செளபாக்கிய உற்பத்திக்கிராமத்தின் மூலம் வருமானம் குறைந்த மக்களின் தொழில் முயற்சிகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்க முடியும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில்(28) நடைபெற்ற செளபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அரசாங்க அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய நடைமுறைப்படுத்தப்படுகின்றது.திருகோணமலை மாவட்டத்தில் 10 கிராமங்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம் அரச அனுசரனையில் தொழில் முயற்சிகளை ஆரம்பித்து சிறந்த தொழில் முயற்சியாளர்களாக மக்களை மாற்ற முடியும். இத்திட்டத்தை சிறப்பான திட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் மாற்றி ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமைய செயற்பட அனைவரும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தேசிய ரீதியாக 500 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. சமுர்த்தி பெறும், சமுர்த்தி பெறாத வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தாம் மேற்கொள்ளும் தொழில் முயற்சியை மேலும் வலுப்படுத்தி அல்லது புதிய ஆக்கபூர்வமான நடைமுறைக்கு சாத்தியமான தொழில் முயற்சிகளை ஏற்படுத்தி அவர்களை வருமானம் ஈட்டக்கூடியவர்களாக மாற்றியமைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்ப்பதே இதன் மூல நோக்கமாக அமைவதாக செளபாக்ய அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த குணரத்ன இதன்போது தெரிவித்தார்.
குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள முறைமை உட்பட பல விடயங்கள் இதன்போது பணிப்பாளர் நாயகத்தினால் உரிய உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் செளபாக்ய அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் பிரதீப் விக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. கே.பரமேஸ்வரன், பிரதேச செயலாளர்கள் ,துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment