நீங்கள் அழகுக் கலைக்காக பயன்படுத்தும் சருமப் பூச்சுகளை கொள்வனவு செய்கின்ற போது அது இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்தின் அனுமதி பெற்றுள்ளதா என்பதனை அவதானித்துக் கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சாதாத் தெரிவித்தார்.
கல்குடா தொகுதி சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிகையலங்கார தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையயாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்ததும் பேசுகையில்,
சிகையலங்கார நிலையங்களில் எவ்வாறான சருமப் பூச்சுகள் மற்றும் இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்த வேண்டும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை உங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. அதற்கமைய நீங்கள் குறித்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான சருமப் பூச்சுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி அது இலங்கை இறக்குமதியாளர்களின் ஏதாவது முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும்.
இலங்கையின் தரக்கட்டளைக்கு அமையாமல் இவ்வாறான சருமப் பூச்சுகள் மற்றும் இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்தும் போது அவை பல்வேறு விதமான தோல் வியாதிககளை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
எனவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைத் தவிர்த்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அனைவரும் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் - என்றார்.
0 comments :
Post a Comment