கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச காணிகளைக் கையாள்வதற்கான காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் குழு மீளமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச காணிகள் தொடர்பிலான அனைத்து அதிகாரங்களும் பிரதேச செயலாருக்கே உரித்தானதாகும்.
இக்காணிகளுக்கான நிர்வாக முகாமைத்துவம் தொடர்பில் ஏற்படக்கூடிய பிணக்குகள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் குழுவினர் கூடி, ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.
பிரதேச செயலாளர் தலைமையிலான இக்குழுவில் கல்முனை மாநகர மேயர், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை, கரையோரம் பேணல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் மற்றும் தொடர்புடைய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
எதிர்காலங்களில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளை வேறு நிறுவங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையின்போது இக்குழுவின் தீர்மானங்களுக்கமைவாகவே மாவட்ட செயலக காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் குழுவுக்கு முன்னளிப்பு செய்யப்படும் என பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment