சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ விவகாரம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்க நடவடிக்கை எடுக்க கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த மூன்று நாட்களாக அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் முன்னின்று களப்பணியாற்றிவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் உட்பட இளைஞர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இந்த போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் அடுத்தகட்டமாக சாலைமறியல் போராட்டம் நடத்த உள்ளதாவும், அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளை பெற்றுத்தருவதாக எங்களை ஏமாற்றுவதாகவும் அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை அவ்விடத்திலையே போராட்டத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கேட்டு இங்கு அமர்ந்திருக்கும் யாரும் அரசியலாதாயம் தேட வந்தவர்கள் இல்லை என்றும். எங்கள் பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த போராட்டம் தொடர்பில் வாய்க்குவந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். அதிகாரத்தில் இருந்தபோது இந்த ஊருக்கு எதையும் செய்யாத அவருக்காகவும் சேர்த்தே தான் நாங்கள் போராடுகிறோம். அவர் ஊரின் அபிவிருத்தி தொடர்பில் வித்தியாசமான பார்வையை கொண்டுள்ளார். இறந்த சவத்துக்கு உயிர்கொடுக்க நாங்கள் முனைவதாக எங்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். மக்கள் மீது நம்பிக்கையும் ஊர்மீது அக்கறையும் கொண்டவராக அவர் இருந்தால் இந்த போராட்ட கூடாரத்துக்கு அவரை கலந்துகொள்ள அழைக்கிறோம். வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு அறிக்கைவிடாமல் எங்களுடன் இணைந்து போராட சகல அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும் என்பதுடன் இது ஒருசாராரின் பிரச்சினையாக நோக்காமல் ஏழைமக்கள் வளர்த்த இந்த போக்குவரத்து சபையின் டிப்போவை காப்பாற்ற சகல மக்களும் ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்த இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களில் நள்ளிரவுகளை தாண்டியும் இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதையும் மூன்றாவது நாளாகிய இன்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு துளியளவும் இல்லாதுள்ளதையும் மக்களின் ஆதரவு மந்தகதியில் உள்ளதையும் அவதானிக்க முடிவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment