மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு பகுதியில் இன்று புதன்கிழமை சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட பதினான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதினான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தல் இடம்பெற்று வரும் நிலையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வாகரை ஓமடியாமடு பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள எட்டு உழவு இயந்திரம் மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆறு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகள் பதினான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகரை ஓமடியாமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிடைத்த தவலையடுத்து மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி.பண்டார தலைமையில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு உதவி பொலிஸ் பரிசோதகர் எம்.பிரதீப், வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஊழல் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தயான் ராஜகருணா, குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment