முடிவை திரும்ப பெற பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல் !
சென்னை : தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நான்கு மாத காலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக தற்காலிக அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசின் முடிவு துரதிருஷ்டவசமானது, மக்கள் நலனுக்கு விரோதமானது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி தெரிவித்திருப்பதாவது,
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகள் கூட்டத்தில், திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு நான்கு மாதங்கள் இடைக்கால அனுமதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ள செய்தி தூரதிருஷ்டவசமானது. மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி அவர்களின் உயிர்களையும் காவு வாங்கிய ஒரு நிறுவனம், பின்வாசல் வழியாக மீண்டும் தனது வேலையை தொடங்குவதற்கு இந்தக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பா.ஜ.க. என கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தை மேற்கொண்டிருப்பது அவர்களுக்கு மக்கள் நலனை விட கார்ப்பரேட் நலனே முக்கியமானது என்பதை காட்டுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு அறிவிப்புகள்தான். ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கண்காணிப்பில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டதும், அது எவ்வாறு செயல் பட்டது என்பதும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் தேவை தவிர்க்க முடியாதது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆக்ஸிஜன் தயாரிக்க பல்வேறு மாற்று வழிகள் இருக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தமிழக அரசின் முடிவு ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே மக்களின் வாழ்வாதாரத்திற்கும், சுகாதாரத்திற்கும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு, ஆக்ஸிஜன் தேவையை காரணம் காட்டி தமிழக அரசு வழங்கியுள்ள தற்காலிக அனுமதியை உடனடியாக ரத்து செய்து மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. மேலும் இது போன்ற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களில் மக்களுடன் இணைந்து செயல்படும் அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளையும், சுற்றுச்சூழல் அமைப்புகளையும் அரசாங்கம் இதுபோன்ற கூட்டங்களுக்கு அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment