20 ஆவது திருத்தத்திற்கு பின்னர் நீதியை நிலை நாட்டும் செயற்பாட்டில் பாரதூரமான பாதிப்பு



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அண்மையில் (23.04.2021) பாராளுமன்றத்தில், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
னது உரையை மார்ச் மாதம் 07ஆம் திகதி “சண்டே டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான செய்தியொன்றை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கின்றேன். அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஆணைக்குழு விசாரணையின் அறிக்கை தொடர்பில் சிரே~;ட வழக்கறிஞர்கள் கவனஞ்செலுத்தி இருப்பதாக அச்செய்தியில் காணப்படுகின்றது. பதினொரு ஜனாதிபதி சட்டத்தரணிகளும், சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் ஒருவருமாக அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள பல விடயங்கள் இந்நாட்டின் சட்டத்தின் ஆட்சியை பாரதூரமான முறையில் பாதிப்பதாகவும், நீதித் துறையின் சுயாதீனத்தை கட்டுப்படுத்துவதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு பாரபட்சமான விதத்தில் ஊறு விளைவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நாட்டின் முன்னணி சட்டத்துறை வல்லுனர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை அடிப்படையாக கொண்ட செய்தியே அதுவாகும்.

இதனை ஜனாதிபதி சட்டத்தரணிகளான கணகீஸ்வரன், இக்ரம் முஹம்மத், பாயிஸ் முஸ்தபா, உபாலி குணரத்ன, ஜெப்ரி அழகரட்ணம், ரொமே~; டீ சில்வா, கலாநிதி விஜயதாஸ ராஜபக்~, யூ.ஆர்.டீ.சில்வா, நிஹால் ஜயமான, உபுல் ஜயசூரிய, சாலிய பீரிஸ் போன்றோர் அனுப்பிவைத்துள்ளனர். இவர்களில் இந்த அரசாங்கத்திற்கு சார்பாக வழக்குகளில் தோன்றும் சிரே~;ட சட்ட அறிஞர்களும் உள்ளனர்.

பிரஸ்தாப ஆணைக்குழுவின் அறிக்கையானது, இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், படுபாதாளத்திற்குள் தள்ளுவதாகவும் அந்த சட்ட நிபுணர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர். ஆகையால், இந்த காரணத்தை முன்வைத்துத்தான் எனது கருத்துக்களை எடுத்துக்கூற விழைகின்றேன்.

நேற்றும், இன்றும் இந்த சபையில் அரச தரப்பு உறுப்பினர்கள் கூட, பிரளாபிப்பதை கண்டோம். அவர்கள் சிலர் சிறையில் இருக்க நேர்ந்த போது, அவர்கள் அனுபவித்த துன்பத்தை அறிந்து நாங்களும் கவலைப்படுகின்றோம். ஆனால், அதனிடையே ஒரு காரணத்தை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். அதாவது, இவ்வாறான செயற்பாடுகளினூடாக அவற்றை நிவர்த்திக்க முற்படாதீர்கள். அவற்றிற்கு வேறு வழிவகைகள் உள்ளன. நீதிமன்றங்கள் உள்ளன. அவற்றின் முன்னால் சென்று காரணங்களை எடுத்துக் கூறுங்கள்.

இந்நாட்டின் நீதித்துறைக்கு இதனால் ஏற்படும் பாதிப்பை ஆளும் தரப்பில் இருக்கும் உங்களைச் சார்ந்த வழக்கறிஞர்களே குறிப்பிடுவதை மறந்துவிடாதீர்கள். முதன் முறையாக டொமினிகன் அந்தஸ்த்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பிற்பாடு 1948ஆம் ஆண்டளவில் இத்தகைய ஆணைக்குழுக்கள் தோற்றம் பெற்றன. அன்று தொட்டு மாறி மாறி வரும் அரசாங்கங்களில் பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளன.

இன்றும் கூட, கூட்டங்களுக்குச் செல்லும் போது பழிவாங்கலால் பாதிக்கப்பட்ட மக்கள் பைல் கோவைகளை காவிக்கொண்டு எங்களை நாடி வருகின்றனர். அரசியலில் ஈடுபடாத போதிலும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அரச ஊழியர்கள் கூட, எதிரானவர்களாகத் தான் தோலுரித்துக் காட்டப்படுகின்றனர். அவ்வாறாக தவறாக கணிக்கப்படுவதனால் பாதிப்புக்குள்ளானோர் இந்த நாட்டில் ஏராளமாகவுள்ளனர். அவர்களுக்காக பேசுவதற்கு யாருமே இல்லை. அவர்களது பரிதவிப்பை எவரும் புரிந்துகொள்வதாகவும் இல்லை.

எவ்விதமான அரசியல் சார்புமின்றி, சுயமாக செயலாற்றுபவர்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை. தங்களுக்கு தேவையானவர்களை மட்டும் தெரிந்தேடுத்து கவனிப்பதன் மூலம் அநியாயமாக பாதிக்கப்படும் ஏனைய மக்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். அரசியல் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களினூடாக பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலைமையை பற்றி நாம் சீர்தூக்கிப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்.

அத்துடன், விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான தேவைப்பாடு என்ன என்பதிலும், நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான ஆணைக்குழுக்களில் இடம்பெறுகின்ற ஆணையாளர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றி இந்தச் சபையில் பலரும் விமர்சித்தனர். அவ்வாறு யாரை பற்றியும் குறிப்பிட்டு கூறுவதற்கு நான் விரும்புவதில்லை. அமைச்சர்கள் பற்றியும் நான் முன்னரும் தவறாகக் கூறவில்லை. இப்பொழுதும் அவ்வாறு பிழையாக கூறுவதில்லை. அவ்வாறு அவர்களில் குறை காணும் எந்தத் தேவையும் எனக்கில்லை.

ஆனால், இந்த நாட்டின் பொது நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த செயற்பாட்டின் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரி ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் நிலைமையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றார். அந்த திணைக்களத்திலும் இதனால் நிலைமை மோசமாகியுள்ளது. இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் சட்டமா அதிபரே அதன் முன்னிலையில் தோன்றி அதன் செயற்பாட்டினூடாக தனது திணைக்களத்தின் அதிகாரிகள் வேட்டையாடப்படுவதாகக் கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல், வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கும் இது சவாலாக இருந்து வருகின்றது. எங்குமில்லாதவாறு புதுமையான விதத்தில் சட்டத்தின் ஆட்சிக்கு இவ்வாறாக பாரதூரமாக அடி விழுந்திருக்கின்றது. எனவே, இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுங்கள். விசேட ஆணைக்குழுவை அமைக்கும் காரணம் எல்லோரும் அறிந்ததே. 1978ஆம் ஆண்டில் சட்டத்தின் மூலம் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஏற்படுத்திய ஆணைக்குழுவினால் சிறிமாவே பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ஏ.எச்.எம்.பௌசி, நிஹால் ஜயவிக்ரம ஆகியோரின் பிரஜாவுரிமையை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருபோதும் அது சாத்தியமாகவில்லை.

நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த ஆணைக்குழு தொடர்பிலான தனது நியாயங்களை இங்கு எடுத்துரைத்த போது, அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே “என்ன பயமாக இருக்கின்றதா? ”என்று அவரை நோக்கி அச்சுறுத்தும் தொனியில் சத்தமிட்டுக்கொண்டு இருந்தார். அதிலிருந்து எங்களை பயமுறுத்துவதற்காக இதனைக் கொண்டுவந்திருக்கின்றார்களா? என்று எண்ணத் தோன்றுகின்றது.

பயமுறுத்தாதீர்கள், நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல. நாங்கள் அதனால் சளைத்துவிடப் போவதும் இல்லை. ஜே.ஆர். செய்த அந்த காரியத்தினால் என்ன நடந்தது? ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க நேர்ந்தது.

அவ்வளவு தூரம் இவ்வாறான கீழ்த்தரமான அற்பமான காரியத்தை அவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு அவர்கள் செய்வதானால் நாங்கள் அதற்கு அஞ்சப் போவதும் இல்லை. முடியுமானால் செய்து காட்டுங்கள். அவ்வாறு செய்ததனால் இறுதியில் ஜே.ஆர்.க்கு என்ன நடந்தது?
1983ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் அதன் பழியை ஜே.வி.பி.யின் மீது சுமத்த எத்தனித்ததன் விளைவாக என்ன நடந்தது? ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக்கு அதுவே காரணமாக அமைந்தது என்று தான் கூறப்படுகின்றது.


அரசியல் பழிவாங்கல்களை பொறுத்தவரை அரசாங்கம் மாறும் போது அவ்வாறு நடப்பது வழக்கமாகிவிட்டது. (இந்தக் கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் பெயரை சம்பந்தப்படுத்தி ஆளும் தரப்பிலிருந்து கூச்சல் எழுந்தது). மறைந்த பிரேமதாஸவை சம்பந்தப்படுத்தி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது முடிச்சுப் போட எத்தனிக்காதீர்கள். அவரது தந்தையாரை பற்றிக் கூறியது உங்களது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் இந்த நாட்டின் முக்கியமான நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்காதீர்கள். உரிய முறையில் நீதிமன்றங்களுக்குச் சென்று உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னர் இவ்வேலைத்திட்டம் “செம்மை” யாக முன்கொண்டு செல்லப்படுகின்றது. அதற்கு எவ்வித குறைச்சலும் இல்லை. இப்பொழுது எத்தனையோ பேர் விடுதலையாகிவிட்டனர்.

20ஆவது திருத்தத்திற்கு பின்னர் நீதியை நிலை நாட்டும் செயற்பாட்டில் பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவாக, மக்கள் மத்தியில் இருந்த நீதிமன்ற கட்டமைப்பு, சட்டத்தின் ஆட்சி என்பன பற்றிய நம்பிக்கை முற்றாகவே தவிடு பொடியாகிவிட்டது. அதனை மேலும் முன்கொண்டு சென்று அதல பாதாளத்தில் வீழவேண்டாம் என வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :