மறுதலைத் திரட்சியால் புரட்டப்படும் இஸ்ரேலிய அரசு..!



சுஐப் எம்.காசிம்-

"யூதர்களின் இராணுவ மூளை" என்று வர்ணிக்கப்பட்ட இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு, பதவியைத் துறக்குமளவுக்கு அந்நாட்டு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 12 வருடங்களாக ஆட்சியிலிருந்த இவரது லிகுட் கட்சி, கடந்த சில வருடங்களாக "கடையாணி கழண்ட வண்டி" போன்றுதான் அரசியலில் பயணிக்க நேர்ந்தது.120 எம்.பிக்களுள்ள இஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் (நெஸற்), இவர் பதவியேற்ற 12 வருடங்களாக எந்தக் கட்சிகளும் பெரும்பான்மை (61) பலத்தைப் பெறாததால், தொங்கரசாங்கமே ஆட்சியில் நிலைத்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களில் நான்கு தேர்தல்கள் நடைபெறுமளவுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பங்களை சகல கட்சிகளும் இழந்திருந்தன. இருப்பினும், லிகுட் கட்சி வசம் ஆட்சி செல்லுமளவுக்கு பென்ஜெமின் நெதன்யாஹுவின், இரும்புப் பிடிக்குள் இஸ்ரேலிருந்திருக்கிறது. பாராளுமன்ற (நெஸற்) பெரும்பான்மையை நிரூபிக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பென்ஜெமின் நெதன்யாஹுவின், இராணுவ மூளைக்கு முன்னால், ஏனைய அரசியல் மூளைகள் தோற்றேபோய்விட்டன.

இதனால்தான், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷெரோனின் மறைவுக்கு பின்னர், தொடர்ந்து மூன்று தவணைகள் இவரால் பிரதமராக வர முடிந்துள்ளது. பெரும்பான்மையைப் பெறுவதற்கான மக்கள் ஆணையைப் பெறத் தவறினாலும், ஏனைய கட்சிகளை வளைத்துப் பிடிக்கும், ராஜ்ய வியூகத்தில் லிகுட் கட்சிக்கு ஆட்சியில் நிலைக்க முடிந்தது. இப்போது, வியூகம் பிழைத்து ஆட்சியையும் இழந்திருக்கிறது இக்கட்சி.

சாதாரண நடைமுறை விடயங்களிலும் கூட, இராணுவத் தீர்வையே விரும்பியிருந்த பென்ஜெமின் நெதன்யாஹுவின் போக்குகளில், கூட்டுக் கட்சிகளுக்கு ஏற்பட்ட மனக் கசப்புகள்தான் இக்கட்சிகளை இவரிடமிருந்து வெளியேற்றியுள்ளன. மட்டுமன்றி பாரிய போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ள ஒருவரை, தொடர்ந்தும் பிரதமராக வைத்திருப்பது, இஸ்ரேலின் எதிர்கால நலன்களுக்கு அச்சுறுத்தலாகலாம் என்ற அச்சமும், கூட்டுக் கட்சிகளை ஆட்கொண்டிருக்கலாம். அரசியல் அவதானிகளின் கருத்தும் இப்படித்தானுள்ளது.

இதுபோன்ற பல நலன்களின் மறுதலைத் திரட்சியாகவே, இஸ்ரேலின் பழைய அரசாங்கம் புரட்டப்பட்டு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரவிருக்கிறது. யூத அரசாங்கத்தில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், அரபு இஸ்லாமியவாத கட்சியும் இணைந்துள்ளதால், இதன் ஆயுளும் கெட்டியானதாக இருக்கப் போவதில்லை என்கின்றனர் சிலர்.


இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பதவி விலகிச் செல்லும் பிரதமரின் கருத்துக்களும் இஸ்ரேலியத் தேசியவாதிகளை சிந்திக்கத் தூண்டாமலிருக்காது. "யூதர்களின் நலன், பாதுகாப்பு, எதிர்கால தலைநகர் அனைத்தும் அரபுக்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்". ஆனால், புதிய அரசாங்கத்துக்கு உடன்பட்டுள்ள எட்டுக் கட்சிகளும் மூன்று விடயங்களைத் தவிர ஏனைய பிரதானமானவற்றில் இணங்கியதாக தெரியவில்லை. பதவியிலிருந்து பென்ஜெமின் நெதன்யாஹுவை அகற்றுதல், சட்டவிரோத நிர்மாணப் பணிகளை நிறுத்துதல், கஞ்சாவை சட்டமூலமாக்கல் ஆகிய மூன்று விடயங்கள்தான் முரண்பாடுகளின்றி முடிந்துள்ளன. ஏனையவைகளில் ஏற்படச் சாத்தியமான சர்ச்சைகள்தான் இந்த அரசின் ஆயுளையும் தீர்மானிக்கலாம்.


கிழக்கு ஜெரூசலம்தான் இஸ்ரேலின் எதிர்காலத் தலைநகரா? அல்லது தற்போது இருப்பதைப் போல டெல்எவியுவா? என்பதிலும், சட்டவிரோத நிர்மாணப் பணிகள் என்று ஷரத்துச் சொல்லும் கட்டடங்கள் உள்ள பகுதிகள் குறித்து தெளிவான வரையறைகள் இல்லாதுள்ளமையும், உடன்படிக்கையில் உள்ள குறைபாடுகளாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால், இஸ்ரேலிலுள்ள இருபது வீத முஸ்லிம்களில் அதிகமானோர் புதிய அரசையும் நம்பத் தயாராக இல்லை.

தனி நபர் ஒருவர், அதிகாரத்திலிருந்து அகற்றப்படுவதால், காஸா, பலஸ்தீன் மக்களுக்கு எந்தப்பலனும் இல்லையே!அகண்ட இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்புச் சிந்தனை மாறாத வரை, ஆட்சியாளர்கள் மாறுவதிலும் அர்த்தமில்லை என்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிலரின் வார்த்தைகள் போதும், இஸ்ரேலின் விஸ்வரூபத்தைப் புரிந்துகொள்ள. 'வலது, இடது, மத்தியசாரி என 12 அரசாங்கங்களைப் பார்த்துவிட்டோம். ஆட்களோ அல்லது ஆசனங்களோ மாறுவதில் அர்த்தமில்லை, மாறாக அகண்ட இஸ்ரேல் என்ற ஆட்சியாளர்களின் மனநிலைகளில் மாற்றம் வரவே பிரார்த்திப்பதாகத்' தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்கையில், புதிய பிரதமராக வரவுள்ள மையவாத யஷ்அடிட் கட்சியின் தலைவர் நட்டாலி பென்னட், புதிய அரசின் பார்வைகளைப் பட்டியலிட்டுள்ளார். கைத்தொழில்துறை, வியாபாரம் மற்றும் காஸா, இஸ்ரேல் கடவைச் சந்திகளை அதிகரிப்பதுடன், கடவைச் சந்திமுனைகளில் ஏற்கனவே போடப்பட்டுள்ள பாதுகாப்புக்களை தளர்த்தல் உள்ளிட்ட விடயங்களையும் விளக்கியுள்ளார். கடவைச் சந்திகளின் பாதுகாப்பைத் தளர்த்தும் ஆலோசனை என்பது, காஸா மக்களைப் பொறுத்தவரை ஆறுதலாகத்தான் நோக்கப்படுகிறது. இதனால்தான், இந்தப் புதிய அரசில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் இணைந்துள்ள அரபு இஸ்லாமியவாதக் கட்சியின் தலைவர் அன்ஸார் அப்பாஸை "ஆறுதலுக்கான பாதையைக் காட்டியவர்" எனவும் சிலர் வர்ணிக்கின்றனர்.

கூட்டுக் கட்சிகளின் உடன்படிக்கையின் பிரகாரம் 2023 மார்ச் மாதமளவில், பிரதமர் பதவி சுழற்சி முறையில் ஏனைய பங்காளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையிலே, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பாராளுமன்ற (நெஸற்) பலத்தை நிரூபித்து, நட்டாலி பென்னட் தலைமையிலான மையவாத யஷ்அடிட் கட்சி, ஜனாதிபதி ரியுவின் ரில்வினுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :