உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 97ஆவது துறவறதினவிழா (26)திங்கட்கிழமை சித்ராபௌர்ணமியன்று சுவாமிகள் பிறந்த காரைதீவில் சுகாதாரவழிகாட்டலுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சுவாமி விபுலாநந்த அடிகளார் 1924ஆம் ஆண்டில் இதேபோன்றொரு சித்ராபௌர்ணமி தினத்தில்தான் துறவறத்தை மேற்கொண்டார்.பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ணபரமஹம்சரின் நேரடிச்சீடரான சுவாமி சிவானந்தரிடமிருந்து துறவற ஞானோபதேசம் பெற்றுத் துறவியானார்.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம் இணைந்து நடாத்திய துறவறதினவிழா மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மஹராஜ் முன்னிலையில் பணிமன்றத்தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக இச்சிறப்புதினத்தில் சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை புஸ்பாஞ்சலி செலுத்தி காவிவஸ்திரம் அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது.
சுவாமி விபுலாநந்த கற்கைநிலையத்தின் ஏற்பாட்டில் பண்ணிசை மற்றும் பரதநாட்டிய வகுப்புகளின் அங்குரார்ப்பண நிகழ்வுகளும் அதே மணிமண்டபத்தில் நடைபெற்றன.தேசியகல்விநிறுவக நடனத்துறை தலைவர் முனைவர் திருமதி ராகினி திருக்குமரன் கலந்துசிறப்பித்தார்.அதேவேளை மணிமண்டபத்தில் 'வித்தியகூடம்'; எனும் நூலகமும் திறந்துவைக்கப்பட்டு அங்கு அறநெறி நீதிநூல்களின் கண்காட்சியும் இடம்பெற்றன.
பின்பு மணிமண்டப விபுலாநந்த கலாலயத்தில் துறவறதினபொதுக்கூட்டம் நடைபெற்றது.
விழாவில் பிரதமஅதிதியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் வேதநாயகம் ஜெகதீசன் சிறப்பதிதியான காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ஆகியோரும் உரையாற்றினர்.
97ஆவது துறவறதினத்தையொட்டி இந்துகலாசார திணைக்களம் தயாரித்த சுவாமிவிபுலாநந்தரின் திருவுருவப்படம் வெளியிட்டுவைக்கப்பட்டது.இந்துகலாசாரத்திணைக்களம் வெளியிட்ட நீதி துணைநூல்கள் அறநெறிமாணவர்க்கு வழங்கப்பட்டன. திணைக்களத்தினால் 5 அறநெறிவகுப்புகளுக்கு சுருதிப்பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.
'ஆன்மிகம் ஒன்றுதான் மனிதசமுதாயத்தை நல்வழிப்படுத்தும்.ஆன்மிகம் சிறப்பாக தொழிற்பட்டால் ஏனைய அனைத்தும் நல்வழியில் சிறப்பாக இயங்கும்.இதைத்தான் சுவாமி விவேகாநந்தர் முதல் சுவாமி விபுலாநந்த அடிகளார் வரை கூறியிருந்தனா'; என்று துறவறதினவிழாவில் உரையாற்றிய மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மஹராஜ் தெரிவித்தார்.
அங்கு சுவாமி மேலும் உரையாற்றுகையில்:
சுவாமிக்கு விழா எடுப்பதானால் மிகப்பொருத்தமான தினம் இந்த துறவறதினம்தான்.பிறந்த மரணித்த தினங்களைவிட சுவாமிகளுக்கு மிகவும் சாலப்பொருத்தமான தினம் இதுதான்.
இந்துமதம் ஒன்றுதான் ஆன்மிகப்பட்ட மதம்.அது ஒன்றாகஇருந்தால் ஏனைய சமயங்களும் நன்றாகஇருக்கும். இன்று அரசியல்கட்சிகள் போல சமயங்களும் மலிந்துவிட்டன.
இந்துமதத்தின் ஒரு அங்கம் தமிழ். மொழிமுக்கியம் புத்தமதத்தையும் ஒருகாலத்தில் வழிகாட்டியது இந்துமதமே.இந்துமதம்தான் ஆன்மீகப்பட்ட ஒரு மதம்.இந்துமதத்தின் ஒரு அங்கமே தமிழ்மொழி. அம்மொழியை நன்கு தெரிந்திருக்கவேண்டும்.
தமிழ்மொழி முக்கியமானது. இந்துமதத்தை பின்பற்றுவதனால் தமிழ் தெரியவெண்டும். தமிழ்மொழயில் தொல்காப்பியம் பழமையானது என்பது தவறு. அதற்கு முன் ஏராளமான சமயநூல்கள் இருந்தன. அவையனைத்தும் சமணர்களால் எரிக்கப்பட்டன.அதனால்தான் தொல்காப்பியம் பழையது என்கிறோம்.
முதன்முதலில் நல்லதம்பிப்பிள்ளை என்பார்தான் உலகெங்கும் சைவசமயத்தை பரப்பியவர். ஆங்கிலபுலமை அவருக்கிருந்தது. சைவசமயத்தை பார்க்கவேண்டுமானால் சுவாமி விவேகாநந்தரை பார்கக்வேண்டும என்கிறார் அவர்.
சுவாமிவிபுலாநந்தர் சுவரி சிவானந்தரால் தீட்சை பெற்றகாலம் இந்துமதத்தின் இருண்டகாலம் .ஆங்கிலக்கல்வியின் தாக்கம் அபரிமிதமாகவிருந்தது.
. ஒரு தடவை இ.கி.மி ரங்கரானந்தாஜீயிடம் இந்திய அரசு தங்களுக்கு மானிடசேவைக்காக பத்மவிபுசணம் அல்லது பாரதரத்னா பட்டத்தை தருகிறோம் என்று கேட்டது.ஆனால் சுவாமியோ மறுத்துவிட்டார். இதைவிடச்சிறந்த பட்டம் சுவாமி என்பது அதுபோதும்.அதுதான் பெருமை. அந்தப்பட்டத்திற்கு மேலாக எதுவும் தரமுடியாது.சுவாமியும் அப்படியே.முத்தமிழ்வித்தகர் மகத்துவமான மகுடம்.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு தயவான வேண்டுகோள். கர்நாடகத்திற்குள் மேலைத்தேய இசையைசேர்ப்பது தவறு.
மாணவரிடையே எந்தப்பாகுபாடுமில்லாமல் கல்வியை வழங்கியவர் சுவாமி. ஆன்மிகம் பெரியதொரு வரப்பிரசாதம்.
எல்லோராலும் போற்றப்படும் யாழ்நூலை அனைவராலும் படிக்கமுடியாது. விளக்கவுரையை எழுதி மக்கள்மத்தியில் பரப்பவேண்டும்.அனைவரும் படிக்கவேண்டும்.பயன்பெறவேண்டும்.
யாழ்நூலை விளக்கவுரையுடன் பலரும் படிக்கத்தக்கதாக இலகுவாக்க கல்லடி விபுலாநந்த அழகியல்கற்றை நிறுவகப்பணிப்பாளரிடம் கோரியுள்ளேன். நிறைவேறும் என எண்ணுகிறேன்.
கல்லடியிலுள்ள சுவாமியின் சமாதியில் அருங்காட்சியம் அமைக்கப்படவுள்ளது. அதில் அவரது ஒட்டுமொத்த விடயங்கள் காட்சிப்படுத்தப்படவேண்டும்.எனவே அதற்காக தமிழ்கூறுநல்லுகம் உதவேண்டும் என்றார்.
பலவித கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.மன்றச்செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரை நிகழ்த்த கலாசாரஅலுவலர் என்.பிரதாப் நிகழ்ச்சிகளை அழகாகக் தொகுத்துவழங்கினார்.
0 comments :
Post a Comment