தனிமைப்படுத்தில் சட்டத்தை மீறி அட்டன்- வட்டவளை வெலிஓயா தோட்டத்தில் ஒன்று கூடிய குற்றச்சாட்டில் 12 தோட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த தோட்டத்தில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் கடந்த 15 ஆம் திகதி அந்த தோட்டம் தனிமைப்படுத்தல் நிலைமையிலிருந்து விடுவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
இதன்போது தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் சிலரை தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்குள் வைத்து பூட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆகவே இதற்கு எதிராக தோட்ட நிர்வாகம் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதியின்றி காரியாலயத்திற்குள் பிரவேசித்தமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, ஊழியர்களை சிறை வைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 comments :
Post a Comment