உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு, இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற போது, கட்சியின் தவிசாளர் சட்டத்தரணி அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், செயலாளர் சுபைர்தீன், சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போது, கட்சியின் தவிசாளர் அமீர் அலி கருத்துத் தெரிவிக்கையில்,
அநீதியான முறையில் இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது. ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் ரிஷாட் பதியுதீன், இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் ஒன்றின் தலைவராகவும் விளங்குகின்றார். அவர் இவ்வாறு அருவருப்பாகவும் அசிங்கமாகவும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமானால், சபாநாயகரின் அனுமதி பெறப்படல் வேண்டும். அல்லது கைது செய்யப்படுவதற்கான காரணமேனும் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், கைது செய்ய வந்தவர்கள் இவரை எப்படியாவது கொண்டுசெல்ல வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருந்தனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, கொலோசஸ் நிறுவனத்துக்கு பித்தளை வழங்கியது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேதான், கட்சியின் தலைவர் ரிஷாட் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு கடந்த வாரம் சென்று, இது தொடர்பில் விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். கடந்த காலங்களில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும், ரிஷாட் பதியுதீனுக்கு ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் எந்தத் தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபரும், தற்போதைய பொலிஸ்மா அதிபருமான சி.டி.விக்ரமரத்னவே இவ்வாறு எழுத்துமூலம் அறிவித்தார்.
கொலோசஸ் நிறுவனத்துக்கு பித்தளை வழங்கும் விடயத்தில், அப்போதைய ஜனாதிபதி செயலகமும் பாதுகாப்பு அமைச்சும் சிபாரிசுக் கடிதங்கள் வழங்கியிருந்த நிலையிலும், ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திறமையான அமைச்சர் ஒருவரின் கீழிருந்த நிறுவனம் ஒன்றின் செயல்பாட்டுக்காக தலைவர் ரிஷாட் பழிவாங்கப்பட்டுள்ளார்.
இவரின் அவசர அவசரமான நடுநிசிக் கைது யாரை திருப்த்திப்படுத்துவதற்காக? என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.
பொதுவாக இந்த விவகாரத்திலே “முக்கியமான விடயம் ஒன்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பேன்” என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெளிவாகக் கூறினார். நாட்டிலுள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் அவரின் வார்த்தையை எதிர்பார்த்திருந்தோம். இந்த நாட்டிலே அரசியல் தேவைப்பாட்டுக்காக, இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அவர் தெளிவாகக் கூறினார். இந்தத் தாக்குதலின் பின்னணியுள்ள சூத்திரதாரிகள் யார்? என்பதையும், இந்தத் தாக்குதல் என் நடாத்தப்பட்டது? என்பதையும் வெளிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு கர்தினாலுக்கு எவ்வாறு இருக்கின்றதோ, முஸ்லிம் சமூகத்துக்கும் அவ்வாறான தேவைப்பாடு இருக்கின்றது. இந்த நிலையில், கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காக எமது தலைவர் கைது செய்யப்பட்டாரா? என்றும் எண்ணத் தோன்றுகிறது.
தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், சுமார் ஐந்தரை மாதங்களின் பின்னர், தடுப்புக்காவலில் இருந்து சி.ஐ.டி யினரால் விடுவிக்கப்பட்ட போது, ‘ஏதாவது டீல் இருக்கின்றதா’ என்றும் கர்தினால் கேட்டார்.
ஆனால், அரசாங்கத்துக்கும் எமது கட்சிக்கும் இடையில் எந்த டீலும் இல்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றோம். எமது தலைவரின் கைது சட்டவிரோதமானது. ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்தக் காட்டுமிராண்டித் தனமான அரசியல் சித்தாந்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையையே எமது கட்சி அபிமானிகள் இந்த புனித ரமழானில் இறைவனிடம் கேட்க வேண்டும், அதேபோன்று இதே பிரார்த்தனையை இந்த நாட்டு முஸ்லிம்களும் கேட்க வேண்டும்.
இந்த ஊடக சந்திப்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கருத்து தெரிவித்த போது,
“எமது தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட முறைமைகள் சரியான விதத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அறிக்கையில் கூறப்பட்டவாறு இதுவரை எந்தவொரு நபருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எதுவும் ஆரம்பிக்கப்படாத நிலையில், ரிஷாட் பதியுதீன் மாத்திரம் அறிக்கையில் கூறப்பட்டமைக்கு மாற்றமாக கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் நோக்கம் கொண்டதான கைது என அப்பட்டமாகத் தெரிகின்றது.
அவர் திட்டமிட்ட அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் ரிஷாட் பதியுதீனோ அல்லது வேறு எந்த முஸ்லிமோ அல்ல’ என பாராளுமன்ற விவாதங்களில் இருந்து துலாம்பரமாக தெரிகின்றது. சூத்திரதாரி வேறு யாரோ என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். இது சிங்கள சமூகமும் இதை உணரத் தொடங்கியுள்ளது. ரிஷாட் பதியுதீன் மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, எல்லாமே புஸ்வாணம் ஆகிவிட்ட நிலையில். இப்போது காரணமில்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment