சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைய '100 நகரங்கள்' என்ற வேலைத்திட்டத்தில் யாழ்.மாவட்டத்தின் கொடிகாமம், நாவற்குழி, நெல்லியடி, வேலணை, மருதனார்மடம், சாவகச்சேரி ஆகிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளோடு நடாத்திய தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் குறித்த 6 நகரங்களும் அவரால் முன்மொழியப்பட்டிருந்தன.
மேலும் இவ்விடயம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலொன்று யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும் நகர அபிவிருத்தி கரையோரப்பாதுகாப்பு கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் கடந்த மே மாதம் 10ம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.
அதன்படி இதற்குரிய திட்ட முன்மொழிவுகள் குறித்த அமைச்சின்கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு பிரதேசத்தை பல் பரிமாண நகரமாக ஆக்குவதற்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.
மேலும் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களைக் கொண்டுள்ள கொழும்பு, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களையும் முக்கிய வணிக நகரங்களாக்கி, அவை தேசிய மற்றும் சர்வதேச வணிக வலையமைப்பின் மையங்களாகவும் இணைக்கப்படவுள்ளன.
இதன்படி நாட்டின் பல பரிமாண வணிக நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் உருவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment