தேர்தல் முறைமைகள், எல்லை நிர்ணயங்கள், ஏனைய பரிந்துரைகள் அரசாங்கத்தால் கோரப்பட்டபோது முஸ்லிம் அரசியல்துறையால் முஸ்லிம் அறிஞர்கள் கண்டு கொள்ளப்படவுமில்லை. முஸ்லிம்கள் புறத்திலிருந்து சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகளும் மிகச் சொற்பமாக இருக்கின்றன. எனவே முஸ்லிம் அரசியலில் தேக்கநிலையடைந்துள்ள அறிஞர், புத்திஜீவிகளின் வெற்றிடங்கள் விரைவாக நிரப்பட வேண்டும் என
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் வேண்டுகோள் விடுத்தார்.
மருதமுனையைப் சேர்ந்த சட்டத்தரணி றுடானி ஸாஹிரால் தொகுக்கப்பட்ட 'அபுல்கலாம் பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)' நூல் வெளியீட்டு விழா (10) மருதமுனை, பொது நூலக கேட்போர் கூடமான மர்ஹும் செனட்டர் மசூர் மௌலானா நினைவரங்கில் இடம்பெற்றது.
நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவினது கல்வி, சமூக, சமய, அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பழீல் மௌலானா பவுண்டேஷன் அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை முஸ்லிம் சமூகத்தை அடையாளமிழப்புச் செய்கின்ற சதிகள் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. அது இனவெறுப்பு வடிவில் பிரஜையின் மனங்கள் தொடக்கம் திருமணச் சட்டத்தில் "முஸ்லிம்கள் தவிர்ந்த" என்ற சொல்லை நீக்கி விடுங்கள் என்ற ரத்ன தேரரின் பிரேரணைவரை மிக விசாலித்திருக்கிறது.
மறுமுனையிலிருந்து தமது கலாசாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போரை எவ்வாறு முகங்கொள்வது என்பது குறித்து முஸ்லிம் சமூகம் இன்று திணறி நிற்கிறது. தமது அடையாள இருப்பு குறித்த தடயங்களை வரலாற்றில் ஆழமாக ஊன்றி வைக்க ஏதுவான சம்பவங்கள் எத்தனையோ நிகழ்ந்திருக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகம் அவற்றை வராலாற்று ஆவணங்களாக நிலைக்கச் செய்ய தவறி வந்துள்ளது. ஏனைய சமூகங்களால் ஒரு நடுநிலைச் சமுதாயமாக நோக்கப்பட்டு நெருக்குவாரங்களின்றிய வாழ்வியல் ஒழுங்கை அண்மைக் காலம் வரை கொண்டிருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இருப்பினும் முஸ்லிம் சமூகத்தை அடையாள நிர்மூலம் செய்கின்ற ஒரு கலாசார படையெடுப்பு பற்றி புத்திஜீவிகளால் ஏற்கனவே ஆங்காங்கே எச்சரிக்கப்பட்டிருந்தும் அதனை முஸ்லிம் அரசியலும், சமூகமும் கண்டு கொள்ளத் தவறிவிட்டது.
அரசியல் வட்டம் கட்சியரசிலியலிலும், ஆன்மீக வட்டம் வகுப்பு வாதத்திலும் ஆழ்ந்து சென்று முஸ்லிம் சமூகம் என்ற பெரும் பலத்தை பல கூறுகளாக உடைத்து விட்டன. கட்சிவாதம், வகுப்புவாதங்களினுள் ஆழமாக ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் தமது வாசிப்பை, தமது பார்வையை சுருக்கின் கொண்டார்கள். கடும்போக்காளர்களாக உருவெடுத்தார்கள்.
இந்த கடும்போக்கு வாதங்கள் எந்தவொரு விடயத்தையும் பரந்துபட்டு நோக்காது அவற்றை குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொண்டன. தொப்பிகள் கழட்டப்பட்டன. ஒரு சமூகம் தமது தொல்லியல் அடையாளத்தை தாமே இடித்து நொருக்கும் அவல சம்பவமும் நிகழ்ந்தது.
அறிஞர், புத்திஜீவிகளின் எந்த ஒரு கருத்தையும் அரசியல் கண்ணாடியினூடு அல்லது ஜமாஅத் கண்ணாடியினூடு பார்ப்பது வழக்கமாகிப் போனது. தூரநோக்கு கொண்ட புத்திஜீவிகளின் மிதவாதக் கருத்துக்கள் எள்ளி நகையாடப்பட்டன. கடும்போக்காளர்களினால் அறிஞர்களின் கெளரவம் சிதைக்கப்பட்டது. அவர்கள் விக்கித்து நின்றார்கள்.
சமுதாயத்தின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள சதிகளை எப்படி முகங்கொடுப்பது, அதற்கு யார் தலைமை வகிப்பது என்ற இக்கட்டான இடத்தில் வந்து நிற்கின்ற இன்றைய சூழ்நிலையில் கட்சிகளாகவும், ஜமாத்துக்களாகவும் கூறுபட்டு வெவ்வேறு கொள்கைகளில் உறைந்து போய் கிடக்கின்ற சிதைந்த சமூகமாக நாம் நிற்கின்றோம்.
இப்பொழுது அரசியலும், ஆன்மீகமும், அறிவியலும் மூன்று திசைகளில் துருவப்பட்டுப் போன ஒரு சிதைந்த சமுதாயமாகவே முஸ்லிம் சமூகம் நின்று கொண்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்க வேண்டிய பொருப்பு அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும், அறிஞர்-புத்திஜீகளுக்கும் இருக்கிறது.
ஆன்மீகத்தால் ஒருங்குபட்ட, அறிஞர்களால் வழிநடாத்தப்படுகின்ற அரசியல் போக்கை கொண்டிருக்கின்ற ஓர் அறிவார்ந்த சமூகத்தால் மட்டுமே வரலாற்றில் தமது இருப்பை உறுதி செய்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ முடியும்.
இளைஞர்கள் தமது வாசிப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும். விடயங்களை பரந்த நோக்கில் அணுக அது ஒன்றே வழி. ஒவ்வொருவரும் தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளின் சிறு சலுகைகளுக்கு விலைபோய் அல்லது கடும்போக்காளர்களின் கொள்கைகளுக்குள் தொலைந்து போய் அவர்களால் ஆட்டுவிக்கப்படுகின்ற அவலத்திலிருந்து இளைஞர்கள் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
எதிர்வர இருக்கின்ற நாட்களில் நாம் முகங்கொடுக்க இருக்கின்ற அடக்குமுறைகளை மிகச் புத்திசாதூர்யமாக அணுகி வெற்றி கொள்ள வேண்டும் என்றார்.
பழீல் மௌலானா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும் தேசிய கல்வி நிறுவகத்தின் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸர்ரப் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா ஆகியோரும்
விஷேட அதிதியாக கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீபும் கலந்து கொண்டனர்.
நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் றுடானி ஸாஹிர் தனது தாய், தந்தையருக்கு வழங்கினார்.
நிகழ்வின் முக்கிய நிகழ்வாக பழீல் மௌலானா நினைவாக மட்டுப்படுத்தப்பட்ட தபால்தலை (முத்திரை) அன்றைய தினம் வெளியிடப்பட்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவ,ல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் (நளீமி) நிகழ்வில்
சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.ஏ. லத்தீப், கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ஜலாலுத்தீன்(கபூரி), ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எம்.ஏ.சமது, இஸ்மாயில் மௌலானா, முன்னாள் செனட்டர் மர்ஹும்
மசூர் மௌலானாவின் புதல்வர்களான மௌலானா சன்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அக்ரம் மௌலானா மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜயா கொள்கலன் இறங்கு துறையின் கட்டுப்பாட்டு அறையின் முகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) தேசகீர்த்தி இல்ஹாம் மௌலானா, மற்றும் முன்னாள் சதொச முகாமையாளர் எப்.ஆர்.மௌலானா மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விமான்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் பழீல் மௌலானாவின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பிறை எப்.எம் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் பசீர் அப்துல் கையூம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
0 comments :
Post a Comment