'மூதறிஞர் முஹம்மது காஸிம் சித்திலெவ்வை தொடக்கம் கலாநிதி ஷுக்ரி வரை' எனும் தொனிப்பொருளில் முஸ்லிம் கல்விக்கு அளப்பெரும் பணி செய்த கல்வியியலாளர்கள் பற்றி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தொடர் சொற்பொழிவுகள் இடம்பெறவிருப்பதாக முஸ்லிம் திணைக்களப்
பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
புனர்வாழ்வு, மீனவர் வீடமைப்பு மற்றும் மீனவர் நலன் ஆகிய அமைச்சுக்களின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் பன்னூலாசிரியருமான
ஏ.எம் நஹியா இச் சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளார்.
இதன் முதலாவது சொற்பொழிவு 'எம்.ஸி.சித்திலெவ்வையின் முஸ்லிம் சமூக கல்விச் சிந்தனை' எனும் தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிமுதல் பின்வரும் YouTube மற்றும் Facebook இணைப்பினூடாகப் பார்வையிடலாம்.
https://www.facebook.com/1036074906415798/posts/3882924341730826/?d=n
YouTube
https://youtu.be/HjtJpt3CYS8
மூதறிஞர் எம்.ஸி சித்திலெவ்வையின் சமூகப் பின்புலம், கல்விப் பணியில் அவரை ஊக்கிய காரணிகள், ஒராபி பாஷாவுடனான அவரின் தோழமை, கல்விக்கருத்தும் சிந்தனையும், பெண் கல்விப் பங்களிப்பு, கற்றல் கற்பித்தல் கொள்கை, பாலருக்கென அவர் எழுதிய பாடநூல்கள், அவர் நாடெங்கும் ஆரம்பித்த பெண் பாடசாலைகள், கொழும்பில் அவர் தாபித்த புதிய சோனகர்தெருப் பாடசாலை, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி, அவரின் மொழிக் கொள்கை, நாவல் இலக்கியத்துக்கு அவரின் பங்களிப்பு, பத்திராதிபதிராக அவரின் பணி, மெய்ஞ்ஞானப் பங்களிப்பு, அரபுமொழி மேம்பாட்டுபணி, வரலாற்றுப்பார்வை என்பன பற்றியெல்லாம் இவ்வுரையில் கருத்துக்கள் முன்வைக்கப்படவிருக்கின்றன.
இந்த தொடர் சொற்பொழிவுகள், வாப்பிச்சி மரிக்கார், ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ், ஒராபி பாஷா, நீதியரசர் எம்.ரி. அக்பர், சேர். ராஸீக் பரீத், எ.எம்.எ அஸீஸ், பதியுத்தீன் மஹ்மூத், எஸ்.எல்.எம் ஷாபி மரிக்கார், கலாநிதி ஷுக்ரி முதலானோர் பற்றியும் முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்த சுவாமி விபுலானந்தர் பற்றியும் இடம்பெறவுள்ளன.
இச்சொற்பொழிவுகளை நிகழ்த்தவிருக்கின்ற ஏ.எம் நஹியா, கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் உதவி அதிபராகவும் பல்வேறு திணைக்களங்கள், அமைச்சுக்கள், ஆணைக்குழுக்களில் உயர் பதவிகளையும் வகித்தவரும் ஆவார். பன்னூலாசிரியரான இவர், இலங்கையில் முஸ்லிம் கல்வி – ஷாபி மரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். இந்நூல் 2019ஆம் ஆண்டின் சிறந்த சுய புலமைத்துவ மற்றும் சிறந்த ஆய்வுக்கான சாஹித்ய மண்டல விருதையும், 150,000 ரூபா பணப் பரிசையும் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment