தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முன்னெடுப்பு. வேலு குமார் கடும் எதிர்ப்பு! கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறுகல்..!



ண்டி மாவட்டத்தில் தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் இதற்கெதிராக தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து, அபிவிருத்தி குழு கூட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரிடம் வினவிய போது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

"கண்டி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சின், பிரஜாசக்தி நிகழ்ச்சி திட்டத்தினூடாக, தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்குவதற்கான அனுமதி கோரி, முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

பெருந்தோட்டங்களில் வாழுகின்ற மக்களின், உரிமை மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கும், மேன்படுத்துவதற்கும் உள்ள அமைச்சினாலும், அதன் கீழ் இயங்குகின்ற "பிரஜாசக்தி" நிகழ்ச்சித் திட்டத்தினாலும் இவ்வாறான ஒரு முன்மொழிவு செய்யப்பட்டிருப்பது கண்டி மாவட்ட தோட்ட மக்களுக்கு செய்கின்ற மாபெரும் துரோகம் ஆகும்.

இம்முன்மொழிவில், கண்டி தெல்தெனிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, ரங்களை தோட்டத்தின் கல்தூரியா பிரிவின் 100 ஏக்கர் காணியும், மெததும்பர பிரதேசத்தில் உள்ள வுக்ஸைட் தோட்டத்தின் 200 ஏக்கர் காணியும் விடுவிக்க கோரப்பட்டுள்ளது. அவ்வாறு விடுவிக்கும் காணிகள் அதன் அருகாமையில் காணப்படும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு விவசாய நடவடிக்கைகளை செய்ய குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்தோட்டடங்களில் வாழுகின்ற மக்கள் கடந்த பல வருடங்களாக தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இவ்வாறான நிலையில், இம்மக்களை ஓரம்கட்டி, இத்தோட்ட பகுதிகளை வெளியாருக்கு வழங்க நமது பிரதிநிதிகளே முன்னிற்பது வேதனைக்குரியதாகும். இக்கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கலந்துகொண்டு எனது கடுமையான எதிர்ப்பை முன்வைத்தேன். அதே வேலை அபிவிருத்தி தேவைகளுக்கு காணிகளை பயன்படுத்துவதாயின் தோட்ட மக்களின் பிரச்சினையை முதலிலே தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். அதற்கு சபையில் கடுமையான எதிர்ப்பை சபையில் ஏனைய தரப்பினர் தெரிவித்தனர். "இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான வேலை திட்டம், அதில் நீங்கள் கூறுவது போல் எல்லாம் செய்ய முடியாது" என்ற தொனியில் கருத்துக்களை முன்வைத்தனர். எனினும், தோட்ட மக்களின் நியாயத்தையும் இதில் உள்ள அசாதாரணத்தையும் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டினேன்.

இத்தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் கடந்த பல வருடங்களாக தமது தொழிலை இழந்துள்ளனர். அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால கொடுப்பனவுகள் கூட நிலுவையாக உள்ளது. இச்சூழலில், இருக்கின்ற காணிகளையும் பிரித்து வெளியாருக்கு கொடுக்கப்பார்க்கின்றனர். இந்நிலை முன்சென்றால் அம்மக்கள் லயன் அறைக்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களாக வாழ வேண்டி ஏற்படும். இதற்கு ஒருபோதும் நாம் சமூகமாக அனுமதிக்க முடியாது. இந்த அரசாங்கத்தில் மலையக மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் எமது மக்களுக்கு நல்லதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை செய்யாமல் இருந்தால் போதும், என்ற நிலையே இப்போது ஏற்பட்டிருக்கின்றது." என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :