ஆப்கானில் என்ன நடக்கிறது ? சோவியத்தின் நிலை அமெரிக்காவுக்குமா ? தாலிபான் – நேட்டோ 20 வருட போரில் வென்றது யார் ?



முகம்மத் இக்பால்-
தோல்வியடைந்த ஆக்கிரமிப்பு இராணுவத்தினர், இனிமேலும் தங்களால் வெற்றிபெற முடியாதென்ற நிலையில், போர்க் களத்தினை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதென்றால், தங்களுக்கு எதிராக போரிடுகின்ற கெரில்லாக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியபின்பே வெளியேறுவார்கள்.

அவ்வாறு போராளிகளுடன் உடன்பாடு காணாமல் போர் களத்திலிருந்து வெளியேறும்போது போராளிகளின் மூர்க்கமான தாக்குதல்களை எதிர்கொள்வதுடன், பலத்த உயிர் இழப்புக்களுடன், கனரக ஆயுத தளபாடங்களையும் போராளிகளிடம் பறிகொடுத்துவிட்டு பெருத்த அவமானத்துடன் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

சோவியத் ரஷ்ய படையினர் 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்தபின்பு அங்கு ஒன்பது வருடங்கள் நடைபெற்ற போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக போராளிகள் இயக்கமான முஜாஹிதீன்களோடு 1988 இல் சமாதான ஒப்பந்தம் செய்துவிட்டு 1989 இல் சோவியத் ரஷ்யாவின் இறுதிப்படைப்பிரிவு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது

அதுபோலவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது இருபது வருடங்களாக ஆப்கானிஸ்தானில் போரிட்டு வருகின்ற தங்கள் எதிரியான தாலிபான் இயக்கத்துடன் கட்டார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் தலைநகர் தோஹாவில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த 2020 இல் அமெரிக்கா நடாத்தியது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் நடாத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்காக முதலில் துருக்கியை அமெரிக்கா நாடியது. துருக்கி படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ நாடு என்பதனால், துருக்கியை தாலிபான்கள் நிராகரித்ததுடன், கட்டாரின் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டனர்.

அமெரிக்காவில் ஜோ வைடன் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தாலிபான்களுடன் கடந்த அரசாங்கத்தில் செய்துகொண்ட உடன்பாடுகளுக்கு அமைவாக 2021 செப்டம்பர் 11 க்கு முன்பாக அமெரிக்கா தலைமையிலான அனைத்து நேட்டோ படையினர்களும் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த உடன்பாட்டுக்கு அமைவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர்கள் தற்போது கட்டம் கட்டமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகின்றார்கள்.

தாலிபான் இயக்கமானது ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகும். அதனால் இவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லை. ஆனால் தனது உயிர் நன்பரான அல்-கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின் லேடனுக்காகவே தாலிபான்கள் அதிக விலை கொடுத்ததுடன் ஆட்சியையும் இழந்தனர்.

2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவின் நியோர்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதவிட்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா இயக்கமே காரணம் என்றும், அதன் தலைவர் ஒசாமா பின் லேடன் தாலிபான்களின் பாதுகாப்புடன் ஆப்கானிஸ்தானில் உள்ளதாகவும், அவரை விசாரிப்பதற்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாலிபான்களை அமெரிக்கா வலியுறுத்தியது.

ஆனால் இந்த தாக்குதலுடன் ஒசாமா பின் லேடனுடன் உள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்களை சமர்ப்பிக்காதவரையில் ஒசாமாவை விசாரிக்க முடியாது என்று அமெரிக்காவின் கோரிக்கையை தாலிபான்கள் நிராகரித்தனர்.

தாலிபான் இயக்கத்தினர் ஈமானில் உறுதி இல்லாத அரசியல்வாதிகளாக இருந்திருந்தால், தங்களது ஆட்சியை தக்கவைப்பதற்காக அமெரிக்காவுடன் திரை மறைவில் டீல் பேசிக்கொண்டு அமெரிக்கா வழங்குகின்ற அற்ப சலுகைகளை பெற்றுவிட்டு ஒசாமாவை ஒப்படைத்திருப்பார்கள். இதனைத்தான் முஷார்ரப் செய்தார். ஆனால் ஈமானில் பலம் உள்ளதன் காரணமாக நயவஞ்சக அரசியலை தாலிபான்கள் செய்யவில்லை.

ஒசாமாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்ததன் காரணமாகவே 2001 இல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்-கொய்தா மற்றும் தாலிபான்களின் நிலைகள் மீது வான் தாக்குதலை நடாத்தியபின்பு தரை தாக்குதல் மூலமாக ஆப்கானிஸ்தானை கைப்பேற்றினார்கள் என்று கூறப்படுகின்றது.

ஆனாலும் ஆப்கானிஸ்தானை கைப்பேற்றுவதற்கான வேறு பல காரணங்களும் அமெரிக்காவிடம் இருந்தது.

நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறி சில வருடங்களின் பின்புதான் அங்கு தாலிபான்களின் கை ஓங்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்க படைகள் வெளியேற ஆரம்பிக்க முன்பே அங்கு நடைபெறுகின்ற தாலிபான்களின் இராணுவ நகர்வுகள் அமெரிக்காவை மட்டுமல்ல முழு உலகுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மிகுதி நாளை தொடரும்............
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :