் இறைவன் எதிர்த்தரப்புக்கு சந்தர்ப்பம் வழங்கினான். ஆனால் அந்த ஆட்சி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டில் நல்லாட்சி செய்ததா என்றால் இல்லை என்ற பதிலை அந்த ஆட்சிக்கு ஓட்டுப்போட்டவன் கூட சொல்வான்.
அமைச்சரவையில் பல சிங்களவர்களும், தமிழ், முஸ்லிம்களும் இருந்த போதும் பிரதமர் தலைமையில் இவற்றை மறுத்து மக்களுக்கு விளக்க முடியாத நிலையில் அரசு இருந்தது. போதாக்குறைக்கு அமைச்சர் மனோ கணேசன் போன்ற தமிழ் அமைச்சர்களும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்குள்தான் அரசியல் செய்தனர்.
இவற்றை பயன்படுத்தி மத்திய வங்கி கொள்ளை போன்ற மகா கொள்ளைகளில் அரசு ஈடு பட்டது. அப்போதும் நாம் முஸ்லிம்களை அவர்கள் போக்கில் விடுங்கள் நாட்டை வளப்படுத்துங்கள் என்றோம். ஊடகங்களை திறந்தால் முஸ்லிம்களுக்கெதிரான செய்திகளை தலைப்புச் செய்தியாக்குவதன் மூலம் அரசாங்கம் தனது கள்ளத்தனங்களையும், கொள்ளையடிப்பையும், அரசை கொண்டு செல்ல முடியாத பலவீனத்தையும் மறைத்தது.
அதுபோல் தமிழ் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போகிறோம் என நல்லாட்சிக்கு முட்டுக்கொடுத்த தமிழ் கட்சிகள், தமிழ் மக்கள் பிரச்சினைகளை பார்க்காமல் ஒன்றாய் இருக்கும் கல்முனையை பிரிப்பதிலும், கிழக்கு ஆளுணர் ஹிஸ்புல்லாவை எதிர்ப்பதிலும், சாரியா அபாயாவா என விவாதிப்பதிலும், முஸ்லிம்களை எப்படி ஓரம் கட்டலாம், தம் பங்குக்கு எவற்றை கொள்ளையடிக்கலாம் என்றுமே செயல்பட்டார்கள்.
முஸ்லிம் கட்சிகளோ அரண்மனையில் உள்ள தேவாங்குகள் போல் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் மாட்டு வண்டிலின் கீழ் செல்லும் நாய்கள் போல் முன்னே, பின்னே, மேலே என்ன நடக்கிறது என புரியாமல் மாட்டு வண்டி என்ற அரசாங்கத்தை தாங்கள்தான் வழி நடத்துவதாக எண்ணிக்கொண்டு, அபிவிருத்தி என்றும், வீட்டுத்திட்டங்கள், இதோ கல்முனையை காப்பாற்ற தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு என்று படம் காட்டுவதிலும், மைத்திரி, ரணிலுடன் வெளிநாடுகளுக்கு உல்லாசம் சென்று கூத்தடிப்பதிலும்தான் காலத்தை கழித்தனர்.
கடைசியில் பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாகி அவர்கள் கழுத்தை இறுக்கிய போதும் சஜித் வெல்வார் என கண்ணை மூடிக்கொண்டு மடையர்களாகி, முஸ்லிம்களையும் உசார் மடையர்களாக்கினர்.
நான்கரை வருடங்கள். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் முழுமை அடைந்து வெளியேற 10 மாதங்கள் போதும். முழு அதிகாரங்கள் இருந்தும் நாட்டுக்கு நன்மை செய்யாமல் கள்வர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் உதவுவதற்காக திகன, கண்டி என அரசு கலகக்காரர்களுக்கு உதவியது. தொள்ளாயிரம் கோடி சொத்துக்கள் கொள்ளையிட்ட போதும் ஒரு கொள்ளைக்காரனின் காலில் கூட சுட முடியாத கண்கெட்ட அரசாக இருந்தது.
அதன் பின் மீண்டும் மதுரசா, புர்க்கா, ஹிஸ்புல்லாஹ், என்றுதான் அந்த அரசின் அமைச்சர்கள் பாடினார்கள். கடைசியில் ஜனாதிபதி தேர்தலில் பாரிய படு தோல்வி அடைந்தும் இன்னமும் அவர்களுக்கு புத்தி தெளிந்ததாக காணவில்லை.
இப்போது இந்த அரசில் உள்ள சில அமைச்சர்கள் விடிந்தால் மதுரசா, அரபு மொழி, புர்க்கா, அபாயா என பெண்களின் ஆடைகளுக்குள்தான் எதையாவது தேட முயற்சிப்பது மாற வேண்டும்.
நல்லதொரு நிர்வாக திறமை கொண்ட ஜனாதிபதியும், அரசியல் அனுபவமும் கொண்ட பிரதமரும் இருக்கும் போது எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களை குற்றம் சொல்லும் சில அமைச்சர்கள் இருப்பதால் அரசுக்கு தேவையற்ற சர்வதேச நெருக்கடி ஏற்படுகிறது.
என்னை பொறுத்தவரை இந்த நாட்டுக்கு மிகச்சரியான தலைமைத்துவத்தை வழங்கும் தகுதி இன்னமும் ராஜபக்ஷ குடும்பத்துக்கே உண்டு என்பதில் உறுதியானவன். வண்டிலின் கீழ் வரும் நாய்களின் வாய்களை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலம் கஷ்டமாகிவிடும்.
எப்போது பார்த்தாலும் முஸ்லிம்கள் பற்றியே பேசி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் அடிக்கடி விழிக்காவிட்டாலும் திடீரென விழித்தால் அரசியல்வாதிகள் துண்டைக்காணோம், துணியைக்காணோம் என ஓட வேண்டி வரும். இதுதான் ஜே ஆரின் ஆட்சிக்கும் நடந்தது, ரணிலின் நல்லாட்சிக்கும் நடந்தது.
ஆகவே அரசில் உள்ள எவரும் முஸ்லிம்கள் பற்றி பேசிக்கொண்டு காலத்தை வீணடிக்காமல் நாட்டின் அனைத்து மக்களின் பொருளாதார அபிவிருத்தி, சமூக மேம்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதியும், பிரதமரும் விடுக்க வேண்டும் என்பதே உலமா கட்சியின் ஆலோசனையாகும் என்றார்.
0 comments :
Post a Comment