ஊடகப்பிரிவு-
சம்மாந்துறை பஸ் டிப்போ மற்றும் அதன் நிர்வாக சேவையை கல்முனைக்கு இடமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, அதனை தரமுயர்த்தும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற, போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில், அமைச்சர்களின் கவனத்துக்கு அவர் கொண்டு வந்தார்.
சம்மாந்துறையிலிருந்து, கல்முனை பிரதான பஸ் டிப்போவுக்கு கொண்டு செல்லப்பட்ட பஸ்களை மீளப்பெற்று, சம்மாந்துறை பஸ் டிப்போவை வழமையான நிலையில் இயங்கச் செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கையை கருத்திற்கொள்வதாகவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர்கள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இந்த விடயம் தொடர்பில், இன்னும் சில தினங்களில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அவர்கள் இந்த சந்திப்பின் போது தெரிவித்தனர்.
1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சம்மாந்துறை உப பஸ் டிப்போவானது, மக்களின் போக்குவரத்துக்கு பெருமளவில் நன்மையளித்து வருகிறது. சம்மாந்துறை மக்களின் பிரதான போக்குவரத்துச் சாலையாக விளங்கிய இது, தென் கிழக்கு பல்கலைக்கழகம், பிரையோக விஞ்ஞான பீடம், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு பெரிதும் துணைபுரிகிறது.
அதுமாத்திரமின்றி, ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் பிரயாணத்துக்கு இந்த பஸ் சேவை உதவுகின்றது. அத்துடன், பல்வேறு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், பணிகளுக்காக செல்லும் பொதுமக்களுக்கும் குறித்த சேவை நன்மையளித்து வருவதையும், இந்த சந்திப்பின்போது ரிஷாட் எம்.பி சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசிம், முஷாரப் ஆகியோரும் குறித்த விடயத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்தனர்.
0 comments :
Post a Comment