அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவு தின நிகழ்வை இணையவழி (Zoom) ஊடாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளரும், ஓய்வுபெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளருமான பொறியியலாளர் என்.ரீ.எம்.சிராஜூடீன் தெரிவித்தார்.
பாடசாலையின் 75வது ஆண்டு தினம் எதிர்வரும் 2021.06.10 ஆம் திகதி என்பதால் குறித்த தினத்தில் அதனை இணைய வழி (Zoom) ஊடாக நடாத்தி அந்த நாளை நினைவு கூறவேண்டும் என பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்துக்கமைவாகவே இந்நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. குறிப்பாக நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சீரான பின்னர் இந்த 75வது ஆண்டை மிகப் பிரமாண்டமான முறையில் நடாத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இணையவழி நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.பி.முஜீன் தலைமையில் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.காசிம், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் ஆகியோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்வின்போது, பாடசாலையின் வரலாறு பற்றியும், அதன் வளர்ச்சிக்காக பாடுபட்ட மற்றும் மரணித்த உள்ளங்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காகவும், பாடசாலையின் வளர்ச்சிக்காகவும், குறிப்பாக உலக நாட்டை ஆட்டிப்படைத்து மனித உயிர்களை காவு கொள்ளும் கொடிய கொரோனா தொற்று நோயிலிருந்து நாம் எல்லோரும் விடுபட வேண்டியும், நாட்டில் வாழும் சகல இன மக்களும் இலங்கையர் என்ற ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று அன்றைய தினம் விஷேட துஆப் பிரார்த்தனை ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அன்றைய தினம் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளங்களும் பாடசாலையின் வளர்ச்சிக்காகவும், உலக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றிலிருந்து நாம் எல்லோரும் விடுபட வேண்டியும் விஷேட துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை பாடசாலையின் உயர்ச்சிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும், பாடசாலையின் அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும், குறிப்பாக மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.ஜி.நிஸாமுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
0 comments :
Post a Comment