துணிச்சல், ஆளுமை நிறைந்த கே.ஏ.பாயிஸின் திடீர் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பாகும்;-கல்முனை முதலவர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு



அஸ்லம் எஸ்.மௌலானா-
முஸ்லிம் சமூகத்திற்கான துணிச்சல் நிறைந்த குரலாகவும் ஆளுமையாகவும் திகழ்ந்த புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் திடீர் மறைவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபத் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

நண்பர் பாயிஸின் திடீர் மறைவுச் செய்தி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மிகவும் சாந்தமான ஒரு சமூகப் போராளியை இழந்து வேதனையடைகின்றோம். சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறையவே இருக்கின்ற நிலையில், அவர் எம்மை விட்டும் பிரிந்து சென்றிருப்பதானது ஏற்க முடியாத செய்தியாக இருப்பினும் இறைவனது நாட்டத்தை நாம் பொருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப காலப் போராளிகளில் ஒருவரான நண்பர் கே.ஏ.பாயிஸ், தனது மாணவப் பருவத்திலேயே கட்சியில் இணைந்து, பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் நம்பிக்கைக்குரிய சீடராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

அன்றைய கால கட்டத்தில் தேசியக் கட்சிகளில் பயணித்திருந்த புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அறிமுகப்படுத்தி, இக்கட்சியின் கீழ் அவர்களை அணிதிரட்டியதில் பெரும்பங்கு வகித்தவர் கே.ஏ.பாயிஸாவார். அத்துடன் நின்று விடாமல் நாடு முழுவதும் கட்சியை வளர்த்தெடுப்பதில் ஓர் இளம் போராளியாக முன்னின்று உழைத்துள்ளார். கட்சிக்கான அவரது அர்ப்பணிப்பை மதித்து, பெருந்தலைவர் அஷ்ரபினால் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்ட்டதுடன் புத்தளம் நகர சபையின் கட்சி சார்பான முதலாவது நகர பிதாவாக அழகுபார்க்கப்பட்டிருந்தார்.

அக்காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளை புத்தளம் மாவட்டத்தில் குடியேற்றி, அடைக்கலம் வழங்குவதற்கு மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து பெரும்பங்காற்றியிருந்தார். அவ்வாறே முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதிகளில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் புத்தளம் மாவட்ட மக்களுக்கும் ஏனைய அப்பகுதிகளுக்கும் அபிவிருத்திப் பணிகள் பலவற்றை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.

பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எப்போதும் எவருக்கும் அஞ்சாமல் மிகவும் துணிச்சலாக குரல் எழுப்பி வந்த ஓர் அரசியல் தலைமையாக அவர் செயற்பட்டு வந்தார். அவ்வாறே மாற்று இன அரசியல் தலைமைகளுடன் நற்புறவைப் பேணி, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் முனைப்புக்காட்டி வந்திருக்கிறார்.

நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் நண்பர் பாயிஸின் இழப்பு என்பது புத்தளம் மாவட்ட மக்களுக்கு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது- என்று கல்முனை முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :