தற்போது பரவியுள்ள கொவிட் பரவலை கட்டுப்படுத்த மக்கள் இச்சந்தர்ப்பத்தில் கூடிய பொறுப்புடன் செயற்படல் இன்றியமையாயதது என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
மாவட்ட கொவிட் செயலணிக்கூட்டம் இன்று (28)மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இவற்றை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும். மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படாவிட்டால் இதன் பாதிப்பு மிக அதிகமானதாக அமையலாம். எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை கழுவல், சமூக இடைவெளி பேணல், அநாவசிய நடமாட்டத்தை குறைத்தல் என்பனவற்றை பேணல் மிக முக்கியமானதாகும். சில பிரதேசங்களில் உள்ள மக்கள் முகக்கவசம் இன்றி நடமாடுவதாக அறியப்படுகின்றது. இவ்விடயம் மிக பாரதூரமானதாகும்.முகக்கவசம் இன்றி நடமாடுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவுள்ளார்கள்.அத்துடன் இராணுவம் மற்றும் பொலிசார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இதன் மூலம் மக்களது அநாவசிய நடமாட்டத்தை கட்டுப்படுத்தமுடியும்.
அநாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகளவில் உள்ளனர். இதன்காரணமாக கொவிட் பரவல் ஏற்படக்கூடிய நிலை ஏற்படலாம். எனவே மாதாந்த சிகிச்சைக்கு வருபவர்களின் வருகையை கட்டுப்படுத்தி அவர்களது மாத்திரைகளை வீடுகளுக்கே கொண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் 13 க்கு மேற்பட்ட ஆளணியினருக்கு கொவிட் தொற்று பரவியுள்ளது. நோயாளிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டவர்கள் மாத்திரம் நோயாளிகளை பார்வையிட வைத்தியசாலைக்கு வருகை தரல் வேண்டும்.
மக்கள் வெளியேறலை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியவசியப்பொருட்கள் உட்பட தேவையான பொருட்களை வீடுகளுக்கு நடமாடும் சேவை ஊடே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே மக்கள் தேவையான பொருட்களை வெளியே சென்று பெற்றுக்கொள்வதனை விட பாதுகாப்பாக காலடியிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பூம்புகார் கிராமசேவகர் பிரிவில் அண்ணளவாக 80க்கு மேற்பட்ட கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் கொடுப்பனவு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொவிட் பரவலை அடிப்படையாக கொண்டு கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் மாவட்டத்தின் சில வைத்தியாசாலைகளின் வசதிவாய்ப்புக்கள் அபிவிருத்தி செய்யப்பவுள்ளன.
அரச நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள்,பொதுப்போக்குவரத்து உட்பட ஏனைய சேவைகளும் உரிய சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி செயற்படல்வேண்டும்.அது தொடர்பில் உரிய பொறுப்பதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தற்போது பரவியுள்ள கொவிட் பரவலை கட்டுப்படுத்தி எமது செயற்பாடுகளை சுமூகமாக மேற்கொள்ளும் வகையில் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து செயற்படுமாறும் இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், சுகாதார திணைக்கள அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment